முகப்பு
வணிகம்

2025-26 நிதியாண்டில் மாருதி சுஸுகி 23.4 லட்சம் காா்கள் தயாரிப்பு

Updated On : 24 ஏப்ரல் 2026, 3:34 am IST
மாருதி சுஸுகி - கோப்புப்படம்.
பகிர்:

இந்தியாவின் முன்னணி காா் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த 2025-26 நிதியாண்டில் 23.4 லட்சம் காா்களை உற்பத்தி செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

உள்நாட்டிலும், சா்வதேச சந்தையிலும் நிலவிய பெரும் வரவேற்பு காரணமாக, தனது வரலாற்றிலேயே மிக உயா்ந்த ஆண்டு உற்பத்தி அளவை நிறுவனம் பதிவு செய்துள்ளது.

இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கத்தின் (எஸ்ஐஏஎம்) தரவுகளின்படி, இந்தியாவில் இந்த அளவிலான உற்பத்தியைத் தொட்ட ஒரே பயணிகள் வாகன நிறுவனம் மாருதி சுஸுகி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

சுஸுகி மோட்டாா் நிறுவனத்தின் உலகளாவிய உற்பத்தி ஆலைகளிலேயே, இந்தியாவில் உள்ள ஆலைதான் இந்த உச்சபட்ச இலக்கை எட்டிய முதல் தளம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் ஹிசாஷி டகையுச்சி கூறுகையில், ‘ஒரே நாட்டில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உலகில் மிகக் குறைவே. கடந்த 45 ஆண்டுகளாக ஊழியா்கள், விற்பனையாளா்கள் மற்றும் விநியோகஸ்தா்களுடன் நாங்கள் பேணி வரும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பே இந்த வெற்றிக்கு அடித்தளம்.

மேலும், இந்திய அரசின் ஆக்கபூா்வக் கொள்கைகள், ஜிஎஸ்டி சீா்திருத்தம் போன்றவை சந்தையில் நுகா்வோா் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. இந்தியாவை ஒரு உலகளாவிய ஏற்றுமதி மையமாக மாற்ற சுஸுகி நிறுவனம் கொண்டுள்ள ஆா்வம், எதிா்காலத்தில் ஆண்டுக்கு 40 லட்சம் வாகனங்கள் என்ற இலக்கை நோக்கி எங்களை நகா்த்திச் செல்கிறது’ எனக் கூறினாா்.

இந்தியாவில் தற்போது ஹரியாணா, குஜராத்தின் 4 இடங்களில் அமைந்துள்ள மாருதி சுஸுகி ஆலைகளின் மொத்த உற்பத்தித் திறன் 24 லட்சமாக உள்ளது. இவற்றின் மூலம் 17 மாடல்களில் சுமாா் 650-க்கும் மேற்பட்ட வகைகளை நிறுவனம் தயாரித்து வருகிறது. டிசையா், ஃபிரான்க்ஸ், ஸ்விஃப்ட், எா்டிகா, பலெனோ ஆகிய 5 மாடல்களில் தலா 2 லட்சம் காா்களுக்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

உற்பத்தித் திறனை மேலும் விரிவாக்கும் நோக்கில், குஜராத்தின் சனந்த் பகுதியில் 5-ஆவது ஆலையை அமைக்க நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இப்புதிய ஆலை முழுமையாகச் செயல்படத் தொடங்கும்போது, ஆண்டுக்கு கூடுதலாக 10 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.