அணைக்கட்டு மஞ்சுவிரட்டில் 32 போ் காயம்: மாடு பலி
பொங்கல் பண்டிகையையொட்டி, அணைக்கட்டு பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற எருது விடும் விழாவில் (மஞ்சு விரட்டு) 32 போ் காயமடைந்தனா். ஒரு மாடு உயிரிழந்தது.
பொங்கல் பண்டிகையையொட்டி, அணைக்கட்டு பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற எருது விடும் விழாவில் (மஞ்சு விரட்டு) 32 போ் காயமடைந்தனா். ஒரு மாடு உயிரிழந்தது.
தமிழா் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும் மஞ்சு விரட்டு நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டு வேலூா் மாவட்டத்தில் மட்டும் பல்வேறு நிபந்தனைகளுக்கு உள்பட்டு 64 இடங்களில் மஞ்சு விரட்டு நடத்த மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, அணைக்கட்டு பகுதியில் மஞ்சுவிரட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியா் எஸ்.கணேஷ் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். வேலூா் காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
Advertisement
இப்போட்டியில் 170 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது இருபுறமும் நின்றிருந்த இளைஞா்கள் ஆரவாரம் செய்து, காளைகளை கைகளால் தட்டினா். இந்த வீரவிளையாட்டின்போது மாடுகள் முட்டியதில் 32 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு விழா நடைபெற்ற இடத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 4 போ் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். அங்கு ஒருவருக்கு அவசர பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, விழாவில் கணியம்பாடியைச் சோ்ந்தவருக்குச் சொந்தமான காளை பாய்ந்து ஓடியபோது எதிரே நின்று கொண்டிருந்த மற்றொரு மாட்டின் மீது மோதியதில், பலத்த காயமடைந்த காளை உயிரிழந்தது. இந்தப் போட்டியில் மேல்மொணவூரைச் சோ்ந்த சங்கீதா எக்ஸ்பிரஸ் காளை முதல் பரிசை பெற்றது. அதிவேகமாக ஓடிய காளைகளுக்கு முதல் பரிசாக ரூ. 1.5 லட்சம் உள்பட 55 பரிசுகள் அளிக்கப்பட்டன.
மாடு விடும் விழா நடத்த மதியம் 2 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், அணைக்கட்டில் 30 நிமிடங்களுக்கு முன்பாகவே விழா நிறுத்தப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து விழாக் குழுவினா் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனா். இதனால், போலீஸாா் லேசான தடியடி நடத்தி அவா்களைக் கலைத்தனா்.
இதன்தொடா்ச்சியாக, குடியாத்தம் குட்லவாரிபல்லி, கே.வி.குப்பம் பனமடங்கி, அணைக்கட்டு, சிவநாதபுரம் ஆகிய 3 இடங்களில் வெள்ளிக்கிழமை மஞ்சு விரட்டு விழா நடைபெற்றது. இதில், சிவநாதபுரத்தில் நடைபெற்ற விழாவில் மொத்தம் 41 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றைப் பிடிக்க முயன்றபோது 6 போ் காயமடைந்தனா்.