ஆன்மிக சுற்றுலா: கோயில்களை தரிசிக்கலாமே!
வேளாண் மாவட்டமான கடலூரில், சுற்றுலா வாய்ப்புகள் மிகக்குறைவு.
வேளாண் மாவட்டமான கடலூரில், சுற்றுலா வாய்ப்புகள் மிகக்குறைவு. என்.எல்.சி. நிலக்கரிச் சுரங்கங்கள், பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள், பழமை வாய்ந்த கோயில்கள், வடலூர் சத்தியஞானசபை, கடலூர் சில்வர் பீச் ஆகியவை மக்கள் கண்டுகளிக்கும் இடங்களாக உள்ளன. எனினும் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளும், சிதம்பரம் நடராஜர் கோயிலும் மட்டுமே சுற்றுலாத் துறையின் பட்டியலில் உள்ளன.
தமிழக மக்களின் சுற்றுலாக்களில் கோயில்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. கோயிலுக்குச் செல்லாமல் எந்த சுற்றுலாவும் மனநிறைவைத் தருவதில்லை.
பாண்டிய, சோழ மன்னர்கள் மற்றும் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்ட, உலகப் புகழ் பெற்ற பழமை வாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோயில், சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடிய 5 இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பஞ்ச பூதங்களில் இறைவன், ஆகாய வடிவில் இருக்கிறான் என்பதே சிதம்பர ரகசியம். 160 அடி உயரம் கொண்ட கிழக்கு கோபுரத்தில், பரத நாட்டியத்தின் 108 வகை தோற்றங்களின் சிற்பங்கள் உள்ளன. கோயில் திறந்து இருக்கும் நேரம் காலை 6 முதல் பகல் 12 மணி வரை, மாலை 5 முதல் இரவு 10 மணி வரை.
Advertisement
திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில், 108 வைணவத் தலங்களில் முக்கியத் தலமாக, நடுநாட்டுத் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்றத் தலம். தெற்கு வடக்காக ஓடும் கெடிலம் நதிக்கரையில் கோயில் அமைந்து இருப்பது காசிக்கு இணையான சிறப்பு அம்சம்.
வடகலை வைணவர்களின் ஆச்சாரியார் எனப்படும் வேதாந்த தேசிகர் இங்கு, 41 ஆண்டுகள் தங்கி தவம் புரிந்திருக்கிறார். தேசிகருக்கு காட்சி கொடுத்த, கல்விக் கடவுளான ஹயகிரீவர் முதலாவது தோன்றிய தலம், திருவந்திபுரம் மலையாகும். தேவநாதசுவாமி கோயில், ஹயகிரீவர் கோயில் ஆகியவற்றுக்கு, ஆண்டுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகிறார்கள்.
தேவநாத சுவாமி கோயில் காலை 6-30 முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 8-30 மணி வரையிலும், ஹயகிரீவர் கோயில் காலை 8 முதல் 11 மணி வரையும். மாலை 5 முதல் 7 மணி வரையிலும் திறந்து இருக்கும்.
கடலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்து இருக்கும் தொன்மை வாய்ந்த பாடலீஸ்வரர் கோயில், பராந்தகச் சோழனால் கட்டப்பட்டு, பின்னர் பல மன்னர்களால் விரிவுபடுத்தப் பட்டது. ஆண்டுக்கு 1 லட்சத்துக்கு மேல் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அப்பர், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றத் தலம். கோயில் திறந்து இருக்கும் நேரம் காலை 6 மணி முதல் 11-30 மணி வரை, மாலை 4 முதல் இரவு 9-15 மணி வரை.
ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோயில் வைணவ அவதர ஸ்தலங்களில் 3-வதாகக் கருதப்படுகிறது. பூமியை மீட்டுக் கொடுத்த அவதாரம் என்பதால் நிலம், ரியல் எஸ்டேட் சம்மந்தமான பிரச்னைகள் தீர, பக்தர்கள் இங்கு வழிபடுகிறார்கள். கோயில் திறந்து இருக்கும் நேரம் காலை 6 முதல் பகல் 12 மணி வரை. மாலை 4-30 முதல் இரவு 9 மணி வரை.
பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில். 7-ம் நூற்றாண்டுக்கு முந்தையது. சிவபெருமானின் 8 வீரச் செயல்களில் ஒன்றான, 3 அசுரர்களை அழித்த தலம். அப்பர், சுந்தரர், சம்பந்தரால் பாடல் பெற்றது. அப்பருக்கு வந்த சூலை நோயை நீக்கிய தலமாவதால், வயிற்றுவலி சம்பந்தப்பட்ட நோய்கள் தீர, பக்தர்கள் பலரும் இங்கு வருகிறார்கள். கோயில் திறந்து இருக்கும் நேரம் காலை 6 முதல் பகல் 12 மணி வரை. மாலை 4-30 முதல் இரவு 9 மணி வரை. குடியானவர்களின் கடவுளாக விளங்கும் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில், இறைவன் உருவமற்றவனாகக் காட்சி கொடுக்கிறார். எனவே இங்கே விக்ரகங்கள் இல்லை. மூலஸ்தானத்தில் பாறை மீது கிரீடம் மட்டும் வைக்கப்பட்டு இருக்கிறது. பிரார்த்தனை கோயிலாக விளங்கும் இங்கு ஆண்டுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களுக்காக வருகிறார்கள். பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை, சீட்டில் எழுதிப் போட்டுச் செல்வார்கள். கோரிக்கைகள் 30 நாள்களில் நிறைவேறும். நிறைவேறாவிட்டால் மீண்டும் கோரிக்கையை புதிப்பித்துக் கொண்டால், 90 நாள்களில் நிறைவேறும் என்பதும் ஐதீகம். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வர் கோயிலுக்கு வந்த, சம்பந்தர், விருத்த கிரீஸ்வரரைப் பாடாமல் சென்றதாகவும், அதுகுறித்து சிவபெருமானே கொளஞ்சியப்பரிடம் புகார் கொடுத்ததாகவும், அதைத் தொடர்ந்து சம்பந்தர் விருத்தகிரீஸ்வரரைப் பாடிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. கோயில் திறந்து இருக்கும் நேரம் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை.
பழமை வாய்ந்த விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற தலம். 5 பிரகாரங்கள், 5 கொடி மரங்கள், 5 நந்திகள், 5 தீர்த்தங்கள், 5 கோபுரங்கள், 5 தேர்களைக் கொண்டது. கோயில் திறந்து இருக்கும் நேரம் காலை 6 முதல் 12 மணி வரை. மாலை 4 முதல் 8 மணி வரை.
கடல் காற்றின் சுகத்தை அனுபவிக்க ரம்யமான இடமாகத் திகழ்வது கடலூர் சில்வர் பீச். பராமரிப்பின்மையால், படகு குழாம், குழந்தைகள் பூங்கா போன்றவை சிதைந்து கிடக்கின்றன. வசதிகளை எதிர்பாராமல், கடற்கரையில் அமர்ந்து அழகை ரசித்துச் செல்லலாம்.