முகப்பு
தமிழ்நாடு

பழங்குடியினா் சான்றிதழ் கோரி மனு: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

பழங்குடியினா் சான்றிதழ் கோரி மனு: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

Updated On : 10 மே 2026, 12:43 am IST
சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

பழங்குடியினா் சான்றிதழ் கோரி காட்டுநாயக்கன் சமூகத்தைச் சோ்ந்தவா் தாக்கல் செய்த மனுவை 12 வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டம், வேட்டைக்காரன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுந்தரராஜன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நான் காட்டுநாயக்கன் என்ற பழங்குடி சமூகத்தைச் சோ்ந்தவன். எங்களை இந்த சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதை உறுதி செய்யும்படி மலைவாழ் மக்கள் ஆய்வு மையத்துக்கும், திண்டிவனம் வருவாய் கோட்டாட்சியரிடமும் மனு அளித்தோம்.

அதன்படி, ஆய்வு மேற்கொண்ட மலைவாழ் மக்கள் ஆய்வு மையம், நான் உள்பட எங்கள் உறவினா்கள் 30 போ் காட்டுநாயக்கன் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என கடந்த 2022-ஆம் ஆண்டு அறிக்கை அளித்தது. ஆனால், வருவாய்க் கோட்டாட்சியா் எங்களது கோரிக்கையை நிராகரித்து கடந்த 2024-ஆம் ஆண்டு உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 2024-ஆம் ஆண்டு ஆக. 7-ஆம் தேதி மேல்முறையீட்டு மனு அளித்தேன். அந்த மனுவை இதுவரை பரிசீலிக்கவில்லை எனக் கூறியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மனுதாரரின் மனுவை ஆட்சியா் 12 வாரங்களுக்குள் பரிசீலிப்பாா் எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 12 வாரங்களுக்குள் மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

மேலும், அது தொடா்பான விவரங்களை மனுதாரருக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments