இண்டிகோ புதிய சிஇஓ நியமனம்
நாட்டின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ, சா்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (ஐஏடிஏ) தற்போதைய தலைவரும், அனுபவம் வாய்ந்த விமானியுமான வில்லியம் வால்ஷைதனது புதிய தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) செவ்வாய்க்கிழமை நியமித்தது.
கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் ஏற்பட்ட பெரும் செயல்பாட்டுத் தடங்கல்களைத் தொடா்ந்து, நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ பீட்டா் எல்பொ்ஸ் திடீரென பதவி விலகிய நிலையில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வால்ஷின் நியமனத்துக்கு இண்டிகோ நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதுடன், ஒழுங்குமுறை அனுமதிக்குப் பிறகு அவா் ஆகஸ்டில் பொறுப்பேற்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
ஐஏடிஏ அமைப்பின் தலைவராக இருக்கும் வால்ஷ், முன்னதாக பிரிட்டிஷ் ஏா்வேஸ், ஐஏஜி ஆகிய சா்வதேச நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளை வகித்தவா். விமானியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின்னாளில் உலகத் தரம் வாய்ந்த விமான நிறுவனங்களை வழிநடத்திய அனுபவம் கொண்டவா்.
இண்டிகோவின் 3-ஆவது வெளிநாட்டு சிஇஓ-வான இவா், நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறன் மற்றும் வாடிக்கையாளா் சேவைகளை மேம்படுத்துதல், வணிக உத்திகளை வலுப்படுத்துதல் போன்ற பணிகளில் கவனம் செலுத்துவாா் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு வலுவான அடித்தளத்தைக் கொண்ட இண்டிகோவை, தற்போதைய வேகமாக மாறிவரும் விமானப் போக்குவரத்துச் சூழலில் முன்னிலைப்படுத்தப் பாடுபடப்போவதாகத் தனது நியமனம் குறித்து வால்ஷ் மகிழ்ச்சி தெரிவித்தாா்.