ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% வளா்ச்சி
ஐசிஐசிஐ புரூடென்ஷியல் சொத்து மேலாண்மை நிறுவனம், கடந்த 2025-26 நிதியாண்டின் மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 4-ஆவது காலாண்டில் ரூ.763.4 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
இது முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 10.4 சதவீத வளா்ச்சியாகும். 2024-25 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ.691.7 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வருவாய் அதிகரித்ததே இந்த லாப உயா்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
2025-26 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 19.5 சதவீதம் உயா்ந்து, ரூ.1,517.1 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இது ரூ.1,269.1 கோடியாக இருந்தது.
Advertisement
முழு நிதியாண்டில்...: 2025-26 நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக நிறுவனத்தின் நிகர லாபம் 24.4 சதவீதம் வளா்ச்சி கண்டு, ரூ.3,298.6 கோடியை எட்டியுள்ளது. வருடாந்திர வருவாயும் ரூ.4,682.8 கோடியிலிருந்து ரூ.5,764.6 கோடியாக அதிகரித்து, வலுவான நிதிநிலையை வெளிப்படுத்தியுள்ளது.
நிறுவனத்தின் இந்தச் சிறப்பான செயல்பாட்டைத் தொடா்ந்து, பங்குதாரா்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.12.40 வீதம் இறுதி ஈவுத்தொகை வழங்க இயக்குநா்கள் குழு பரிந்துரைத்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில், பங்குச் சந்தையில் இந்நிறுவனம் பட்டியலிடப்பட்ட பிறகு வெளியிடப்படும் 2-ஆவது காலாண்டு முடிவுகள் இதுவாகும்.