தாழ்ச்சி சொல்வோரே வாழ்வில் உயர்ச்சி அடைவர்
17-ஆம் நூற்றாண்டு கண்ட பெரும் புலவர்கள் இருவர். ஒருவர், பழுத்த தமிழ்ப் புலமை படைத்த குமரகுருபரர், இன்னொருவர், "கற்பனைக் களஞ்சியம்' சிவப்பிரகாசர். மனங்கொள்ள வேண்டிய மற்றொரு சிறப்புக் குறிப்பும் உண்டு.
17-ஆம் நூற்றாண்டு கண்ட பெரும் புலவர்கள் இருவர். ஒருவர், பழுத்த தமிழ்ப் புலமை படைத்த குமரகுருபரர், இன்னொருவர், "கற்பனைக் களஞ்சியம்' சிவப்பிரகாசர். மனங்கொள்ள வேண்டிய மற்றொரு சிறப்புக் குறிப்பும் உண்டு. வாழையடி வாழையென வரும் தமிழ்ப் புலவர் வரிசையில் வடக்கே காசி வரை சென்று பெருமை படைத்தவர்கள் இருவர். ஒருவர் குமரகுருபரர்; மற்றொருவர், மகாகவி பாரதியார்; "நான் நானான இடம் காசி' என அவரது ஒப்புதல் வாக்குமூலம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
மதுரையில் அரசாண்டு வந்த திருமலை நாயக்கரின் வேண்டுகோளின்படி குமரகுருபரர் பாடியது "நீதிநெறி விளக்கம்'. அது 101 வெண்பாக்களால் ஆனது. நெஞ்சை அள்ளும் அழகிய உவமைகள் நிறைந்தது."நீதிநெறி விளக்க'த்தில் இடம்பெற்றுள்ள ஓர் அற்புதமான பாடல். அது இன்றைய கணினி யுகத்தினரும் கற்க வேண்டுவது; கற்ற பின் நிற்கத் தகுவது. அப்பாடலில் மக்களாகப் பிறந்த அனைவருக்கும் பயன்படக்கூடிய - வாழ்வில் யாவரும் பின்பற்ற வேண்டிய - ஓர் அறிவுரையை வழங்கியுள்ளார் குமரகுருபரர். மற்றவர்களால் பெரிதும் மதிக்கப்பட வேண்டும் என விரும்புகிறவர்கள் எவ்விடத்தும் - எக்காலத்தும் மறவாமல் செய்ய வேண்டிய செயல்கள் சில உண்டு. அவற்றை "நோற்றல்' என்ற ஆழ்ந்த பொருள் தருகின்ற சொல்லால் சுட்டுகிறார் குமரகுருபரர். "உளங்கொண்டு அயர்வின்றிச் செய்யத் தகுவதாதலாலும், விளையும் பயன் பெரிதாதலாலும் இச்செயலை நோற்றல் என்றார்' என்பது உ.வே.சாமிநாதையர் வரையும் அரிய உரை விளக்கம். இனி, மற்றவர்களால் எக்காலத்தும் மதிக்கப்பட வேண்டும் என எண்ணுகிறவர்கள் என்னென்ன செயல்களை ஆற்ற வேண்டும் எனக் குமரகுருபரர் கூறுகிறார் எனக் காண்போம்.
முதலாவது, மற்றவர்களிடம் காணப்படும் நல்லியல்புகளை எல்லாம் பலரும் அறியச் சொல்லவேண்டும். அடுத்தது, மற்றவர்களிடம் காணப்படும் சிறுமைகளை அறிந்திருந்தாலும் அவற்றை வெளியிடாமல் தம் மனதுக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். மூன்றாவதாக - முத்தாய்ப்பாக - எல்லோரிடமும், எப்போதும் வணக்கத்தைப் புலப்படுத்தும் பணிவான சொற்களையே பேசவேண்டும். இம்மூன்று செயல்களையும் ஒரு நோன்புபோலத் தம் வாழ்வில் யார் விடாமல் தொடர்ந்து கடைபிடிக்கிறார்களோ, அவர்களே உலகத்தாரால் மிகவும் மதிக்கப்படுவர்; அவர்களின் உள்ளங்களிலே என்றென்றும் கொலு வீற்றிருப்பர். சீரிய இக்கருத்துகளைத் தன்னகத்தே கொண்ட "நீதிநெறி விளக்கப் 'பாடல் இதோ:
Advertisement
Advertisement
""பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும்
மறவாமே நோற்பது ஒன்று உண்டு - பிறர்பிறர்
சீரெல்லாம் தூற்றிச் சிறுமை புறங்காத்து
யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல்'' (பா.19)
நடைமுறை வாழ்வில் பார்த்தால், பெரும்பாலும் நாம் மற்றவர்களின் நிறைகளைக் கண்டுகொள்ளவே மாட்டோம். தப்பித்தவறி ஒருவேளை கண்டுகொண்டாலும், அவற்றை எவரிடமும் மனமாரப் பாராட்டிப் பேசமாட்டோம். மாறாக, மற்றவர்களின் குற்றங்குறைகளைக் கண், காது, மூக்கு வைத்து ஒன்றுக்குப் பத்தாகப் பெரிதுபடுத்திப் பேசுவோம், அப்படிப் பேசுவதிலே தனி மகிழ்ச்சியையும் காண்போம். யாருடன் பேசினாலும் எப்போதும் "யான்' (அகங்காரம்), "எனது' (மமகாரம்) என்ற முனைப்புடனேயே பேசுவோம். இம்மூன்றும் நம் ஆளுமையில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட வேண்டிய தீய பண்புகள் என வலியுறுத்துகிறார் குமரகுருபரர்.
இராமாநுஜரின் வாழ்வில் நடந்த ஓர் உண்மை நிகழ்ச்சி இங்கே நினைவு கூரத்தக்கது. இராமாநுஜர் மனித குல வரலாற்றில் வியப்பூட்டும் ஒரு தத்துவ மேதையாக விளங்கியவர். ஒரு சமூகப் புரட்சியாளராக வாழ்ந்து காட்டியவர். விழுமிய மனிதப் பண்புகளுக்கு ஒரு களஞ்சியமாகத் திகழ்ந்தவர்.
அவர் ஒருமுறை தமது சீடன் அனந்தாழ்வானின் வேண்டுகோளை ஏற்றுத் திருப்பதி ஆலயத்தைத் தரிசனம் செய்யப் புறப்பட்டார். ஆயினும், ஆழ்வார்கள் கால் பதித்த மலை என்பதால், தம் காலடி பதிக்காமல் தவழ்ந்தே சென்றார் என்று குருபரம்பரை கூறுகிறது. இராமாநுஜர் திருமலை திருப்பதியின் ஆலயத்தை நெருங்குவதற்கு முன்பே அவரது மாமா திருமலை நம்பி, தீர்த்தப் பிரசாதத்துடன் இறங்கி வந்து அவரை வரவேற்றார். பெரியவரின் வரவால் திகைப்புற்ற இராமாநுஜர், ""இவ்வளவு தூரம் தாங்கள் வரவேண்டுமா? சிறியவர் எவரையேனும் அனுப்பி இருக்கலாகாதா?'' என்று கேட்டார். அப்போது திருமலை நம்பி சொன்னது:
""நான்கு திருவீதிகளிலும் ஆராய்ந்து தேடினேன். எங்கும் என்னைக் காட்டிலும் சிறியவர்களைக் காண முடியவில்லை. அதனால் நானே வந்தேன்''.
பெரியவரின் இம் மறுமொழியைக் கேட்டு நெஞ்சம் நெகிழ்ந்தார் இராமாநுஜர். உண்மையில், குமரகுருபரர் கூறும் "யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல்' என்பது இதுதான். "வணங்கிய வாயினர்' என வான்புகழ் வள்ளுவர் போற்றுவதும் இப்பண்பினைத்தான். இங்ஙனம் யார்யார்க்கும் - எவ்விடத்தும் - எக்காலத்தும் தாழ்ச்சி சொல்வோரே உலக மக்களின் உள்ளங்களிலே உயர்ந்த இடத்தைப் பிடிக்க முடியும்.