முகப்பு
தினமணி கதிர்

தொழில் முனைவோராக நடிகைகள்!

சினிமாவைத் தாண்டி சிறகடிக்கும் நடிகைகளின் தொழில்பயணம்!

Updated On : 25 பிப்ரவரி, 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2024 at 6:03 PM

அண்மைக்காலமாக நடிகர், நடிகைகள் பலரும் நடிப்பைத் தாண்டி, தொழில் முனைவோராக உருவெடுத்து வருகின்றனர். இந்தப் பட்டியலில் இருப்போரை அறிவோம்.

அபர்ணா பாலமுரளியின் 'ஹிப்ஸ்வே'

'சூரரை போற்று' படத்தின் மூலம் ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர் அபர்ணா பாலமுரளி. இவர் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், நண்பர்களுடன் சேர்ந்து 'ஹிப்ஸ்வே' என்ற பெயரில் ஆடைகள் விற்பனையைத் தொடங்கியிருப்பதாக அறிவித்து, கடையை கேக் வெட்டி கொண்டாடும் விடியோ காட்சிகளையும் வெளியிடப்பட்டிருந்தார். பெண்களுக்கான குர்தா, ஷர்ட், பேன்ட், ஷார்ட்ஸ் போன்றவை முதல்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

நயனின் '9 ஸ்கின்'

தனது நடிப்பினால் மட்டுமல்ல; உடை, அழகு, அலங்காரம் என அனைத்திலும் நேர்த்தியாக இருப்பவர் 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா. இன்ஸ்டாகிராமில் அண்மையில் அடியெடுத்து வைத்த நயன்தாரா, தனது இரட்டைக் குழந்தைகளைக் கையில் ஏந்தியபடி நடந்து வந்து மாஸ் என்ட்ரி கொடுத்தார். தற்போது 5.2 மில்லியன் ஃபாலோயர்களோடு இணையத்தைக் கலக்கி வருகிறார்.

'9 ஸ்கின்' எனப் பெயரிட்டு அவர் அண்மையில் வெளியிட்ட ஒரு போஸ்டரில், சரும பராமரிப்புக்கான தயாரிப்புகள் குறித்து அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார். நயன்தாராவே சொல்கிறார் என்றால் அதை வாங்காமல் விட்டுவிடுவோமா என அவரின் ரசிகர்கள் பலரும் வரிசை கட்டி நிற்கும் நிலையில், இந்தப் பயணம் இந்த ஆண்டில் இருந்து தொடங்கும்' என்று தெரிவித்துள்ளார்.

நயன்தாராவின் இன்ஸ்டா பதிவில், ''ஆறு வருட அயராத முயற்சியையும், அன்பையும் வெளிப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். உங்களைப் போலவே தனித்துவமான தயாரிப்புகளை மேம்படுத்துவதில் நாங்கள் எங்கள் இதயத்தைச் செலுத்தி உள்ளோம்.நானோ தொழில்நுட்பத்துடன் கூடிய இயற்கை, நவீன அறிவியலால் ஆதரிக்கப்படும் பார்முலாக்கள் உங்கள் செல்ஃப் கேரை மேம்படுத்தும்.

இந்த சுய காதல் பயணத்தில் எங்களுடன் இணைந்து ஆரோக்கியமான, ஒளிரும் சருமத்துக்கு ஹலோ சொல்லுங்கள். அற்புதமான தோல் பராமரிப்பு அனுபவத்துக்குத் தயாராகுங்கள். நாங்கள் அனைவரும் உங்கள் சருமத்தை சுய அன்பு, சுத்தமான பொருள்களால் மாற்றுகிறோம். மேலும் விவரங்களுக்குக் காத்திருங்கள். சுய அன்பு தான் சிறந்த அழகு ரகசியம் என்று நாங்கள் நம்புகிறோம்'' என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரல்.

இனியாவின் 'அனோரா ஆர்ட் ஸ்டூடியோ'

தமிழ், மலையாள திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை இனியா. கதையோடு ஒன்றி கதாபாத்திரமாக மாறி அசத்தலான நடிப்பாற்றல் மூலம் அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கும் இனியா, பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அவர் கடந்த ஆண்டு துவங்கிய ஆடை வடிவமைப்பு நிறுவனம்தான் 'அனோரா ஆர்ட் ஸ்டூடியோ'. பெண்களுக்கான ஆடைகள், உடை வடிவமைப்பு, மேக்கப், புகைப்படங்கள் எடுப்பதற்கான அரங்கம் என எல்லா வசதிகளும் ஒரே இடத்தில் வழங்குவதில் அனோரா சிறந்து விளங்குகிறது.

இதன் முதலாம் ஆண்டு விழா கொண்டாட்டம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில், திரையுலகப் பிரபலங்களுடன் சிறப்பான சந்திப்பாக அமைந்தது.

சினேகாலயா 'சில்க்ஸ்'

சென்னை தி.நகரில் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள நடேசன் பூங்காவுக்கு 'சினேகாலயா சில்க்ஸ்' என்ற பட்டுப் புடவை கடையைத் திறந்திருக்கிறார் சினேகா. இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்ததுடன், விதவிதமான பட்டுப்புடவைகளையும் பதிவிட்டு வருகிறார்.

விஜய்யின் 'தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் நடித்து வரும் சினேகாவின் 'சினேகாலயா சில்க்ஸ்'பற்றி அவரது கணவர் பிரசன்னாவிடம் பேசியபோது, ''கடந்த சில ஆண்டுகளாக மனதில் இருந்த ஒரு ஐடியாவைதான் இப்ப செயல்படுத்தியிருக்கோம். சினேகா நடித்த படங்கள்ல எல்லாமே ஹோம்லி கேர்ள் ஆகத்தான் நடிச்சிருப்பாங்க? படங்களில் அவங்க கட்டியிருக்கும் சேலைகள் ரொம்ப பிரபலமாகிடும். துணிக்கடைக்குப் போனால் கூட, 'சினேகா மேம் கட்டியிருக்கற புடவை மாதிரி எடுங்க' என்று கேட்டு வாங்குவாங்க? அதிலும் பச்சைக் கலர் இன்னும் பிரபலம்.

'சினேகா க்ரீன்'னு சொல்லியே கேட்பாங்க? நாங்களும் வெளியே எங்காவது போனால் கூட அவங்ககிட்ட 'உங்க புடவை நல்லா இருக்கே? எங்கே வாங்குனீங்க?' என்று கேட்டுப்பாங்க? இதை எல்லாம் பார்க்கும் போதுதான், இப்படி ஒரு ஐடியாவே எங்களுக்கு தோணுச்சு. உடனே செயல்படுத்திடலை. ரெண்டு வருஷமாகவே இது விஷயமா நிறைய ரிசர்ச் பண்ணினோம். தமிழகம் மட்டுமல்லாமல், பட்டுக்கு எங்கெல்லாம் ஃபேமúஸா அங்கே எல்லாம் விசிட் அடிச்சோம்.

காஞ்சிபுரம், ஆரணி, பனாரஸ் பட்டுப் புடவைகள் மற்றும் சின்னாளப்பட்டி புடவைகள் எங்கெல்லாம் சிறப்போ, அந்த இடங்களுக்கு போயிட்டு, அங்குள்ள நெசவுகளில் எப்படி நெய்யுறாங்க, அந்த தறியில் என்ன சிறப்பு... என நெசவாளர்களிடம் பேசினோம். அவர்கள் சொன்ன விஷயங்கள் அத்தனையும் பிரமிக்க வெச்சிடுச்சு. அதன்பிறகே கடை திறக்கலாம்னு திட்டமிட்டோம்'' என்றார்.

'காஜல் பை காஜல்'

நடிகை காஜல் அகர்வால் சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாக நடித்து வருகிறார். 2020-இல் அவர் கெளதம் கிச்லு என்பவரை காதலித்து, திருமணம் செய்துகொண்டார். நீல் கிச்லு என்ற ஆண் குழந்தையும் இருக்கிறது.

பிரசவத்துக்குப் பிறகு எடையை மீண்டும் குறைத்து, தற்போது நடிப்பை மீண்டும் தொடங்கி இருக்கிறார் காஜல். அவர் 'இந்தியன் 2' படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். தற்போது அவர் ' காஜல் பை காஜல்' என்ற பெயரில் அவர் அழகுசாதனப் பொருள்கள் விற்கத் தொடங்கி இருக்கிறார்.

''கணவர் உதவி இல்லாமல் இந்தத் தொழிலை என்னால் தொடங்கி இருக்க முடியாது'' என்று காஜல் அகர்வால் தெரிவித்து உள்ளார். அவருக்கு சக நடிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.