119. சுரருலகு நரர்கள் பயில் - பாடல் 1
வழிமொழி பதிகத்தினை
பின்னணி:
நான்காவது தலயாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பிய திருஞானசம்பந்தர் அந்த நகரத்தில் பல நாட்கள் தங்கி பல வகையான பதிகங்கள் பாடினார் என்று பெரிய புராணம் நமக்கு உணர்த்துகின்றது, விகற்பம்=மாறுபாடு; அத்தகைய பதிகங்களில் சில பதிகங்கள் தமிழ் இலக்கியத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தன என்ற செய்தியை மூல இலக்கியம் என்ற தொடர் மூலம் சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். மொழி மாற்று (1.117) மற்றும் மாலைமாற்று (3.117) பதிகங்களை அடுத்து நாம் வழிமொழி பதிகத்தினை நாம் இப்போது சிந்திப்போம்.
செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்களால் மொழி மாற்றும்
வந்த சீர் மாலைமாற்று வழிமொழி எல்லா மடக்குச்
சந்த இயமகம் ஏகபாதம் தமிழ் இருக்குக்குறள் சாத்தி
எந்தைக்கு எழு கூற்றிருக்கை ஈரடி ஈரடி வைப்பு
Advertisement
நாலடி மேல் வைப்பு மேன்மை நடையின் முடுகும் இராகம்
சால்பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிக
மூல இலக்கியமாக எல்லாப் பொருட்களும் உற்ற
ஞாலத்து உயர் காழியாரைப் பாடினர் ஞானசம்பந்தர்
இந்த பதிகம் பன்னிரண்டு பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலிலும் சீர்காழி நகரின் ஒரு பெயர் வந்த வரலாற்றினை கூறுவதால், வழிமொழிப் பதிகம் என பெயர் வந்தது என்று கூறுவார்கள். எளிதில் புரியாத பல சொற்கள் கொண்டுள்ள இந்த பாடலை, சொற்களை சரியாக பிரித்து படித்தால் தான் நாம் பொருளினை நன்றாக உணரமுடியும். இந்த தன்மை கருதியே இந்த பதிகத்தினையும் மிறைக் கவி என்று அழைத்தனர். மிறை என்றால் வருத்தம் என்று பொருள். மூளையை வருத்தி, சொற்களை சரியாக பிரித்து பொருள் காணவேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இவ்வாறு அழைத்தனர், இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்தும் ஐந்து சீர்கள் கொண்டவை; ஒவ்வொரு சீரின் இரண்டாவது எழுத்தும், அந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரின் இரண்டாவது எழுத்தினை ஒட்டி அமைந்துள்ள தன்மை இந்த பதிகத்தின் தனிச் சிறப்பாகும். இந்த அழகினை நாம் புரிந்து கொள்ளும் பொருட்டு, பாடல்கள் சீர் கெடாமல், விளக்கம் பகுதியில் கொடுக்கப் பட்டுள்ளன. வழக்கம் போல் சொற்களைப் பிரித்து, பொருள் உணர்வதற்கு ஏதுவாக பாடல்கள் இந்த தொகுப்பினிலும் கொடுக்கப் பட்டுள்ளன. அனைத்துப் பாடல்களிலும் முன்பகுதியில் இறைவனது சிறப்பும் பின்பகுதியில் அந்த பெயர் வந்ததற்கான விரிவான தலபுராண வரலாறும் கொடுக்கப்பட்டுள்ளன. தலத்தின் பன்னிரண்டு பெயர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயற்றப்பட்ட பாடல் எனினும், வழக்கமாக தான் குறிப்பிடும் இராவணின் கயிலை நிகழ்ச்சி, அண்ணாமலை சம்பவம், சமணர்களை பற்றிய குறிப்பு மற்றும் பதிகத்தை ஓதுவதால் கிடைக்கும் பலங்கள் ஆகியவையும் இந்த பதிகத்தில் குறிப்பிடப் படுகின்றன. வேகமான சந்தமுடைய பாடல்கள் என்பதால் முடுகு விராகம் என்று இந்த பதிகம் அழைக்கப் படுகின்றது. சீர்காழியின் இந்த பன்னிரண்டு பெயர்களும் மந்திரம் என்பதால் இந்த பெயர்களை இந்த பதிகத்தில் கொடுத்துள்ள வரிசைப் படியே சொல்ல வேண்டும் என்று பெரியோர்கள் கூறுவார்கள்.
பாடல் 1:
சுரர் உலகு நரர்கள் பயில் தரணி தலம் முரண் அழிய அரணம் மதில் முப்
புரம் எரிய விரவு வகை சர விசை கொள் கரம் உடைய பரமன் இடமாம்
வரம் அருள வரன் முறையின் நிரை நிறை கொள் வரு சுருதி சிரவுரையினால்
பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ வளர் பிரமபுரமே
விளக்கம்:
இந்த பாடலில் பிரமபுரம் என்ற பெயர் உணர்த்தப் படுகின்றது. இந்த பெயரின் இரண்டாவது எழுத்தாகிய ரகரம் அல்லது ரகரத்தைச் சார்ந்த உயிர்மெய் எழுத்து ஒவ்வொரு சீரின் இரண்டாவது எழுத்தாக வருவதை நாம் காணலாம். இந்த பாடலில் காவலாக இருந்த மூன்று கோட்டைகள் என்று குறிப்பிடுகின்றார். திரிபுரத்து அரக்கர்கள் பெற்றிருந்த வரத்தின் காரணமாக இந்த மூன்று கோட்டைகளும் ஒரே நேர்க்கோட்டில் வரும் தருணத்தில் தான் இந்த கோட்டைகளை அழிக்க முடியும். எப்போதும் வானில் வேறு வேறு திசைகளில் பறந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகள் ஒரே நேர்க்கோட்டில் வருவது துர்லபம் என்பதால், ஒன்றுக்கொன்று அருகில் இல்லாமல் இருந்த போதும், எந்த ஒரு கோட்டையும் மற்ற இரண்டு கோட்டைகளுக்கு அரணாகத் திகழ்ந்த தன்மை அரணம் மதில் முப்புரம் என்ற தொடர் மூலம் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. எப்போதோ ஒரு சமயத்தில் ஒரே நேர்க்கோட்டில் மூன்று கோட்டைகளும் வந்தாலும் ஒரு நொடிக்கும் குறைந்த நேரமே, அவ்வாறு இருக்கும் என்பதால், இந்த கோட்டைகளை நோக்கி எய்யப்படும் எந்த ஆயுதமும் மிகுந்த வேகத்துடன் செல்ல வேண்டும். பெருமான் விடுத்த அம்பு, மூன்று கோட்டைகளும் ஒரே நேர்க்கோட்டினில் இருந்த அந்த நிலையில் இருந்து மாறுபடுவதற்கு முன்னமே, சென்றடைந்து மூன்று கோட்டைகளையும் எரித்தது என்பதை உணர்த்தும் வண்ணம் வேகத்துடன் சென்ற அம்பு என்று சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.
சுரருலகு நரர்கள்பயி றரணிதல முரணழிய வரணமதின்முப்
புரமெரிய விரவுவகை சரவிசைகொள் கரமுடைய பரமனிடமாம்
வரமருள வரன்முறையி னிரைநிறைகொள் வருசுருதி சிரவுரையினாற்
பிரமனுய ரரனெழில்கொள் சரணவிணை பரவவளர் பிரமபுரமே
தான் மேற்கொண்டுள்ள படைத்தல் தொழில் ஒழுங்காக நடைபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் உபநிடதங்களை முறையாக ஓதி பிரமன் வரம் பெற்றதால் இந்த தலத்திற்கு பிரமபுரம் என்ற பெயர் வந்தது என்று தலபுராணம் கூறுகின்றது. பிரமன் வழிபட்ட வரலாறு இந்த பாடலில் எடுத்துரைக்கப் படுகின்றது.
சுரர்=தேவர்கள்; சுரர் உலகு=தேவர்கள் வாழும் உலகம்; பயில்=வாழ்கின்ற; நரர்கள்= மனிதர்கள்; தரணி தலம்=நிலவுலகம்; முரண்=வலிமை; அரணம்=காவல்; விசை=வேகம்; வரன்முறை=எவ்வாறு ஓதவேண்டும் என்று வரையறுக்கப்பட்ட முறை; சுருதி=வேதங்கள்; சுருதி சிரம்=வேதங்களின் முடிவான கருத்துகள் கொண்ட உபநிடதங்கள்; நிரை=வரிசை; சரண இணை=இணையாக உள்ள திருப்பாதங்கள்; பரவ=புகழ்ந்து பாட; விரவு வகை எரிய= கலந்து பல இடமும் எரியும் வண்ணம்; இசை என்ற சொல்லுக்கு புகழ் என்று பொருள் கொண்டு, திரிபுரங்களை அழித்து புகழ் பெற்ற அம்பினை ஏந்திய கரம் என்று பொருள் கூறுவதும் பொருத்தமே.
பொழிப்புரை:
தேவர்கள் வாழ்கின்ற தேவர் உலகமும் மற்றும் மனிதர்கள் வாழ்கின்ற நிலவுலகமும் தங்களது நிலையிலிருந்து மாறுபட்டு, வலிமை அழியும் வண்ணம் துன்புறுத்திய திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகளை, ஒன்றுக்கொன்று காவலாகத் திகழ்ந்த கோட்டைகளை, வலிமையான மதில்களைக் கொண்டிருந்த மூன்று கோட்டைகளை, ஒருங்கே பல இடங்களும் கலந்து எரியும் வண்ணம் விரைவாக செல்லக்கூடிய அம்பினை எய்த ஆற்றல் கொண்ட கரத்தினை உடையவர் சிவபெருமான். வேதங்களின் முடிவான பொருளை உணர்த்தும் உபநிடதங்களின் வாக்கியங்களை, எல்லா ஸ்வரங்களும் வரிசை முறையில் நிறைவாக அமையும் வண்ணம் முறையாக அவை ஓதவேண்டிய முறையில், தான் மேலும் மேலும் உயர்வடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஓதிய பிரமன், பெருமானின் அழகிய இணையான மலரடிகளை தான் புகழ்ந்து பாடி, தான் வேண்டிய வரங்களை பெற்றான். இவ்வாறு பிரமன் போற்றி வணங்கியமையால் பிரமபுரம் என்று பெயர் பெற்ற இந்த தலம் ஓங்கிய புகழுடன் விளங்குகின்றது.