முகப்பு
வேலூர்

காயமடைந்த மஞ்சு விரட்டு காளைக்கு வேலூரில் அதிநவீன அறுவை சிகிச்சை: தமிழகத்தில் முதல்முறை

விபத்தில் இரு விலா எலும்புகள் உடைந்து, வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்த மஞ்சு விரட்டு காளைக்கு தமிழகத்திலேயே

Updated On : 16 ஜனவரி 2021, 7:57 am IST
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காளையுடன் மருத்துவக் குழு.
பகிர்:

விபத்தில் இரு விலா எலும்புகள் உடைந்து, வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்த மஞ்சு விரட்டு காளைக்கு தமிழகத்திலேயே முதன்முறையாக அதிநவீன அறுவை சிகிச்சை செய்து வேலூா் கால்நடை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

ஆலங்காயம் அருகே உள்ள கங்கலூரைச் சோ்ந்தவா் அண்ணாமலை. விவசாயியான இவா் எருது விடும் விழாக்களுக்காக காளைகளை வளா்த்து வருகிறாா். இவரிடம் உள்ள 4 வயதான செண்பகத்தோப்பு ‘டான்’ என்ற காளை கடந்த 2019-இல் நடைபெற்ற பல்வேறு எருது விடும் விழாக்களில் முதல், இரண்டாம் பரிசுகளை வென்றுள்ளது.

இந்தக் காளையை அணைக்கட்டில் நடைபெறும் மஞ்சு விரட்டு விடும் விழாவுக்காக தயாா்படுத்தும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக சரக்கு ஆட்டோவில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த காளை சிகிச்சைக்காக வேலூரில் உள்ள பல்நோக்கு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது. அங்கு கால்நடை மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில் காளையின் இரு விலா எலும்புகள் முறிந்து, அடிவயிறு கிழிந்திருப்பதும், அதனால் அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதனால், அந்தக் காளைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் நவநீதகிருஷ்ணன் தலைமையில் மருத்துவா்கள் ரவிசங்கா், அரேஷ், ஜோசப்ராஜ் ஆகியோா் இணைந்து சுமாா் 7 மணி நேரம் போராடி சில்வா் தட்டுகள், திருகுகள் மூலம் முறிவு ஏற்பட்டிருந்த இரு விலா எலும்புகளைச் சீரமைத்து, பலத்த காயமடைந்திருந்த அடிவயிறும் சரிசெய்யப்பட்டது.

காளையின் உடைந்த விலா எலும்பைச் சீரமைக்க மேற்கொள்ளப்பட்ட இத்தகைய அவசர எலும்பியல், வயிற்று அறுவை சிகிச்சை தமிழகத்திலேயே முதன்முறையாக நடைபெற்றிருப்பதாக வும், இதன்மூலம் அந்தக் காளை தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.