முகப்பு
தினமணி கதிர்

பச்சைப்பட்டு பரிவட்டம்

தேவராஜப் பெருமாள் கோயிலின் பச்சைப்பட்டு பரிவட்டம்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 4:05 AM
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 8:10 PM

தேவராஜப் பெருமாள் கோயிலின் பச்சைப்பட்டு பரிவட்டம்.

சிரத்தில் அந்தப் பரிவட்டம் பளபளக்க, கழுத்தில் அந்தக் கம்பீரமான யானை வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாளுக்கு அணிவிக்கப்பட்ட ஐந்தடி உயரச் சம்பங்கிப்பூ மாலை மணம் பரப்ப, நான் தீர்த்தம், சடாரி வாங்கப் போகிற நினைப்பே ஒரு சிலிர்ப்பைக் கொடுத்தது.

தேவராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாள் மாலை யானை வாகனம் ஊர்வலம் வருவதற்கான செலவுக்காக வருடாவருடம் ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுக்கின்ற என் நண்பனுக்குப் பதில், ஒரு ரூபாய்கூடக் கொடுக்காத, கொடுக்க வழி இல்லாத எனக்குப் பரிவட்டமும், மாலையும்...

Advertisement

மறக்காமல் செல்போனில் போட்டோ எடுக்கும்படி ஜானகியிடம் சொல்ல வேண்டும்.

'தேங்க் யூ வெரி மச் நண்பா...!' என்ற எனது மானசீக நன்றியறிவிப்புக்கு உரியவனாகிய நண்பன் சாரங்கபாணியிடமிருந்து கொஞ்சநேரம் முன்பு அந்த செல்போன் அழைப்பு வந்ததிலிருந்து என் மனசு இருப்புக்கொள்ளாமல் அலைந்தது.

'டேய் முரளி, ஒரு ஹெல்ப்டா...'

செல்போனின் மறுமுனையில் சாரங்கபாணி, என் நண்பன், சிங்கப்பூர்வாசி.

'சொல்லு சாரங்கா...' என்றேன், என்ன கோரிக்கையோ என்ற மர்மம் விலகாமல்.

'இப்போ என்னால இந்தியாவுக்கு வரமுடியாது. இன்னும் ஒரு மாசம் நான் ரொம்ப பிஸி. எனக்குப் பதிலா இந்த வருஷம் பெருமாள் கோயில் யானை வாகனம் உற்சவத்தை நல்லபடி நடத்தி வைப்பது உன் பொறுப்பு. கோயில் இ.ஓ.வுக்கும், பட்டாச்சாரியாருக்கும் போன் பண்ணிச் சொல்லியாச்சு. பரிவட்டம், மாலை மரியாதையையும் நீயே வாங்கிக்கிட்டு, கொஞ்சம் துளசி, கல்கண்டு மட்டும் எனக்கு கூரியர் பண்ணிடுடா. ஓக்கே? அப்புறம், உன் பேங்க் அக்கவுண்ட் டீட்டெயில்ûஸ வாட்ஸப் பண்ணு. உற்சவத்துக்குத் தேவையான அமெளண்ட்டை அனுப்பி வெச்சுடறேன்...'

'என்னப்பா சொல்றே?' என்று நான் கேட்பதற்குள், 'அப்புறம் பேசறேன்...' என்று அழைப்பைத் துண்டித்துவிட்டிருந்தான் சாரங்கபாணி.

தேவராஜபுரம் பங்களாத் தெருவுக்கு வந்திருக்கீறீர்களா? எங்கள் ஊரிலேயே பெரிய வீடு அந்தத் தெருவில்தான் இருக்கிறது. முன்சீஃப் பங்களா என்றும் அதை அழைப்பார்கள்.

சற்று முன்பு சிங்கப்பூரிலிருந்து பேசினானே அந்த சாரங்கபாணியின் தாத்தா ரங்கசாமிதான் அந்த முன்சீஃப். வெள்ளைக்காரன் காலத்து முன்சீஃப்.

முன்சீஃப் ரங்கசாமி ஐயங்கார் காலத்தில் அந்தக் குடும்பத்தின் வருமானத்துடன் மரியாதையும், கெளரவமும் ஊர்மக்களிடையே வளரத் தொடங்கியது. வாசலுக்கும் தோட்டத்துக்குமாய் நூற்றைம்பது அடி நீள அனகோண்டாவாக இருந்த அவர்களுடைய அரதப்பழசான ஓட்டு வீடு கொஞ்சம் கொஞ்சமாகக் கடப்பைக் கல் தரையும், பர்மா தேக்கு வைத்து இழைத்த வாசற்படிகளும், கப்பல் அசைவது போலத் திறக்கின்ற பிரம்மாண்ட கதவுகளும் கொண்டதொரு பங்களாவாக வளர்ந்து விசுவரூபம் எடுத்தது.

முன்சீஃப் ரங்கசாமி வாழ்ந்து வந்த கவரைத்தெருவும் நாளடைவில் பங்களா தெரு என்ற சாஸ்வதமான பெயரைப் பெற்றுவிட்டது.

எங்களது கற்பனைக்கும் எட்டாத அந்தக் கனவு மாளிகைக்குள் ஒரு முறையேனும் நுழைந்து பார்த்துவிடவேண்டுமென்பதே என்னைப் போன்றவர்களின் சிறுவயதுக் கனவாக இருந்தது.

வீட்டுவாசல் போர்ட்டிகோவில் எப்பொழுதும் தயாராக நிற்கும் இரட்டைக் குதிரை பூட்டிய வண்டி 'ஜல் ஜல்' என்று கிளம்பவும், ஊர் ஜனங்கள் தெருக்களின் இரண்டு பக்கமும் ஒதுங்கி வழி விடுவது அன்றாட நிகழ்ச்சியாக இருக்கும் என்று என் அப்பா கதைகதையாகச் சொல்லியிருக்கிறார்.

சாரங்கபாணியின் முன்சீஃப் தாத்தா வாழ்ந்த காலத்திலும், அதற்குப் பிறகும், எந்த வேலைக்கும் போகாமலிருந்த சக்கரபாணி, அதாவது என் நண்பன் சாரங்கபாணியின் அப்பா, நீல நிறத்தில் ஒரு நீண்ட காரை வாங்கினார். எம்.கே.தியாகராஜ பாகவதர் வைத்திருந்ததாக நம்பி வாங்கிய அந்த பிளைமவுத் கார் பங்களாவின் போர்ட்டிகோவில் நிற்க ஆரம்பித்தபிறகு குதிரை வண்டி அந்த பங்களாத் தோட்டத்தின் ஒரு மூலையில் செல்லரித்துக் கிடக்க, குதிரைகள் இரண்டும் வேறு யாருக்கோ சொந்தமாகி, உடல் மெலிந்து, திருவிழாக்களில் சலங்கை கட்டிய முன்னங்கால்களை உயர்த்தி நடனமாடித் தங்கள் எஜமானனின் வயிற்றை நிரப்பத் தொடங்கின.

வேலைக்குப்போகாமல் சதா வெற்றிலை சீவல் போட்டுக்கொண்டு உட்கார்ந்து சாப்பிட்ட சொத்து எவ்வளவு நாளைக்கு வரும். முன்சீஃப் ரங்கசாமி மறைந்த பத்தே வருஷங்களில் நிலபுலன்கள் அரை விலைக்கு விற்கப்பட, நகை நட்டுகள் பாங்கில் அடகு வைக்கப்பட்டு வங்கிகளின் கனத்த பீரோக்களில் சிறிது காலம் உறங்கிய பின்பு ஏலம் விடப்பட்டன.

பெயிண்ட் அடிக்கத் தேவையான பணம் இல்லாததால் கம்பீரம் குறைந்துபோய் ஒரு வயசான சிங்கம் போன்று காட்சிதந்துகொண்டிருந்த பங்களாவையும் யாரிடமாவது தள்ளிவிடலாம் என்று சக்கரபாணி ஐயங்கார் யோசிக்கத் துவங்கிய காலத்தில் என் நண்பன் சாரங்கபாணி கல்லூரிப் படிப்பை முடித்து சென்னையில் வேலை ஒன்றில் அமர்ந்ததால் அந்த பங்களா தப்பியது.

சாரங்கபாணியும் நானும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். பள்ளிக்கூடத்திலும், மைதானத்திலும், கடைத்தெருவிலும் மஜாவாக தோள்மீது கைபோட்டுக்கொண்டு திரிந்தவர்கள்தான். ஆனாலும் என்ன, பங்களாவுக்குள் நுழைய எனக்கும், என்னைப் போன்றவர்களுக்கும் அனுமதி கிடைத்ததேயில்லை.

என் அப்பாவுக்கு ஜவுளிக்கடையில் கணக்கெழுதும் வேலை. காலையும் மாலையும் பஜாரிலுள்ள அனுமார் கோயில் இரண்டு மணிநேரம் பூஜை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி சந்தியாவந்தனம் செய்தபின்புதான் சாப்பிடுவார். சொற்ப வருமானம். கஷ்டஜீவனம்.

ஸ்கூலிலிருந்து தோழமையுடன் என்னைத் தனது சைக்கிளில் டபுள்ஸ் ஏற்றிக்கொண்டு வரும் சாரங்கன் பங்களாவுக்குப் பத்தடி முன்னால் சடக்கென்று நிறுத்தி, 'நாளைக்குப் பாக்கலாம்டா...' என்று சொல்லி விருட்டென்று நுழைந்துகொள்வான். அப்படி ஒரு டிரெயினிங்.

கடைத்தெருவுக்குப் போகும் அவசரத்தில் இடுப்பிலிருந்து நழுவும் டிராயரை சரிசெய்வதற்காக பங்களா வாசலில் ஒரு நிமிஷம் நின்றால் கூட, 'சலோ, சலோ...' என்று கூர்க்கா விரட்டுவான்.

ஒரு விஷயம் தெரியுமோ? முன்சீஃப் ரங்கசாமி அவருடைய அப்பாவுக்கு ஒரே மகன். அடுத்த தலைமுறைக்கு ஒரே பிள்ளையாக சக்கரபாணி. சக்கரபாணி பெற்ற ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுவாக சாரங்கபாணி.

நிலம் நீச்சுகளையெல்லாம் இழந்த தன் தந்தை சக்கரபாணியின் கடைசி காலத்தில் சென்னையில் இஞ்ஜினீயர் வேலைக்குப் போன சாரங்கபாணி கல்யாணம் ஆகி, பதவி உயர்ந்து, சம்பளமும் பெருகி சிங்கப்பூரில் செட்டிலானான்.

பத்துவருடத்துக்கு முன்பு, தனிமரமாக நின்ற அம்மாவைத் தன்னுடன் சிங்கப்பூருக்கே அழைத்துக்கொண்டவன், குடியிருக்க யாருமில்லாத தன் தாத்தா காலத்து பங்களாவை ஒரு வியாபாரி குடோன் வைத்துக் கொள்வதற்காக வாடகைக்குக் கொடுத்தான். வருஷ வாடகையை ஒன்றாகச் சேர்த்துக் கணிசமான தொகையாக்கி வருடாந்திர யானை வாகனப் புறப்பாட்டினை கச்சேரி, பேண்டு வாத்தியம், செண்டை மேளம், கரகாட்டம், வாணவேடிக்கை என்று அமர்க்களமாகச் செய்யத் தொடங்கினான்.

நாங்களாக இருந்தால், எங்கள் வீட்டு வாசலில் கோயில், டொனேஷன் என்று யாராவது வந்து நின்றாலே கதவை இழுத்து மூடிக்கொண்டு சாயந்திரத்துக்கு மேல்தான் வெளியில் தலையைக் காட்டுவோம். மாதாந்திர குடும்பச் செலவுக்கே இழுத்துப்பிடிக்க வேண்டியிருக்கிறது. ஹூம்... எல்லாவற்றுக்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்.

அறுபது வயதுக்கு மேல் என் அப்பா பலகீனமாகிப்போய் அனுமார் கோயில் பூஜையுடன் நிறுத்திக்கொள்ள, பிளஸ்டூவில் எண்பத்தைந்து பர்ஸண்ட் எடுத்து டிகிரி படிக்க வசதியில்லாமல் போன எனக்கு அப்பா செய்த துணிக்கடை வேலை கிடைத்து, இருபத்தைந்தாம் வயதில் எங்களைவிட ஏழ்மையான ஒரு குடும்பத்தில் பெண் கிடைத்துக் கல்யாணம் செய்து கொண்டு, இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்து...

இந்தக் கதைகளையெல்லாம் கொஞ்ச காலத்துக்கு மறக்கவேண்டும் என்றுதானோ என்னவோ, நண்பன் சாரங்கபாணி மூலம் புது வாழ்வாகப் பரிவட்டமும் மாலை மரியாதையும் எனக்குக் கிடைக்கப் போகிறது.

என் நண்பன் சாரங்கபாணியின் மனசில் அந்த தேவராஜப் பெருமாள்தான் புகுந்துகொண்டு எனக்குப் பரிவட்ட மரியாதையைக் கொடுக்கச் சொல்லியிருக்க வேண்டும்.

ஒருவேளை பள்ளிக்கூடத்தில் அவனுக்குச் சரியாகப் புரிபடாமல் போன அல்ஜீப்ராவை நான் சுலபமாக உள்வாங்கிக் கொண்டு அவனுக்குப்புரியும் விதத்தில் சொல்லிக்கொடுத்ததற்கு நன்றிக்கடனாகக் கூட இருக்கலாம்.

சரி, காரணம் எதுவானால் என்ன?

சாரங்கன் பெற வேண்டிய பரிவட்டமும் மாலை மரியாதையும் இந்த வருடம் எனக்குக் கிடைக்கப் போகிறது.

விஷயத்தைக் கேட்டால் என் ஜானு ஜாலியாகிவிடுவாள். ஏன், அப்பாவும் கூடத்தான்.

சாரங்கன் தான் சொல்லியபடி யானை வாகனச் செலவுகளுக்காகச் சுளையாக ஐம்பதாயிரம் ரூபாயை அனுப்பியிருந்தான்.

ஐம்பதாயிரம்... அப்பா, அம்மா, நான், ஜானகி, என் குழந்தைகள் இருவர் அடங்கிய எங்கள் குடும்பத்துக்கு ஏறக்குறைய பத்துமாத மளிகைச்சாமான்களுக்கான தொகை.

சேச்சே... என் நண்பன் பெருமாளுக்கு உபயம் செய்கிறான். பொறாமையெல்லாம் படக்கூடாது.

பணம் வந்து சேர்ந்த மறுநாளே அத்தொகையை பேங்கிலிருந்து இருந்து எடுத்து தேவராஜஸ்வாமி திருக்கோயில் தேவஸ்தானத்தில் கொடுத்து ரசீது வாங்கிக்கொண்டு அதை என் செல்போனில் போட்டோ எடுத்து சாரங்கனுக்கு வாட்ஸப் செய்தேன். பணக்காரனின் மனசு நான் கொஞ்சம் பணத்தை முழுங்கிவிட்டதாக நினைக்கக்கூடாது அல்லவா?

தேவராஜஸ்வாமி பிரம்மோற்சவம் களைகட்டத் தொடங்கியது.

சிங்க வாகனம், சூரியப்பிரபை, ஹனுமந்த வாகனம், சந்திரப்பிரபை, யாளி வாகனம் என்று முதல் ஐந்து நாள்களிலும் மாலைநேர உற்சவங்கள் சீக்கிரம் தொடங்கி, ராத்திரி ஒன்பது மணிக்கெல்லாம் உபயதாரருக்கு மரியாதை செய்யப்பட்டுவிடும்.

ஆறாம் நாள் யானை வாகனத்தன்று கரகாட்டம் இத்தியாதி ஸ்பெஷல் ஐட்டங்கள் உண்டென்பதால் வாகனம் கோயிலுக்குத் திரும்ப இரவு பதினொன்று, பதினொன்றரை கூட ஆகிவிடும். உபயதாரருக்குப் பரிவட்டம், மாலை மரியாதை செய்யப்படும்பொழுது நள்ளிரவு மணி பன்னிரண்டைத் தொட்டிருக்கும்.

என்னுடைய ஜவுளிக்கடை முதலாளியிடம் பர்மிஷன் வாங்கி, ஏழு மணிக்கே வீடு திரும்பி, இருப்பதற்குள் சுமாரான ஒன்பது முழம் மயில்கண் வேஷ்டியையும், அங்கவஸ்திரத்தையும் எடுத்து உடுத்திக்கொண்டேன்.

'ஜானு, எதுக்கும் ரெண்டு பாத்திரங்களை எடுத்துக்கோ. உபயதாரருக்குப் புளியோதரை, சர்க்கரைப்பொங்கல் பிரசாதம் கொஞ்சம் ஜாஸ்தியாகவே கிடைக்கும்' என்று மனைவியை உஷார்படுத்தினேன்.

அப்பா அனுமார் கோயிலிலிருந்து வந்த கையோடு ராத்திரி பலகாரம் சாப்பிட்டுவிட்டு ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கிப்போய்விட்டார்.

மணி பத்தைத் தொடும் முன்பு ஜானு எங்கள் கல்யாணத்துக்கு வாங்கிய கூறைப்புடவையுடன் தயாராகிவிட, ஐந்து வயசு, மூன்று வயசுக் குழந்தைகள் இரண்டையும் தூக்கத்திலிருந்து எழுப்பி அழைத்துக்கொண்டு, வீட்டை வெளிப்பக்கமாகப் பூட்டிக்கொண்டு இருவரும் தேவராஜஸ்வாமி திருக்கோயிலுக்குக் கிளம்பினோம்.

யானை வாகனம் கோயிலுக்குத் திரும்ப பதினொன்றரை ஆகிவிட்டது. பெருமாளை வாகனத்திலிருந்து இறக்கிக் கருவறைக்கு எழுந்தருளப்பண்ண பன்னிரண்டைத் தொட்டது.

இதோ அந்தப் பொன்னான தருணம்...

'வாப்பா முரளி!' என்று என்னை அழைத்த பட்டாச்சாரியார் வருஷாவருஷம் சாரங்கனின் தலையை அலங்கரிக்கும் பச்சைப்பட்டு பரிவட்டத்தை எனக்கு அணிவித்து, ஐந்தடி நீள சம்பங்கி மாலையையும் எனது கழுத்தில் அணிவித்தார். சற்றே நீளமான பூச்சரத்தைக் ஜானுவுக்குக் கொடுத்தார். தீர்த்தப் பிரசாதமும், சடாரியும் பெற்றுக்கொண்ட தருணத்தில் என்னுடைய மெய்சிலிர்த்தது நிஜம்.

குழந்தைகள் என் கழுத்தில் விழுந்த மாலையைத் தொட்டுத் தொட்டு சந்தோஷப்பட்டுக்கொண்டன. அதுகளுக்கும் கொஞ்சம் புஷ்பத்தையும் ஆளுக்கொரு வாழைப்பழத்தையும் பட்டாச்சாரியார் கொடுத்தார்.

'பிரசாதத்துக்குப் பாத்திரம் கொண்டுவந்திருக்கியாப்பா?' என்று கேட்ட பட்டாச்சாரியாரின் தட்டில் என் ஆயுசிலேயே முதன் முறையாக நூறு ரூபாயைச் சமர்ப்பித்தேன்.

பிரசாதங்கள் நிரம்பிய பாத்திரங்களுடன் கோயிலை விட்டு வெளியில் வந்தபொழுது, 'ஏங்க, நிஜத்துல நாமெல்லாம் உபயதாரர் ஆகமுடியாதா?' என்றாள் ஏக்கத்துடன்.

'பைத்தியம். அம்பதாயிரத்துக்கு நாம் எங்கே போறது? நம்ம பசங்க தலையெடுத்து எக்கச்சக்கமா சம்பாதிச்சாதான் முடியும்...'

பிரம்மோற்சவப் பந்தலைத் தாண்டி நிறுத்தியிருந்த என் வண்டியில் ஆரோகணித்தோம். எனக்கும் ஜானுவுக்கும் நடுவில் குழந்தைகள் கோழிக்குஞ்சுகளாய் ஒடுங்கியிருந்தன.

வண்டியைக் கிளப்பினேன்.

வீட்டின் கதவைத் திறந்து நுழைந்து, குழந்தைகளைப் பாயில் கிடத்தி, கையொடு கொண்டு வந்திருந்த பிரசாதங்களைப் பொழுது விடிந்து காலை டிபனுக்கு வைத்துக்கொள்ளலாம் என்று ஏகமனதாகத் தீர்மானித்துவிட்டு படுக்கையில் உடம்பைக் கிடத்துகையில் மணி ஒன்றரை.

ஹாலில் உள்ள கயிற்றுக்கட்டிலில் இருந்து அப்பாவின் குறட்டை ஒலி ஒரே சீராகக் கிளம்பி வந்ததுகொண்டிருந்தது.

ராத்திரி நிசப்தத்துக்கு வலிக்காமல், 'ஏங்க, அப்பாவையும் கோயிலுக்குக் கூட்டிப்போயிருந்தால் பரிவட்ட மரியாதையை அவருக்கே செய்யச் சொல்லியிருக்கலாம் இல்லே?' என்று கேட்டாள் என் பிரியத்துக்குரிய ஜானு. எனக்கு திடுக்கிட்டது!

எத்தனையோ நல்ல யோசனைகள் ஜானுவுக்கு உதிப்பது, என் மரமண்டைக்கு ஏனோ உரைப்பதில்லை. அவற்றில் இது லேட்டஸ்ட் என்று நினைத்தபடியே, 'ஆமாம் ஜானு!' என்றேன்.

பெருமூச்சும் குறட்டையும் ஒரே நேரத்தில் கிளம்ப, அப்படியே நித்திரையில் ஆழ்ந்தேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.