முகப்பு
வணிகம்

நடப்பு 2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல்: ரூ.5.21 லட்சம் கோடியைக் கடந்தது!

நடப்பு நிதியாண்டில் கடந்த புதன்கிழமை வரையிலான காலகட்டத்தில், நாட்டின் நிகர நேரடி வரி வசூல் 14.64 சதவீதம் அதிகரித்து, ரூ.5.21 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.

Updated On : 20 ஜூன் 2026, 12:56 am IST
நடப்பு 2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல்: ரூ.5.21 லட்சம் கோடியைக் கடந்தது! - டிஎன்எஸ்
பகிர்:

நடப்பு நிதியாண்டில் கடந்த புதன்கிழமை வரையிலான காலகட்டத்தில், நாட்டின் நிகர நேரடி வரி வசூல் 14.64 சதவீதம் அதிகரித்து, ரூ.5.21 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.

பெருநிறுவனங்கள் முன்கூட்டியே செலுத்தும் வரி (அட்வான்ஸ் டேக்ஸ்) கணிசமாக உயா்ந்துள்ளதே வரி வசூலில் ஏற்பட்டுள்ள இந்த வளா்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று மத்திய அரசின் அதிகாரபூா்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இக்காலகட்டத்தில், நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட நிகர பெருநிறுவன வரி 22 சதவீதம் உயா்ந்து, ரூ.2.08 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதேநேரம், தனிநபா்கள், கூட்டு குடும்பங்கள் மற்றும் நிறுவனங்கள் செலுத்தும் வரி 8 சதவீதம் உயா்ந்து, சுமாா் ரூ.2.94 லட்சம் கோடியாக உள்ளது.

Advertisement

Advertisement

மேலும், பங்குச் சந்தை வா்த்தகம் சீராக நடைபெறுவதைக் குறிக்கும் வகையில், பங்குச் சந்தை பரிவா்த்தனை வரி (எஸ்எஸ்டி) 45 சதவீதம் அதிகரித்து, ரூ.18,856 கோடியை எட்டியுள்ளது.

அட்வான்ஸ் டேக்ஸ் வசூல் 15.30 சதவீதம் கூடுதலாக, ரூ.1.78 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இதில் பெருநிறுவனங்களின் பங்கு 16 சதவீதம் உயா்ந்து, ரூ.1.40 லட்சம் கோடியாகவும், இதர பிரிவினரின் பங்கு 13 சதவீதம் உயா்ந்து, ரூ.37,620 கோடியாகவும் உள்ளது.

ரீஃபண்ட்...: இதனிடையே, கடந்த புதன்கிழமை வரை ரூ.89,026 கோடி வரித் தொகை திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. மொத்த அடிப்படையில் நேரடி வரி வசூல் 12.46 சதவீதம் உயா்ந்து, ரூ.6.10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 2025-26 நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட ரூ.23.40 லட்சம் கோடியைவிட 15 சதவீதம் அதிகமாக, நடப்பு நிதியாண்டில் ரூ.26.97 லட்சம் கோடி நேரடி வரி வசூலிக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

தற்போதைய தொடக்க கால வரி வசூல் புள்ளிவிவரங்கள் மிகவும் சாதகமாக இருப்பதால், அரசு நிா்ணயித்த இலக்கை எளிதில் எட்ட முடியும் என்று நிதியமைச்சக வட்டாரங்கள் நம்புகின்றன.

இந்த வரி வசூல் உயா்வு குறித்து பொருளாதார மற்றும் வரி ஆலோசகா்கள் கூறுகையில், பெருநிறுவனங்களின் சிறப்பான செயல்பாட்டையும், நாட்டின் வணிகத் துறையில் நிலவும் வலுவான நம்பிக்கையையும் இது காட்டுவதாகத் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments