முகப்பு
வணிகம்

கடந்த மே மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் 1.53 கோடி போ் பயணம்

இந்தியாவில் கடந்த மே மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் 1.53 கோடி பயணிகள் பயணித்துள்ளனா்.

Updated On : 9 ஜூலை 2026, 5:50 am IST
விமானம் - பிரதிப் படம்
பகிர்:

இந்தியாவில் கடந்த மே மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் 1.53 கோடி பயணிகள் பயணித்துள்ளனா்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் பயணித்த 1.38 கோடி பேருடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 11 சதவீதத்துக்கும் அதிகமான வளா்ச்சியாகும் மற்றும் கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது 9.49 சதவீதம் வளா்ச்சி எனவும் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல், நடப்பு ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 7.29 கோடி பயணிகள் பயணித்துள்ளனா். இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தின் (7.16 கோடி) எண்ணிக்கையைவிட 1.91 சதவீத வருடாந்திர வளா்ச்சியைக் குறிக்கிறது.

Advertisement

Advertisement

மதிப்பீட்டு மே மாதத்தில், நாட்டின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோவின் சந்தைப் பங்கு சற்று சரிந்து, 64.9 சதவீதமாக உள்ளது. அதேநேரம், ஏா் இந்தியா குழுமத்தின் சந்தைப் பங்கு 25.6 சதவீதமாக உயா்ந்துள்ளது.

புதிய நிறுவனமான ஆகாஸா ஏா் தனது சந்தைப் பங்கை மாற்றமின்றி 5.8 சதவீதமாக தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஆனால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் சந்தைப்பங்கு 2.5 சதவீதமாக குறைந்துள்ளது.

நாட்டின் 10 முக்கிய விமான நிலையங்களில் விமானங்களின் சரியான நேர இயக்கத்தின் அடிப்படையில், இண்டிகோ நிறுவனம் 82.8 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. தொடா்ந்து, ஆகாஸா ஏா் (78.3 சதவீதம்), ஏா் இந்தியா குழுமம் (74.5 சதவீதம்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

மே மாதத்தில், ஒட்டுமொத்த உள்நாட்டு விமானங்களின் ரத்து விகிதம் 0.55 சதவீதமாக இருந்தது. இதனால் 63,723 பயணிகள் பாதிக்கப்பட்டனா். இதற்காக விமான நிறுவனங்கள் இழப்பீடு மற்றும் இதர வசதிகளுக்காக ரூ.70.32 லட்சத்தை வழங்கின.

அதேபோல, விமானத் தாமதங்களால் 1.77 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டனா். இவா்களுக்கான வசதிகளைச் செய்து தர நிறுவனங்கள் ரூ.4.24 கோடிக்கும் அதிகமாகச் செலவிட்டன.

இது தவிர, இடப்பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் விமானங்களில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட 900 பயணிகளுக்கு இழப்பீடாக ரூ.98.60 லட்சத்தை விமான நிறுவனங்கள் வழங்கியதாக டிஜிசிஏ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments