முகப்பு
தினமணி கதிர்

மகிழ்ச்சி தரும் பேச்சு!

சிறந்த சொற்பொழிவாளராக வேண்டும், பேராசிரியராகப் பணிபுரியவேண்டும், தமிழில் நிறைய புத்தகங்களை எழுத வேண்டும்...

Updated On : 1 மார்ச், 2026 at 4:07 AM
கா.மஹதி
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 8:26 PM

பொ.ஜெயச்சந்திரன்

'சிறந்த சொற்பொழிவாளராக வேண்டும், பேராசிரியராகப் பணிபுரியவேண்டும், தமிழில் நிறைய புத்தகங்களை எழுத வேண்டும், தமிழின் பெருமைகளை எட்டுத்திக்கும் எடுத்துச் சென்று அன்னைத் தமிழை வளர்க்க வேண்டும்' என்கிறார், மதுரை ஸ்ரீமீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியின் தமிழ்த்துறை முதுகலை முதலாமாண்டு மாணவியான கா.மஹதி. இலக்கியம் சார்ந்த பல்வேறு போட்டிகளில் வெற்றியும், கல்வியில் சாதனையும் படைத்து வரும் அவரிடம் பேசியபோது...

'சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் நடுவாளி எனும் கிராமத்தில் பிறந்தேன். அப்பா காளீஸ்வரன் முறுக்கு வியாபாரி, அம்மா கா.கவிதா இல்லத்தரசி, தம்பி சொர்ண காளீஸ்வரன் இளங்கலையில் இரண்டாமாண்டு படிக்கிறார்.

Advertisement

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 8:28 PM

சூசையப்பர்பட்டினம் சகாயராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய வகுப்பாசிரியராக இருந்தவர் லீமா. அவர் பாடிய பாரதிதாசன் பாடலை மெய்மறந்து கேட்டேன். பிறகு தான் எனக்கு தமிழ் மீது ஆர்வம் வந்தது.

'கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை எடுக்கும் ஆசிரியரால் இவ்வளவு இனிமையாக தமிழ் பேச முடியுமா!' என்று என மனதுக்குள் நினைத்துப் பார்த்தது உண்டு.

என்னை முதன் முதலில் மேடையேற்றியவரும் அவர்தான். அதன் பின் குடியரசு தினம், சுதந்திர தினம் என அனைத்து மேடைகளிலும் பேசுவேன். கைத்தட்டல் சத்தம் கேட்டதும், ஆசிரியை என் மாணவி என்ற கர்வத்தோடு என்னை நோக்கி ஓடிவந்து கட்டி அரவணைத்துக் கொள்வார். அதனைவிட கையில் உள்ள மிட்டாய்களையும் அள்ளிக் கொடுப்பார். இன்று கல்லூரி மூலமாகப் பேசி எத்தனை பரிசுகள் பெற்றாலும், அந்த மிட்டாய்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாதது. 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 583 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதலிடம் பிடித்தேன்.

கல்லூரியின் பொது நூலகத்தைப் பயன்படுத்துவேன். துறைத் தலைவர் யாழ்.சு.சந்திரா எனக்கு அதிகமான புத்தகங்களை பரிந்துரை செய்வதோடு, அவருடைய நூல்களை எனக்கு வழங்குவார்.

பெரும்பாலும் பேச்சில் அடுக்குமொழி, கவிதை, பாடல் போன்றவற்றைப் பயன்படுத்த விரும்புவேன். வெறும் செய்திகளை மட்டும் கூறுவது எனக்கு திருப்தி தராது. ஏற்ற, இறக்கத்தோடு பேசுவது மகிழ்ச்சியைத் தரும். பேச்சுப் போட்டிக்காக ஊடகங்களில் வரும் தகவல்களைச் சேகரிப்பேன். பிரபல பேச்சாளர்களின் உரைகளை அதிகமாகக் கேட்பது உண்டு.

2023- ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் முதல் இடமும், ரூ. 5ஆயிரம் ரொக்கப் பரிசும் பெற்றேன். அதே ஆண்டு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் நடைபெற்ற மகாகவி பாரதியார் நினைவு நாள் பேச்சுப் போட்டியில் 3-வது இடமும், 2024-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி முத்தமிழறிஞர் கலைஞர் மன்றம் சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் 2-ஆவது இடமும் பிடித்தேன்.

2024-ஆம் பிப்ரவரி 28-ஆம் தேதி மதுரை மங்கையர்கரசி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ரீல்ஸ் தயாரித்தல் போட்டியில் 2-ஆவது இடம் பிடித்தேன். 2025-ஆம் ஆண்டு வைகை இளைஞர் இலக்கியத் திருவிழாவில் நடைபெற்ற 2 மற்றும் 6 நிமிட ப்பேச்சுப் போட்டியில் முதல் பரிசும், நூல் அறிமுகம், விவாத மேடை, செயற்கை நுண்ணறிவும், பொறியியல் முன்னேற்றமும் ஆகியவற்றில் முதல் பரிசும், படத் தொகுப்பு போட்டியில் 2-வது இடமும் பிடித்து, ரூ.29ஆயிரம் ரொக்கத் தொகைப் பெற்றுள்ளேன்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 8:27 PM

தமிழக உயர்க் கல்வித்துறை சார்பில் 2025-26-ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற கல்லூரி கலைத் திருவிழாவில் விவாத மேடை மற்றும் பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்தேன். 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் திருக்குறள் வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை, இலக்கிய அறிவுசார் போட்டியில் விவாதமேடையில் முதலிடம் பிடித்தேன்.

2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6, 7 ஆகிய நாள்களில் வைகை இளைஞர் 7 போட்டிகள் கொண்ட இலக்கிய விழாவில் அனைத்திலும் முதலிடம் பெற்று ரொக்கப் பரிசாக ரூ.35 ஆயிரம் பெற்றேன். இது போல பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளேன்.

என்னைப் பாராட்டியும், ஊக்கமும் அளித்து வரும் முதல்வர் முனைவர் சூ.வானதி, உதவிப் பேராசிரியர்கள் மற்றும் தோழிகள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்' என்கிறார் கா.மஹதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.