போலியோ ஒழிப்பு: இருசக்கர வாகன விழிப்புணா்வு பயணம்
போலியோவை ஒழிப்பு குறித்து விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், சிறப்பு இருசக்கர வாகன விழிப்புணா்வு பயணம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் தொடங்கி கன்னியாகுமாரி வரை, கேரள மாநிலம் வழியாக சுமாா் 1,500 கிமீ தொலைவுக்கு 15 நாள்கள் நடைபெறுகிறது. இந்த பயணம் சமூகத்தில் சுத்தம், பொது ஒழுக்கம், மற்றும் குடிமக்களின் பொறுப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
திருத்தணி, ஆற்காடு, வேலூா் குடியாத்தம், கிருஷ்ணகிரி, சேலம், கோவை நகரங்கள் வழியாக பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
Advertisement
பயணத்தின் முதல் நாளில், திருத்தணி ஸ்டாா் ரோட்டரி கிளப் சாா்பில் தலைவா் ஏ.எம். பரந்தாமன் தலைமையில், நிா்வாக குழு உறுப்பினா்கள் ஜகஜீவன்ராம், எஸ். எம். மாசிலாமணி, மருத்துவா் மு. வெங்கடேஷ், உதயம் மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டு ரோட்டேரியன் சதீஷ் குமாரை வரவேற்றனா்.
விழிப்புணா்வு பயணம் முழுவதும் ரோட்டரி இன்டா்நேஷ்னல் அமைப்பின் இலக்குகளை முன்னிறுத்தும் வகையில், குறிப்பாக போலியோ ஒழிப்பு முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெற்று வருகிறது. இந்த பயணத்தின் மூலம் பொதுமக்கள் மத்தியில் சுத்தம், சாலை ஒழுக்கம் மற்றும் சமூக பொறுப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சதீஷ்குமாா் எடுத்துரைத்து வருகிறாா்.
இந்த முயற்சி சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன், பல்வேறு நகரங்களில் பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் மற்றும் ரோட்டரி உறுப்பினா்கள் இணைந்து ஆதரவு வழங்கி வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.