முகப்பு
வணிகம்

தங்க இ.டி.எஃப். திட்டங்களிலிருந்து ரூ.280 கோடி விலக்கல்

கோல்டு எக்சேஞ்ச்-டிரேடட் ஃபண்ட்ஸ் எனப்படும் தங்க இ.டி.எஃப். திட்டங்களிலிருந்து நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான கால அளவில் முதலீட்டாளர்கள்

Updated On : 26 டிசம்பர் 2018, 12:44 am IST
பகிர்:


கோல்டு எக்சேஞ்ச்-டிரேடட் ஃபண்ட்ஸ் எனப்படும் தங்க இ.டி.எஃப். திட்டங்களிலிருந்து நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான கால அளவில் முதலீட்டாளர்கள் ரூ.280 கோடி மதிப்பிலான தொகையை திரும்பப் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது:
தங்கம் தொடர்பான 14 வகையான இ.டி.எஃப். திட்டங்களிலிருந்து கடந்த 2017-18 நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் (ஏப்ரல்-
நவம்பர்) முதலீட்டாளர்கள் ரூ.511 கோடியை திரும்பப் பெற்றனர். அதேசமயம், நடப்பு நிதியாண்டில் இதே கால அளவில் முதலீட்டாளர்கள் ரூ.280 கோடி மதிப்பிலான தொகையை விலக்கியுள்ளனர்.
சந்தைகள் ஏற்ற இறக்கம் நிறைந்ததாக காணப்பட்ட போதிலும் பங்குகளில் முதலீடு மேற்கொள்வதில் முதலீட்டாளர்கள் கொண்டுள்ள ஆர்வத்தையே இது வெளிக் காட்டுகிறது. 
தங்க சேமிப்பு திட்டங்களிலிருந்து முதலீட்டாளர்கள் கணிசமான தொகையை வெளியே எடுத்ததையடுத்து அத்தகைய திட்டங்களில் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு நவம்பர் மாத இறுதி நிலவரப்படி ரூ.4,385 கோடியாக குறைந்துள்ளது. கடந்தாண்டு இதே கால அளவில் காணப்பட்ட அளவான ரூ.4,922 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 11 சதவீதம் குறைவாகும் என அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாகவே தங்க இ.டி.எஃப் திட்டங்களுக்கான மவுசு குறைந்து கொண்டே வருகின்றது. இதன் காரணமாக ஆண்டுக்காண்டு படிப்படியாக அத்தகைய திட்டங்களிலிருந்து கணிசமான அளவில் முதலீடு வெளியேறி வருகிறது.
அதனை நிரூபிக்கும் வகையில் கடந்த 2013-14 தங்க இ.டி.எஃப் திட்டங்களிலிருந்து ரூ.2,293 கோடி வெளியேறியது. 2014-15-இல் ரூ.1,475 கோடியும், 2015-16-இல் ரூ.903 கோடியும், 2016-17-இல் ரூ.775 கோடியும், 2017-18-இல் ரூ.835 கோடியும் வெளியேறியுள்ளது. கடந்த 2012-13-இல் தான் தங்க இ.டி.எஃப் திட்டங்கள் முதலீட்டாளர்களிடமிருந்து கடைசியாக ரூ.1,414 கோடியை ஈர்த்தன. அதற்கு பிறகான ஆண்டுகளில் அவர்கள் குறிப்பிட்ட அளவிலான தொகையை விலக்கிக் கொண்டே வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான கால அளவில் பரஸ்பர நிதி திட்டங்களில் ஒட்டுமொத்த அளவில் மேற்கொள்ளப்பட்ட நிகர அளவிலான முதலீடு ரூ.2.23 லட்சம் கோடி என பரஸ்பர நிதிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments