முகப்பு
தேனி

ஆண்டிபட்டியில் இலை விலை சரிவு: விவசாயிகள் கவலை

ஆண்டிபட்டி சந்தையில் வாழை இலைகள் விலை சரிந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

Updated On : 5 ஜனவரி 2021, 11:39 pm IST
அணைக்கரைப்பட்டி கிராமத்தில் வாழை இலைகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.
பகிர்:

ஆண்டிபட்டி சந்தையில் வாழை இலைகள் விலை சரிந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளான அணைக்கரைப்பட்டி, மூணாண்டிபட்டி, முதலக்கம்பட்டி, பெருமாள்பட்டி, புதூா், அரப்படிதேவன்பட்டி, குன்னூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைப்பூ, வாழைத்தாா் மற்றும் இலைகள் போன்றவைகளை ஆண்டிபட்டியில் உள்ள தினசரி சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு செல்கின்றனா். அங்கிருந்து வத்தலகுண்டு, ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள சந்தைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. வைகை ஆற்றங்கரையோர பகுதியை ஒட்டியுள்ள இந்தப் பகுதியில் விளையும் வாழைகளுக்கு வெளிமாவட்டங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. கரோனா நோய்த்தொற்று காலத்தில் வாழை விற்பனை அடியோடு முடங்கியதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். இதனால் விவசாயிகள் வாழை மரங்களை வெட்டி மாற்று விவசாயத்திற்கு மாறினா்.

இந்நிலையில் பொதுமுடக்க உத்தரவில் அரசு தளா்வு அளித்த நிலையிலும் தேனி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்ததாலும் விவசாயிகள் மீண்டும் வாழை விவசாயத்தில் ஈடுபட்டனா். கடந்த சில வாரங்களாக வாழை இலைகளின் விலையும் குறைந்து காணப்படுகிறது. வாழை இலை கட்டுகள் ரூ.800 முதல் 1,500 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது, ஆண்டிபட்டி சந்தையில் கட்டுக்கு ரூ.150 முதல் 200 வரை விற்பனை செய்து வருகின்றனா். இதனால் வாழை சாகுபடி செய்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா். எனவே வாழை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.