FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

ஜெய்சங்கர் - நான் சந்தித்த பிரபலங்கள் - 58

ஜெய்சங்கர் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...

Updated On : 17 மே 2026, 4:02 am IST
பகிர்:

மக்கள் கலைஞர், ஜேம்ஸ்பாண்ட் நடிகர் என்றெல்லாம் பெயர் பெற்ற சங்கர், கும்பகோணத்தைப் பூர்விகமாகக் கொண்டு திருநெல்வேலியில் குடியேறிய சுப்பிரமணிய ஐயருக்கும் யோகம்பாளுக்கும் 1938, ஜூலை 12 -இல் பிறந்தார்.

சென்னையில் பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு முடித்து, சட்டக்கல்லூரியில் இருந்து பாதியில் விலகி, சோவின் விவேகா ஃபைன் ஆர்ட்ஸிலும், கூத்தபிரானின் கல்கி ஃபைன் ஆர்ட்ஸிலும் நாடகங்களில் நடித்தார்.

சிட்டாடல் ஸ்டூடியோ அதிபர் ஜோசப் தளியத், சங்கராக இருந்தவரை முதன்முதலாக 'ஜெய்சங்கர்' என்று மாற்றி, 'இரவும் பகலும்' என்ற முதல் படத்திலேயே இரட்டை வேடத்தில் அறிமுகப்படுத்தினார். பின்னர் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தார்.

Advertisement

Advertisement

'தெய்வம் வரம் கொடுத்தாலும் பூசாரி தடை செய்வான்' என்பது எல்லா இடங்களிலும் இன்றுவரை பொருந்தும்

பழமொழிதான். எனக்கும் திருலோகசந்தருக்கும் இடையே சில பொறாமைப் புதர்கள், பூங்காவாக இருந்த நட்பைப் புழுதியாக்கினார்கள். நான் யாருக்காகவும் என் தன்மானத்தை விட்டுக் கொடுத்து, அதனால் வரும் தங்கப்பதக்கமாக இருந்தாலும் அதைத்

தவிடாக நினைப்பவன். அவரை விட்டு வெளியே வந்தேன்.

நாடகம், பாடல், கதை, வசனம் எல்லாம் எழுதியாகிவிட்டது. இனிமேல் உயரே போக இரண்டே படிகள்தான். ஒன்று இயக்கம், இரண்டு தயாரிப்பு. இவை இரண்டையும் நான் கையில் எடுத்தேன். எனக்குப் பேரும் புகழும் வாழ்வும் தந்த 'அச்சாணி'யை தமிழில் எடுக்க முடிவு செய்தேன். மேலூர் மீனாட்சி சுந்தரம் கணேஷ் தியேட்டர் முதலாளி எனக்குக் கருணை புரிந்தார்.

இதில் ஹீரோவாக நடிக்க, இதுவரை என் படங்களில் நடிக்காத ஜெய்சங்கரை நேரில் சந்தித்தேன். அவரிடம் என் முதல் பட முயற்சியைச் சொன்னேன். எனக்கு வாழ்த்துச் சொன்னார்.

அடுத்த நிமிடமே, 'காரைக்குடி, உங்கள் நாடகத்தை நான் பார்த்து விட்டேன். அது அருமையான கருத்துள்ள ஒரு குடும்பக் கதை. ஆனால், அதில் நான் நடித்தால் சரியாக வராது. நான் ஒரு பொழுதுபோக்கு ஹீரோ. அப்படி ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள். எனக்குப் பணமே தரவேண்டாம், நடிக்கிறேன். உங்கள் படங்களில்தான் முத்துராமன் நடிக்கிறாரே... அவரை ஹீரோவாகப் போடுங்கள். நான் அவருக்கு போன் செய்து சொல்லட்டுமா?' என்றார்.

'நான் உங்களுக்குப் பணம் தரமாட்டேன் என்று சந்தேகப்படுகிறீர்களா?' என்று கேட்டேன்.

'நிச்சயம் இல்லை' என்றார்.

'அப்படியானால் என் படத் துவக்க விழாவுக்கு வருவீர்களா?' என்று கேட்டேன்.

'கண்டிப்பாக வருவேன்' என்றார். அதேபோல வந்து எல்லோரையும் வாழ்த்திவிட்டுப் போனார்.

இன்னொரு தடவை நான் மதுரையில் இருந்தபோது அவர் ஒரு விழாவுக்கு வந்தார். நான் இருப்பது தெரிந்து என்னை அவருடன் பாண்டியன் ஹோட்டலில் தங்கச் சொல்லி, சென்னைக்கு நான் எடுத்து வைத்திருந்த ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்து, அவருடன் பிளேனில் கூட்டி வந்தார்.

அன்று முதல் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31-ஆம் தேதி வந்தால், புது வருடப் பிறப்புக்கு நடிகர் அசோகன் என் வீட்டுக்கு வந்து, அவர் காரில் என்னை சாந்தோம் சர்ச்சுக்குக் கூட்டிச் சென்று, அடைக்கலம் பாதிரியாரை ஆசிர்வதிக்கச் சொல்லி, ஜெய்சங்கர் வீட்டுக்குக் கூட்டிச் செல்வார்.

'இவ்வளவு நட்புப் பாராட்டும் நீங்கள், ஏவி.எம். தயாரிப்பு, எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் நான் எழுதப்போகும் தொடரில் அப்பாவாக நடிக்க வேண்டும்' என்று கூறினேன்.

'ஹீரோவாக இருந்த என்னை ஏவி.எம். சரவணன் வில்லனாக்கினார். நீங்கள் அப்பாவாக்குகிறீர்கள். சரி, நீங்கள் எழுதப்போகும் 'நேற்றைய மனிதர்கள்' சீரியலில் நடிக்கிறேன்' என்றார்.

என் 58 ஆண்டுகால திரை உலக அனுபவத்தில் மனதில் ஒன்றை வைத்து வெளியில் ஒன்று பேசும் எத்

தனையோ ஹீரோக்களைச் சந்தித்திருக்கிறேன். அவர் ஒளிவு மறைவில்லாத, மனதில் சிறிதும் போலித்தனம் இல்லாத புகழ்பெற்ற நட்சத்திரம். இவரால் முடிந்த உதவிகளைச் செய்ய நினைப்பார். இவர் சொன்னபடி இவர் மகன் விஜயசங்கர் ஏழைகளுக்கு இலவச கண் அறுவைச்சிகிச்சைகளை ஜெய்சங்கர் அறக்கட்டளை மூலம் செய்து வருகிறார்.

ஜெய்சங்கர் மாரடைப்பால் 2000, ஜூன் 3-இல், தன் 62 வயதில் மரணமடைந்தார். ஏவி.எம். சரவணன் சாருடன் சென்று நான் என் அஞ்சலியைச் செலுத்தினேன். அவர் வாழ்ந்த நுங்கம்பாக்கம் காலேஜ் ரோடு ஜெய்சங்கர் சாலையாக மாற்றப்பட்டது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments