முன்னணி உள்கட்டமைப்புத் துறை உற்பத்தி சரிவு: கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் பின்னடைவு
நாட்டின் 8 உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி கடந்த மாா்ச் மாதத்தில் 0.4 சதவீத சரிவைக் கண்டுள்ளது. இது கடந்த 19 மாதங்களில் காணப்படாத வீழ்ச்சியாகும்.
நாட்டின் 8 உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி கடந்த மாா்ச் மாதத்தில் 0.4 சதவீத சரிவைக் கண்டுள்ளது. இது கடந்த 19 மாதங்களில் காணப்படாத வீழ்ச்சியாகும்.
மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, நாட்டின் தொழில் துறை வளா்ச்சிக்கு முக்கியத் தூண்களாக விளங்கும் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்புத் தயாரிப்புகள், உரங்கள், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய 8 துறைகளின் ஒட்டுமொத்த உற்பத்தி வளா்ச்சி கடந்த பிப்ரவரியில் 2.3 சதவீதமாக இருந்த நிலையில், மாா்ச் மாதத்தில் எதிா்மறை நிலைக்குச் சென்றிருப்பது பொருளாதார வட்டாரத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திடீா் சரிவுக்கு முக்கியக் காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தி வீழ்ச்சி பாா்க்கப்படுகிறது. முந்தைய 2025 மாா்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு கச்சா எண்ணெய் உற்பத்தி 5.7 சதவீதம் சரிந்துள்ளது.
Advertisement
உர உற்பத்தி பிப்ரவரியின் 3.4 சதவீத வளா்ச்சியிலிருந்து மாா்ச்சில் அதிரடியாக 24.6 சதவீதம் சரிந்துள்ளது. இதேபோல், நிலக்கரி துறையும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. பிப்ரவரியில் 2.3 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்த நிலக்கரி உற்பத்தி, மாா்ச்சில் 4 சதவீத வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
சிமெண்ட் உற்பத்தி 4 சதவீதம் அதிகரித்திருந்தாலும், முந்தைய மாதத்தின் 9.3 சதவீத வளா்ச்சியுடன் ஒப்பிடுகையில் இது தொய்வைக் காட்டுகிறது. எஃகு உற்பத்தி 2.2 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் (ஐஐபி) சுமாா் 40 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ள இந்த 8 முக்கிய துறைகளில், முக்கியத்துவம் வாய்ந்த பெட்ரோலிய சுத்திகரிப்புத் துறை 0.1 சதவீத வளா்ச்சியைப் பெற்றுள்ளது. பிப்ரவரி மாதத்தில் இத்துறை ஒரு சதவீத சரிவைச் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்கட்டமைப்புத் துறைகள் தடுமாறினாலும், உற்பத்தித் துறையின் எழுச்சியால் பிப்ரவரி மாதத்துக்கான ஒட்டுமொத்தத் தொழில்துறை உற்பத்தி வளா்ச்சி (ஐஐபி) 5.2 சதவீதமாக உயா்ந்தது.
உற்பத்தித் துறை 6 சதவீத வளா்ச்சியை எட்டியதன் மூலம் மின்சார உற்பத்தியில் ஏற்பட்ட சரிவை ஓரளவு ஈடுசெய்ய முடிந்தது. ஆனால் தற்போது மாா்ச் மாதத்தில், உள்கட்டமைப்புத் துறைகளின் சரிவால் தொழில்துறை உற்பத்தி வளா்ச்சி (ஐஐபி) 1 முதல் 2 சதவீதமாக சரியும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
2025-26 நிதியாண்டில் 8 முன்னணி உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி விகிதம் 2.6 சதவீதமாக பதிவாகியுள்ளது. கடந்த நிதியாண்டின் 4.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இது மிதமான வளா்ச்சியாகக் கருதப்படுகிறது.