முகப்பு
தினமணி கதிர்

ஆயிரம் கைகள் ஒருங்கிணைந்து..!

திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆம்பூரில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளைஞிகள் ஒன்றிணைந்து ஐந்தாண்டுகளாக ரத்ததான சேவை செய்து வருகின்றனர்.

Updated On : 21 ஜூன் 2026, 4:05 am IST
பகிர்:

திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆம்பூரில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளைஞிகள் ஒன்றிணைந்து ஐந்தாண்டுகளாக ரத்ததான சேவை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து கீழ் மிட்டாளத்தைச் சேர்ந்தவரும், குருதிக் கொடை அறக்கட்டளையின் நிர்வாகியுமான சி.தினேஷ்குமாரிடம் பேசியபோது:

'2021-ஆம் ஆண்டு ஆம்பூர் புறவழிச் சாலையில் நான் டீ குடித்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த தம்பதியர், 'நாங்கள் சேலத்தைச் சேர்ந்தவர்கள். விபத்தில் அடிபட்டு மருத்துவமனையிலுள்ள எங்கள் மகனைக் காப்பாற்ற ரத்தம் தேவை' என்று கூறி அழுதனர்.

Advertisement

Advertisement

அந்தப் பரிதவிப்பு புரிந்ததால், நான், எனது நண்பர்கள் அஜித், முருகேசனுடன் முதன்முதலாக ரத்தம் அளித்தோம். அந்த உயிர் காப்பாற்றப்பட்டது. கண்ணீரோடு அவர்கள் சொன்ன நன்றி எங்களை நெகிழச் செய்தது. அன்று ஆரம்பித்தது ரத்த தான பயணம்.

'ரத்த தானம்' என்கிற வாட்ஸ் அப் குழுவைத் தொடங்கினோம். ரத்தம் தேவைப்படுவோர் 9789289473, 7358274321 ஆகிய எண்களில் உரிய தகவல்களைத் தெரிவித்தால், எங்கள் குழு உறுப்பினர்கள் மூலமாக ரத்த தானதுக்கான ஏற்பாட்டை செய்து வருகிறோம். பின்னர், அறக்கட்டளையாகவும் பதிவு செய்தோம்.

ஒடிஸ்ஸா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அரசு மருத்துவமனை மூலமாக ரத்த தானம் செய்துள்ளோம். மகளிர் தினத்தில் எங்களுடன் சமூகப் பணியோடு செயல்பட்டு வரும் பெண்கள் ரத்ததானம் செய்கின்றனர்.

2025 ஆகஸ்ட் மாதத்தில் எங்களோடு ரத்ததான சேவை செய்து வந்த வினோத் வர்மாவின் நினைவு நாளை முன்னிட்டு, சுமார் 120 பேர் ரத்த தானம் செய்தனர்.

எங்களுடன் பயணிப்போர், அவர்களது உறவினர்களின் பிறந்த நாள், நினைவு நாள்களில் ரத்ததானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஏழை, எளிய மக்களுக்கு உதவும் விதமாக கல்வி உபகரணப் பொருள்கள் வழங்குதல், சாலையோரம் வசிப்போருக்கு உணவு வழங்குதல் எனப் பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வருகிறோம்.

இந்தச் சேவைகளுக்காக மாவட்ட ஆட்சியரிடமும், பல்வேறு அமைப்புகளிடமும் விருதுகளையும் பெற்றிருக்கிறோம்.

தற்போதைய சூழ்நிலையில் ரத்த தான அவசியத்தை அனைவரும் உணர வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டு ரத்தம் தேவை என்றால், தங்கள் குடும்ப உறுப்பினரே ரத்தம் தர முன் வர தயங்குகிறார்கள். இவர்களுக்கு முறையான விழிப்புணர்வையும், ரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துரைக்க வேண்டும்.

விபத்துகள், அறுவைச் சிகிச்சை போன்ற நேரங்களில் பாதிக்கப்பட்டோருக்காக உதிரம் கொடுப்போம். உயிரைக் காப்போம்.

18 முதல் 65 வயது வரை உள்ளவர்கள், குறைந்தது 45 கிலோ எடை உள்ளவர்கள், உடல் நலமும் மன ஆரோக்யமும் உள்ளவர்கள், தொற்று நோய்கள் இல்லாதவர்கள் ரத்த தானம் அளிக்கலாம்.

ரத்த தானம் செய்வதால், தானம் அளிப்போரின் உடலில் புதிய ரத்த அணுக்கள் உற்பத்தியைத் தூண்டுகிறது. ரத்தத்தில் உள்ள இரும்பின் அளவைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. மாரடைப்பு, புற்றுநோய் போன்ற ஆபத்துகளைக் குறைக்கிறது' என்கிறார் தினேஷ்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments