முகப்பு
தினமணி கதிர்

தென்னாட்டு ஜான்சிராணி

கடலூர் அஞ்சலை அம்மாள் தற்போது பேசப்படுவராக இருக்கிறார். யார் இந்த அஞ்சலை அம்மாள்?

Updated On : 3 நவம்பர், 2024 at 6:44 PM
அஞ்சலை அம்மாள்
பகிர்:
Updated On : 3 நவம்பர், 2024 at 6:43 PM

கடலூர் அஞ்சலை அம்மாள் தற்போது பேசப்படுவராக இருக்கிறார். யார் இந்த அஞ்சலை அம்மாள்?

1890 ஜூன் 1-இல் அம்மாகண்ணு- முத்துமணி தம்பதிக்கு மகளாகப் பிறந்த இவர், திண்ணைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். அப்போதே அக்கால அரசியலையும் ஆங்கிலேயரின் அடக்குமுறை குறித்தும் அறிந்த அவர் சுதந்திரப் போராட்டங்களிலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார்.

1908-இல் முருகப்பா என்பவரை திருமணம் செய்துகொண்ட அஞ்சலை, கணவரோடு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். சென்னை சைதாப்பேட்டையில் தங்கி நெசவுப் பணியை மேற்கொண்ட இருவரும், தாங்கள் நெசவு செய்த துணிகளையும் பெரியார் ஈ.வே.ரா.வுடன் சென்று ஊர், ஊராக விற்பனை செய்தனர்.

Advertisement

மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்த அஞ்சலை, அந்த இயக்கத்தில் பங்கேற்ற 'தென்னிந்தியாவின் முதல் பெண்மணி' என பெருமைக்குச் சொந்தக்காரனார்.

அரசியல் வாழ்க்கையில் அஞ்சலை செய்த பணிகளும் தியாகங்களும் ஏராளம்.

1857 சிப்பாய் கிளர்ச்சியின்போது, சிப்பாய்களையும் பொதுமக்களையும் கொன்று குவிக்கக் காரணமாக இருந்த ஆங்கிலேய படைத் தளபதி ஜேம்ஸ் நீலின் நினைவாக மௌண்ட் சாலையில் அமைக்கப்பட்டிருந்த அவரது சிலையை அகற்றக் கோரி நடைபெற்ற நீல் சிலை சத்தியாகிரகத்திலும் அஞ்சலை- முருகப்பா தம்பதியினர் தங்களின் மகளுடன் பங்கேற்றனர். அப்போது, நீல் சிலையை உடைத்ததற்காக ஓராண்டு சிறை தண்டனை பெற்றார் அஞ்சலை.

கர்ப்பிணியாக இருந்தபோது உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று ஆறு மாதம் சிறைத்தண்டனையைப் பெற்று, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நிறைமாதக் கர்ப்பிணியான அஞ்சலை சிறை விடுப்பில் வெளியே வந்து குழந்தையைப் பெற்றார். பின்னர், பதினைந்து நாள் கைக்குழந்தையுடன் மீண்டும் சிறைக்குச் சென்றார். பல போராட்டங்களில் பங்கேற்ற அஞ்சலை, பலமுறை கடுங்காவல் தண்டனையும் பெற்றுள்ளார்.

Updated On : 3 நவம்பர், 2024 at 6:43 PM

1931-இல் சென்னையில் நடைபெற்ற அனைத்திந்திய மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்கு, அஞ்சலை தலைமை தாங்கினார். 1934-இல் தமிழ்நாடு வந்த மகாத்மா காந்தி, அஞ்சலையை சந்திக்க விரும்பினார். ஆங்கிலேய அரசு தடை விதித்ததால், பர்தா அணிந்து வந்து காந்தியை சந்தித்தார் அஞ்சலை. இவரது வீரத்தையும் தீரத்தையும் கண்டு வியந்த காந்தியடிகள், 'தென்னாட்டு ஜான்சிராணி' என புகழ்ந்தார்.

1937, 1946, 1952 என மூன்று முறை சென்னை மாகாண சட்டப் பேரவை உறுப்பினராக, கடலூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சலை, தன்னுடைய பதவிக்காலத்தில் கடலூரின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும் வகையிலும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினார் .

காங்கிரஸூக்காக அரும்பணியாற்றிய அஞ்சலை தான் குடியிருந்த வீட்டையும் அடகு வைத்து கட்சிப் பணிக்காகச் செலவு செய்தார். வீடு ஏலத்துக்குச் சென்றநிலையில் கட்சியினர் அந்த வீட்டை மீட்டனர். மீட்ட வீட்டை அஞ்சலையின் பெயரில் மீட்டு எழுதி வைத்தால், அடகு வைத்து விடுவார் என அவருடைய இரண்டு மகன்களான காந்தி, ஜெயவீரன் ஆகியோர் பெயரில் எழுதி வைத்தனர்.

சிதம்பரத்தை அடுத்துள்ள சி. முட்லூர் கிராமத்தில் தனது மூத்த மகன் காந்தியுடன் வசித்த அஞ்சலை, அங்கு வேளாண்மைப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். பின்னர் அதே ஊரில் 1961 பிப்ரவரி 20-இல் தனது 71-வது வயதில் காலமானார் அஞ்சலை. இவரது நினைவாக, கடலூரில் அவரது திருவுருவச் சிலையை கடந்த ஆண்டில் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.