ஒன்ஸ்மோர்
தெனாலிராமன், மரியாதை ராமன் போல சாப்பாட்டு ராமன் என்றும் இருந்தானா? சாப்பாட்டு ராமன் கதைகள் பல உண்டு. அவை ஒரே ராமனைக் குறிக்குமா
தெனாலிராமன், மரியாதை ராமன் போல சாப்பாட்டு ராமன் என்றும் இருந்தானா? சாப்பாட்டு ராமன் கதைகள் பல உண்டு. அவை ஒரே ராமனைக் குறிக்குமா அல்லது பல சுவாரஸ்யமான சாப்பாட்டு சங்கதிகள் நாளாம்பரியமா ஒரு ராமனிடம் வந்து சேர்ந்ததா என்று சொல்வது கஷ்டம். நாட்டுப்புறக் கதைகளில் இப்படிச் சேர்ந்து கொண்டே போகும்! மகாபாரதத்தின் கதைகளில் நாம் இன்னும் கேள்விப்படாத பகுதிக் கதைகள் மக்களிடம் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.
சமீபத்தில் ஊருக்குப் போயிருந்தபோது ஒரு பெரியவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.
""கர்ணன் செய்யாத தான தர்மங்கள் கிடையாது என்று சொல்லுவார்கள். ஆனால் அவன் செய்யாத தானதர்மம் ஒன்று உண்டு. அது என்னது என்று சொல்ல முடியுமா?''
Advertisement
Advertisement
இந்தக் கிராமத்துக் கிழவனார்களே இப்படித்தான். நம்மைத் திக்கு முக்காட வைத்துவிட்டு, ""யோசிச்சி வைங்க. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. பெறகு வந்து பாக்கேம்'' என்று போய்விட்டார் அவர்.
நானும் கணபதியும் யோசித்தோம். கர்ணன் செய்யாத தான தர்மமும் இருக்குமா? அவன் செய்த தான தர்மங்களின் பலனையே பிடி இந்தா... என்று ரத்தத்தால் தாரை வார்த்துக் கொடுத்தவன் அல்லவா? இதைவிடவும் ஓர் அபூர்வமான அவன் கொடுக்காத தானம் எப்படி இருக்க முடியும்?
"சோ' என்று கொட்டுற அடை மழைக்காலத்தில் ஒரு படுபாவி முனிவர் வந்து யாகம் செய்ய நனையாத விறகு நூறு வண்டி வேணும் என்று கேட்கிறார். தனது அரண்மனையையே இடித்து அதிலுள்ள மரங்களை வண்டிகளில் பாரமேற்றி அனுப்புகிறான் கர்ணன்.
எது கேட்டு அவன் இல்லை என்று சொல்லியிருக்கிறான்? என்ன யோசித்தும் புரிபடவில்லை எங்களுக்கு. சரி அவரே வந்து சொல்லட்டும் என்று காத்திருந்தோம். சாவகாசமாக வந்தார்; ஒன்றுமே அறியாதவர்போல, ""எங்களுக்குத் தெரியலையய்யா, நீங்களே சொல்லிடுங்கோ'' என்று கேட்டுக் கொண்டோம்.
""கர்ணன் செய்யாதது... அன்னதானம்!'' என்றார். சொல்லிவிட்டு எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார். எப்பிடி நாஞ் சொன்னது சரிதானா என்கிறதுபோல. கதை சொல்லிகளுக்குப் பெருமை ரொம்பத்தான் உண்டு! அதைத் தப்பு சொல்ல முடியுமா நாம். கொடுக்கறவன் கை எப்பவும் மேலதானே.
அந்த முதியவர் கர்ண மகாராஜாவின் பெண்டாட்டியைக் கண்டித்துப் பேசினார். ""அவ அப்பேர்க்கொத்த புருசனை மதிக்க மாட்டா. தாகம்னு வந்தவுகளுக்கு ஒரு லோட்டா பச்சைத் தண்ணி குடிக்கத் தரமாட்டா. பொண்டாட்டி ஒத்துழைப்பு இல்லைன்னா, பசின்னு வந்தவுகளுக்கு ஒரு வா சாப்பாடு போட முடியுமா?'' என்று கேட்டார். வாஸ்தவமான பேச்சு என்கிறோம்.
துக்கம் தொண்டையை அடைக்காவிட்டாலும் கர்ணனை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. அடடா... அப்பேர்ப்பட்டவனுக்கு இப்படியும் ஒரு பொம்பளை வந்து வாச்சாளே பொண்டாட்டியா என்று ஆக, பசிச்சவனுக்கு வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து ஒரு வாய் சோத்தைப் போடக் கொடுத்து வைக்கலை பாவி கர்ணனுக்கு.
கர்ணன் சம்பந்தப்பட்ட இப்பிடியும் ஒரு விசயம் இருக்கு என்று அந்தக் கிராமத்துப் பெரியவர் சொல்லித்தான் தெரிந்தது எங்களுக்கு!
(கி.ராஜநாராயணன் கட்டுரைகளில் "இப்படியாக...' என்ற அத்தியாயத்திலிருந்து).
மாம்பலம் இலக்கிய மன்றத்தில் குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. தலைமையில் அறிஞர் பொ.திருகூட சுந்தரம் பேசினார். உண்மையில் திருகூட சுந்தரம் ஒரு மேதை. மிகப் பயனுள்ள பல நூல்களை எழுதியிருக்கிறார். இருப்பினும் அந்த மேதைக்கு காலத்தின் அருமையை அறியவில்லை. மேடையில் எஸ்.ஏ.பி. அருகே அமர்ந்து நான் தவிக்கிறேன். திருகூடசுந்தரம் பேசிக் கொண்டேயிருக்கிறார். இவர் எப்போது முடிப்பது? எஸ்.ஏ.பி. எப்போது பேசுவது? ஒரு துண்டுக் கடிதம் எழுதி ஒரு சிறுவனிடம் கொடுத்து அனுப்பினேன். அவர் அதையும் படித்துவிட்டுப் பேசிக் கொண்டேயிருந்தார்! நான் மெல்ல அவர் அருகே சென்றேன். மெல்லிய குரலில் ""எட்டு மணி ஆகப் போகிறது. தலைமை வகிக்கும் எஸ்.ஏ.பி. பேச வேண்டும். இந்த மண்டபத்தை எட்டரை மணிக்கு ஒப்படைக்க வேண்டும்!'' என்றேன்.
அவர் என்னைப் பார்த்தார். ""நான் நான்கைந்து மணி நேரம் பேச வல்லவன். வேம்பு யார் என் நண்பர். எஸ்.ஏ.பி. என் நண்பர். வளரும் பத்திரிகையாளர். அவருக்குப் பேச வாய்ப்பளித்து இத்துடன் என் பேச்சை நிறுத்துகிறேன். மற்றொரு நாள் தொடர்வேன்!'' என்றார். அந்த மற்றொரு நாளை ஏற்படுத்த நான் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை!
தலைமை உரை நிகழ்த்த எழுந்த எஸ்.ஏ.பி. அறிஞர் பொ.திருகூட சுந்தரம் இவ்வளவு நேரம் பேசிய பிறகு நான் பேசுவதற்கு என்ன இருக்கிறது? என்னை அழைத்து இவ்வளவு நேரம் பொ.திருகூட சுந்தரம் பேச்சைக் கேட்க வாய்ப்பேற்படுத்திய இலக்கிய மன்றத்திற்கும் அதன் தலைவர் வேம்பு ஸாருக்கும் நன்றி'' என்று கூறி அமர்ந்தார்!
அவரை வழியனுப்பச் சென்ற என்னை மாம்பலம் "ரயில்வே கேட்' அருகே தனியே அழைத்து, ""வேம்பு சார்! இனி என்னை எந்தக் கூட்டத்திற்கும் அழைக்காதீர்கள். இதுதான் நான் கலந்துகொள்ளும் கடைசிக் கூட்டம். உங்கள் சங்கத்தில் மட்டுமன்று; எங்குமே. உங்களுக்குத் தெரியும், என் ஒப்புதல் இல்லாமல் ஒரு பக்கம் கூட அச்சேறாது. மணி இப்போது எட்டரை. ஏழு மணிக்கு வருவதாகச் சொல்லிவிட்டு வந்தேன். நான் போய்ச் சேர இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும். நான் அங்கு இருந்திருந்தால் இந்த இரண்டு மணி நேரத்தில் 60,000 பிரதிகள் அச்சாயிருக்கும். எனக்காக அங்கே எவ்வளவு பேர் காத்திருப்பார்கள்? நேரம் வீண். நீங்கள் அழைத்ததால் என்னால் தட்ட முடியவில்லை. அதனால் இனி என்னை அழைப்பதை தயவுசெய்து மறந்து விடுங்கள்!''
அந்த வார்த்தைகள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன!
(" நினைத்துப் பார்க்கிறேன்' (பாகம் 2) என்ற நூலில் கலைமாமணி விக்கிரமன்).