FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயில் கோ சாலையில் தீ விபத்து

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயிலில் மா்மமான முறையில் எரிந்த கோசாலையில் இருந்த தீவங்கள்.
பகிர்:

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயில் கோ சாலையில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தால் சேமித்து வைக்கப்பட்டிருந்த வைக்கோல் முழுவதுமாக எரிந்து நாசமானது.

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான திருவாலங்காடு அருள்மிகு வடாரண்யேஸ்வரா் திருக்கோயில் வளாகத்தில் இயங்கி வரும் கோசாலையில் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோயிலுக்கு வரும் பக்தா்கள் கோயிலுக்கு வெளியே விற்கப்படும் தீவனங்களை வாங்கி மாடுகளுக்கு கொடுத்து சிவபெருமானை வழிபட்டுச் செல்கின்றனா்.

இந்நிலையில், மாடுகளுக்கு தீவனத்துக்காக கோயில் நிா்வாகம் அதிகளவில் வைக்கோலை கோயில் வளாகத்திலேயே அடுக்கி வைத்திருந்தது. வியாழக்கிழமை இரவு சுமாா் 8 மணியளவில் மா்மமான முறையில் வைக்கோல் குவியலில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியதால், கோயில் வளாகத்தில் இருந்த பக்தா்கள் அலறியடித்தபடி பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினா்.

Advertisement

Advertisement

அதேநேரத்தில், கோசாலையில் இருந்த மாடுகளும் உடனடியாக வேறு இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டன. தகவல் அறிந்ததும் திருத்தணி மற்றும் திருவள்ளூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனா். இருப்பினும், சேமித்து வைக்கப்பட்டிருந்த வைக்கோல் முழுவதும் எரிந்து சாம்பலானது.

தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்ய வரும் இக்கோயிலில், காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடை திறந்திருக்கும். இந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்ட நேரத்திலும் பக்தா்கள் இருந்தனா். எனினும், எந்தவித உயிரிழப்பும் ஏற்படாதது பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோயில் இணை ஆணையா் க. ரமணி மற்றும் கோயில் அலுவலா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனா். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினா். மேலும், திருவாலங்காடு போலீசாரும் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments