பேசும் ஓவியங்கள்...
தர்ஷினி கலைக்கூடம் சார்பில் அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் 250-க்கும் அதிகமான ஓவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
எஸ். சந்திரமெளலி
தர்ஷினி கலைக்கூடம் சார்பில் அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் 250-க்கும் அதிகமான ஓவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அதில் இடம்பெற்ற அனைத்து ஓவியங்களும் சென்னை லலித் கலா அகாதெமியின் அரங்கில் அண்மையில் காட்சிப்படுத்தப்பட்டன.
ஓவிய நிபுணர்கள் குழுவினர் மிகச் சிறந்த ஓவியங்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்க, அவற்றுக்கு விருதுகள் அளிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை நடத்திய தர்ஷினி கலைக்கூட நிறுவனர் தர்மலிங்கத்துடன் பேசியபோது:
Advertisement
'நான் சென்னை கவின் கலைக்கல்லூரியில் செராமிக் பிரிவில் பட்டப் படிப்பும், முதுகலைப் படிப்பும் முடித்தேன். 2004-ஆம் ஆண்டில் தர்ஷினி கலைக்கூடத்தைத் துவக்கினேன். டாக்டர் ஜெ. ஜெயலலிதா கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற பகுதி நேர ஓவியப் பயிற்சிக் கல்லூரியாகச் செயல்பட்டு வரும் எங்கள் கலைக்கூடத்தின் சார்பில், சுவாமி விவேகானந்தர் நினைவாக அகில இந்திய அளவிலான ஓவியப் போட்டிகளை நடத்துகிறோம். சிறந்த ஓவியங்களுக்கு விருதுகளும், பரிசுகளும், மூத்த ஓவியர்களுக்கு 'கலா துருவம்' என்ற விருதுகளும் வழங்கி வருகிறோம்.
21-ஆவது ஆண்டாக இவ்வாண்டு நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் 21 மாநிலங்களைச் சேர்ந்த 260 ஓவியர்கள் 350-க்கும் அதிகமான ஓவியங்களை அனுப்பி வைத்தனர். இவற்றில் பாரம்பரிய ஓவியங்கள், நவீன ஓவியங்கள், உயிரோவியங்கள், ஆயில் பெயிண்டிங், வாட்டர் கலர், தஞ்சாவூர், மைசூரு பாணி ஓவியங்கள், பழங்குடி இன ஓவியங்கள் உள்ளிட்ட ஓவியங்கள் இடம்பெறும்.
ஓவியப் போட்டிகள் நடத்தினால், நடுவர் குழுவினர் போட்டிக்கு வரும் ஓவியங்களில் இருந்து பரிசுக்குரிய ஓவியங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை மட்டுமே காட்சிப்படுத்தி, கண்காட்சிகளை நடத்துவார்கள். ஆனால், நாங்கள் அனைவரையும் ஊக்கப்படுத்தி, உற்சாகம் ஊட்டும் வகையில் போட்டிக்கு வரும் அனைத்து ஓவியங்களையும் காட்சிப்படுத்தி, ஓவியக் கண்காட்சிகளை நடத்துகிறோம்.
இந்த ஆண்டு கண்காட்சியில், ஓவியங்களைத் தவிர, காகிதம், சுதை, உலோகம், மரம் மற்றும் கல் ஆகியவற்றில் செய்யப்பட்ட புடைப்புச் சிற்பங்கள், பீங்கான் பொம்மைகள் உள்ளிட்ட கலைப்படைப்புகளும் பார்வையாளர்களைக் கவர்ந்தன' என்கிறார் தர்மலிங்கம்.
ஓவியர் தேவா: மதுரை டி.கல்லுப்பட்டிக்கு அருகில் உள்ள தேவங்குறிச்சியைச் சேர்ந்த ஓவியரும் திரைப்படக் கலை இயக்குநருமான தேவா வரைந்த மூதாட்டியின் ஓவியத்துக்கு உயிரோவியம் (போர்ட்ரைட்) பிரிவில் சிறந்த ஓவியத்துக்கான விருதும் கிடைத்தது. அவர் கூறியது:
'சுயமாக ஓவியம் வரையக் கற்றேன். பள்ளி நாள்களிலேயே ஆர்வமெல்லாம் ஓவியங்கள் வரைவதில்தான். பத்தாம் வகுப்பு முடித்தவுடன், மேற்கொண்டு படிக்க ஆர்வமில்லை. எனவே, வீட்டில் சொல்லாமல் ரயில் ஏறி, திருவனந்தபுரத்துக்குச் சென்று இறங்கியபோது என் வாழ்க்கையில் புது அத்தியாயம் துவங்கியது. அங்கே ஐந்தாண்டுகளில் விளம்பரப் பதாகை ஓவியங்கள் வரைவதில் ஈடுபட்டேன்.
பின்னர் ஊர் திரும்பி மதுரையில் 'சைன் போர்டு' கடை நடத்தினேன். அந்தக் காலகட்டத்தில்தான் திரைத்துறையின் விளம்பரப் பதாகைகள், கட் அவுட்டுகள் தொழில் பெரும் வளர்ச்சி கண்டது. நான் 1998-இல், சென்னைக்கு இடம் பெயர்ந்து, சங்கர் என்ற பேனர் ஓவியரிடம் வேலைக்குச் சேர்ந்தேன். திரைத்துறையில் கலை இயக்குநராக வேண்டும் என்பது எனது லட்சியமாக இருந்தது.
இயக்குநர் ஷங்கர் 'காதலன்' படம் எடுத்தபோது, 'ஊர்வசி, ஊர்வசி' பாடல் படம்பிடிக்கப்பட்ட பஸ்ஸூக்கு ஓவியம் தீட்ட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அடுத்து 'முதல்வன்' படத்திலும் உதவிக் கலை இயக்குநராகப் பணியாற்றினேன். 'வெண் மேகமே' என்ற படத்தின் மூலமாகக் கலை இயக்குநராக அறிமுகமானேன்.
எளிமையின் உறைவிடமான முன்னாள் அமைச்சர் கக்கனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்காக, நவீன அம்சங்கள் எதுவும் இடம்பெறாமல், அந்தக் காலகட்டத்துக்கு ஏற்ப நான் ஆற்றிய கலை இயக்குநர் பணி எனக்கு மிகுந்த ஆத்ம திருப்தி அளித்தது.
என் நண்பர் ஜேசு தன் பாட்டியை ஒரு புகைப்படம் எடுத்திருந்தார். உயிரோவியம் போல மிகச் சிறப்பாக இருந்த அந்தக் கறுப்பு வெள்ளைப் புகைப்படம் என்னை பெரும் வியப்பில் ஆழ்த்தியது. அந்த மூதாட்டியை ஓர் ஓவியமாக வரைய விரும்பினேன். அந்த ஓவியத்தை வரைந்து முடிக்க எனக்கு 18 மணி நேரம் ஆயிற்று.
அந்த ஓவியத்தை அந்தப் பாட்டியிடம் காட்டியபோது, அவர் கண்களில் ஏற்பட்ட ஆச்சர்யம் இன்னமும் என் மனதில் நிழலாடுகிறது. அதுவே எனக்கு விருது பெற்ற மகிழ்ச்சியை அளித்தது. இப்போது அந்த ஓவியத்துக்கு, போட்டியில் பரிசு கிடைத்திருப்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி' என்கிறார் தேவா.