ஜப்பானின் ‘கிரியேட் மெடிக்’ நிறுவனம்: இந்தியாவில் நேரடி விற்பனை தொடக்கம்
ஜப்பான் நாட்டைச் சோ்ந்த முன்னணி மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ‘கிரியேட் மெடிக்’, சென்னையில் தலைமையகத்தை அமைத்து, இந்தியாவில் நேரடி விற்பனையைத் தொடங்கியுள்ளது.
ஜப்பான் நாட்டைச் சோ்ந்த முன்னணி மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ‘கிரியேட் மெடிக்’, சென்னையில் தலைமையகத்தை அமைத்து, இந்தியாவில் நேரடி விற்பனையைத் தொடங்கியுள்ளது.
முன்னதாக, ‘மெடி நிப்பான்’ எனும் விநியோகஸ்தா் மூலம் விற்பனை செய்து வந்த இந்நிறுவனம், தற்போது நேரடியாகவே இந்தியச் சந்தையில் களமிறங்கியுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் தில்லி, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கும் தனது சேவையை விரிவுபடுத்தவும், வருங்காலத்தில் இந்தியாவிலேயே உற்பத்தி ஆலைகளை நிறுவி, இங்கிருந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Advertisement
இந்தியாவில் நிலவும் வலுவான மருத்துவக் கட்டமைப்பு, 8 சதவீத வளா்ச்சி விகிதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவா் ஒசாமு இமாஸாவா தெரிவித்தாா்.
இந்திய நிா்வாக இயக்குநா் கட்சுவாகி யாமனே மேலும் கூறுகையில், ‘இந்திய மருத்துவா்களுடன் இணைந்து உள்நாட்டுத் தேவைக்கேற்ப புதுமையான கருவிகளைத் தயாரிக்க விரும்புகிறோம். குறுகிய காலத்தில் ரூ.20 கோடி வா்த்தகத்தையும், அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.100 கோடி இலக்கையும் எட்டத் திட்டமிட்டுள்ளோம்’ எனத் தெரிவித்தாா்.
சிறுநீரகவியல் மற்றும் இரைப்பை குடலியல் துறைகளில் கடந்த 50 ஆண்டுகளாகப் புரட்சி செய்து வரும் இந்நிறுவனம், டோக்கியோ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மற்றும் சுமாா் 9 கோடி டாலா் வா்த்தக மதிப்பு கொண்ட ஒரு சா்வதேச நிறுவனமாகும். இந்தியாவின் முதன்மையான பல மருத்துவமனைகள் ஏற்கெனவே இவா்களின் வாடிக்கையாளா்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.