ஹாலிவுட்டில் பயிற்சி, அம்மாவின் சிபாரிசு... விஜய் நேர்காணல் - 3!
முதல்வர் விஜய் பிறந்த நாளையொட்டி... சினிமா எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த நேர்காணலில் அவர் அளித்த பதில்கள்...
இரண்டு இயக்குநர்களை தாயும் தந்தையுமாக அடையப்பெற்ற ஒரு ஹீரோ. சர்வதேசச் சினிமாவைக் கணக்கெடுத்தாலும் இருப்பது அரிது. அப்படி இரண்டு திரிசூலங்கள் ஈன்ற வடிவேலாக வந்திருப்பவர் விஜய். அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன் டைரக்டர் Cum திரைக்கதை - வசனகர்த்தா, அம்மா ஷோபா கதாசிரியை cum டைரக்டர்!
அப்பா 'படி' என்றார்; அம்மா 'நடி' என்றார். விஜய் என்ன செய்தார்? இருவருக்கும் கீழ்ப்படிந்தேன். அப்பா சொற்படி படிக்கவும் செய்கிறேன். அம்மா சொன்னபடி நடிக்கவும் செய்கிறேன். அதாவது படித்துக் கொண்டே நடிக்கிறேன்" என்றார் சிரித்துக் கொண்டே விஜய். அம்மா எழுதின கதையில் அப்பாவின் இயக்கத்தில் 'நாளைய தீர்ப்பு' படத்தில் இந்த இளைஞர் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தன்னை குறித்து எழும்பி மறைந்த கருத்து வேறுபாட்டினை பற்றி விஜய் கூறுகையில்-
டாக்டரா? நடிகனா?
Advertisement
Advertisement
"என்னைப் படிக்க வைத்து டாக்டராக்க வேண்டுமென்பது அப்பாவின் ஆசை. ஏனென்றால், பெரியப்பா பிள்ளைகள், சித்தப்பா பிள்ளைகள் அனைவரும் நன்றாகப் படித்தவர்கள், இன்ஜினீயர்கள். இவர்களைப் பார்த்து என் அப்பாவுக்கு இந்த ஆசை வந்ததில் தப்பில்லை. ஆனால், எனக்கோ நடிக்க வேண்டுமென்பதில், அதிலும் ரஜினிகாந்த், விஜயகாந்த் போல் ஆக்ஷன் ஹீரோவாக வேண்டுமென்ற ஆசை.
ஏற்கனவே, சினிமாவில் அப்பா-அம்மா சம்பந்தப்பட்ட துறைகளில் கொஞ்சம் கொஞ்சம் கலந்துகொண்டதால் ஏற்பட்ட பரிச்சயமும் என்னிடம் இருந்தது. மேலும் நான் சிறுவனாக இருக்கும்போதே அப்பாவின் 'நீதிக்குத் தண்டனை' படத்திலும் நடித்திருக்கிறேன். அப்பொழுது என்னை நடிக்க விட்டுவிட்டார்!"
அப்பா - அம்மா - சினிமா
ஏன் சார். பெரியப்பா, சித்தப் பா பிள்ளைகளைப் பார்த்து என் னைப் படிக்க வைக்க வேண்டு மென்று விரும்புகிறாரே இவர் மட்டும் ஏன் சினிமா தொழிலுக்கு வரவேண்டும்? அண்ணன் தம்பி யைப் போல வேறு தொழிலில் இருந்திருக்கலாமே? அப்பாவும் அம்மாவும் சினிமாவில் இருக்கலாம். நான் கூடாதா?
'முதலில் என் எண்ணத்துக்குச் செவி சாய்ப்பது போல்," ஆக்ஷன் ஹீரோ என்று ஆசைப்பட்டால் போதுமா, அதற்கான பயிற்சி வேண்டும். உடலில் வலிமை சேர்க்க வேண்டும்" என்றார். நான் +2 படித்துக் கொண்டே ஹார்ஸ் ரைடிங். மோட்டார் சைக்கிளிங், கராத்தே, ஜிம், சிலம்பம், டான்ஸ் என்று பலவாறு ஈடுபட்டு என்னை தகுதியுடையவனாக்கிக் கொண்டேன்.
ஹாலிவுட்டில் பயிற்சி?
"பிளஸ் டூ முடித்தவுடன் மேலும் என் தகுதியை வளர்த்துக் கொள்ள ஹாலிவுட் செல்ல விரும்பினேன். இந்த எண்ணம் ஈடேற அம்மாவின் பங்கு அதிகமானது. மேல்நாட்டில் கலைப் பயிற்சி என்பதால் அப்பாவும் ஒப்புக் கொண்டார். 1991-ல் ஹாலிவுட் (லாஸ் ஏஞ்செல்ஸ்) சென்று காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் டிராமா கோர்ஸில் சேர்ந்தேன். பெரியப்பா மகள் வீட்டில் தங்கிக் கொண்டேன்.
நான் போய் சில மாதங்களில் அங்கே லாஸ்ஏஞ்செல்ஸில் அமெரிக்க நீக்ரோ பிரச்னை ஏற்பட்டு இரு இனத்தாருக்குமிடையே மோதல் தொடங்கியது. மேலும் மேலும் தீவிரமானதே தவிர, குறையவில்லை. கலவரங்கள், சூறையாடல்கள், ரத்தக்களரிகள் எங்கும். வெளியே தலை காட்ட முடியவில்லை. எனக்கு உதறல். அம்மாளிவிடம் மட்டும் போனில் தொடர்பு கொண்டு தெரிவித்துவிட்டு, திடீரென்று புறப்பட்டுத் திரும்பி வந்து விட்டேன்.
அப்பாவுக்கு அதிர்ச்சி, அதே நேரத்தில் ஆனந்தம், 'இனி மேலாவது படி' என்று கூறி, லயோலா காலேஜில் அரும்பாடுபட்டு 'சீட்' வாங்கிக் கொடுத்தார். பி.எஸ்.ஸி விஷூவல் கம்யூனி கேஷன் கோர்ஸில் சேர்ந்தேன்.
அம்மா சிபாரிசு
’அந்த நேரத்தில் அம்மா எழுதிய 'நாளைய தீர்ப்பு' கதைக்கு ஆப்டான. கல்லூரி மாணவர் தோற்றமுள்ள, சுமார் 18 வயதுள்ள ஹீரோவைத் தேடிக் கொண்டிருந்தார் அப்பா. விஷயம் தெரிந்தவுடன் அப்பாவிடம் என் விருப்பத்தைச் சொல்லத் தயங்கினேன். அம்மாவிடம் சொன்னேன். அவர் தலையாட்டினார். ஹீரோ கிடைக்காத சூழ்நிலையில் அப்பா தவித்துக் கொண்டிருந்தபொழுது அம்மா நைஸாக, 'வெண்ணையை கையில் வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவாங்களா? நீங்க நினைக்கிற ஹீரோ நம்ம வீட்டிலேயே இருக்கானே - பெயர் விஜய், என்று பரிந்துரை செய்ய, வேறு எந்த வழியும் தெரியாமல், அம்மா என்ற முறையில் அல்லாமல், படத்தின் கதாசிரியையின் தேர்வு என்ற முறையில் அந்த யோசனையை ஏற்றுக் கொண்டார். ஆனால் என்னை நடிக்க வைப்பதற்காக காலேஜில் இரண்டு மாதம் விடுப்பு எடுப்பதற்குள் நொந்து போய்விட்டார் அப்பா பாவம். நடித்து முடித்தவுடன் படிப்பைத் தொடர வேண்டும் என்கிற பலத்த நிபந்தனையின் பேரில்தான் என்னை நடிக்க வைத்திருக்கிறார் ‘ என்றார். பதினெட்டு வயது முடிகிற விஜய் ஐந்தடி ஒன்பது அங்குல உயரமுள்ளவர்.
அப்பாவின் டைரக்ஷனில் நடிக்கும் போது உங்களுடைய நிலை எப்படி?
மரியாதை உண்டு பயம் இல்லை. எனக்கு எந்தவிதமான உதறலும் கிடையாது. வீட்டில் எனக்கு அப்பா ஃப்ரண்ட் மாதிரி. அவர் டைரக்டர் என்கிற முறையில் மரியாதை உண்டு. ஆனால் பயம் கிடையாது. மேக்கப் போட்டு செட்டுக்குள் நுழைத்துவிட்டால். அப்பாவாவது பிள்ளையாவது. நான் ஒரு முழுமையான நடிகன். அவர் ஒரு கண்டிப்புமிக்க டைரக்டர். படப்பிடிப்பில் மூழ்கிவிட்டால் எதிரே நிற்கும் ஆள் கூட அவருக்குத் தெரியாது. இது எனக்குத் தெரிந்த விஷயம். எந்தச் சலுகையையும் எதிர்பார்க்காமல் அவர் நினைக்கிறபடி நடித்துக் கொடுப்பதில் குறியாக இருப்பேன். மேலும் இப்படத்தில் நான் ஒரு ஆக்ஷன் ஹீரோ, எனக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி. ஈஸியாக செய்கிறேன். ஐம்பதடி உயரத்திலிருந்து குதிக்க வேண்டிய ஒரு காட்சி, நானே குதித்தேன். சண்டைக் காட்சியில் டூப் போட்டுக் கொள்ளவில்லை -என்று விஜய் கூறிக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த அவருடைய தந்தை - டைரக்டர் சந்திரசேகரனிடம் விஜய்யின் நடிப்பைப் பற்றி கருத்துக் கேட்டோம்.
தந்தையின் தீர்ப்பு
நான் விஜயகாந்த், ரகுமான், நீரஜ் முதலான நடிகர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். அனைவருமே வெற்றி பெற்றிருக்கிறார்கள். விஜய்க்கும் அந்த வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன். ராதாரவி போன்ற மூத்த கலைஞர்களுடன் நடிக்க வேண்டிய காட்சிகளில் கூட கொஞ்சம் கூட தளர்ச்சியடையாமல் அனாயசமாக அவன் நடிப்பதைப் பார்த்து எனக்கே வியப்பாக இருந்தது. இதற்கு மேலும் அவனை 'உசத்தியாக கூற நான் விரும்பவில்லை. ஏனென்றால் விஜய் என் பிள்ளை.
தந்தையின் தீர்ப்பே நாளைய தீர்ப்பாகி மக்களின் தீர்ப்புமாக வாழ்த்துக்கள்.
(இமருதம்)
Training in Hollywood, Mom's recommendation to act... Vijay Interview - 3!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.