முகப்பு
தினமணி கதிர்

நம் கோயில்கள்: நேற்றைய சுவடுகள்... நாளைய அடையாளங்கள்...

'தமிழ்நாடே ஒரு சிற்பக்கலைக் கூடம்; ஒவ்வொரு கலைச்சின்னமும் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு' என்கிறார் 'சிற்பச் செந்நூல்' ஆசிரியரும், சிற்பக் கலை வல்லுநருமான பத்மபூஷண் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி.

Updated On : 28 ஜூன் 2026, 4:00 am IST
பகிர்:

'தமிழ்நாடே ஒரு சிற்பக்கலைக் கூடம்; ஒவ்வொரு கலைச்சின்னமும் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு' என்கிறார் 'சிற்பச் செந்நூல்' ஆசிரியரும், சிற்பக் கலை வல்லுநருமான பத்மபூஷண் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி. அரும்பெரும் கலைகளின் தாயகமாகவும், கலாசாரப் பண்பாட்டின் தொட்டிலாகவும் விளங்கும் தமிழ்நாட்டின் பெருமைக்கு கோயில்களே சான்றுகளாகும்.

பல நூற்றாண்டுகள் பழைமையான கோயில்களின் கலைநயமிக்க கட்டமைப்புகள், அணியொட்டித் தூண்கள், அரிய சிற்பங்கள், பிற அலங்காரக் கலைத்தொகுதிகள் போன்றவை பாழடைந்த நிலையில் கவனிப்பாரற்றுக் கிடப்பதும், மறுபக்கம் கோயில்களின் புனரமைப்புப் பணிகளின்போது கலைச்செறிந்த கோயில் கட்டமைப்புகள் பயன்படாமல் வீணாகக் கிடக்கின்றன என்பதுமான செய்திகள் தமிழ்ப் பாரம்பரியத்தின் மீது பற்றுள்ள ஒவ்வொருவரையும் மனதளவில் கவலைகொள்ளச் செய்கின்றன.

'கோயில்கள் நிறைந்த பூமி' எனும் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுள்ளது தமிழ்நாடு. காலம் கடந்தும் கம்பீரமாய் நிற்கும் விண்ணை முட்டும் ராஜகோபுரங்களுக்கும், எழிலார்ந்த விமானங்களுக்கும், வண்ணமயமான சிற்பக் கலைகளுக்கும் இங்குள்ள பழங்கோயில்களே மிகச் சிறந்த சான்றுகளாகும். கோயில்கள் பழந்தமிழ்ச் சமூகத்தின் வழிபாட்டு மரபுகளையும், திருவிழாக் கொண்டாட்டங்களையும், கலை வடிவங்களையும் உயிர்ப்போடு வைத்திருக்கும் கருவூலங்களாகும்.

Advertisement

Advertisement

கோயில்களை கருங்கற்களின் அல்லது செங்கற்களின் குவியலாக மட்டும் பார்க்காமல், அங்கு சென்று வருவதால் வரலாற்று விழுமியங்களை அறிவதோடு, உடல் நலத்தையும் ஆன்ம சுகத்தையும் ஒருசேரப் பெற முடியும். இத்தகைய ஆன்மிக, கலைப் பொக்கிஷங்களை நேரில் கண்டு பயன்பெற உலகம் முழுவதுமுள்ள சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டைத் தேடி வருகின்றனர்.

பழைமை மாறாமல் திருப்பணி

'பழைமை மாறாத் திருப்பணி', 'ஜீர்ணோத்தாரணத் திருப்பணி' என்றெல்லாம் கூறப்படும் திருப்பணியில் ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இயற்கையாலும் செயற்கையாலும் ஏற்படுகின்ற சிதிலங்களை மறுசீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 'கோயில்களின் பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகளில் போதிய விழிப்புணர்வும், முறையான திட்டமிடலும் அவசியம் இருக்க வேண்டும்' என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அந்தந்தக் கோயில்களின் சிற்ப இலக்கணம், அளவீடுகள், கலைப்பாணி போன்றவற்றைச் சிறிதும் மாற்றாமல், அவை முன்பு எப்படி இருந்தனவோ அப்படியே புதுப்பிக்க வேண்டும். இதில் ஏதேனும் தவறுகளோ அல்லது சாஸ்திர விதிமீறல்களோ நடைபெற்றால், பெரும் இன்னல்களைச் சந்திக்க நேரிடும் என்பதை 'மானசாரம்' போன்ற சிற்ப சாஸ்திரங்களும், 'பூர்வகாரணம்' போன்ற ஆகமங்களும் எச்சரிக்கின்றன.

பராமரிப்புப் பணியில், வரலாற்றுச் செய்திகளைத் தாங்கியுள்ள பழைமையான கல்வெட்டுகளின் மேல் வண்ணச்சாயம் பூசுவது, ரசாயனங்கள் அல்லது மணல் வீச்சு போன்ற நவீனத் தொழில்நுட்ப முறைகளைக் கொண்டு சுத்தம் செய்வது போன்றவையெல்லாம் கலைப்பெட்டகங்களின் நுட்பமான வேலைப்பாடுகளையும் கல்வெட்டுகளையும் பாழாக்கிவிடுகின்றன.

பேரரசுகளின் சாதனைகளை அறியும் வரலாற்றுப் பதிவேடுகள்

இதுதவிர, நூற்றாண்டுகள் பழைமையான கலைத்தூண்கள், தேய்மானமுற்ற சிற்பங்கள், பிரிக்கப்பட்ட கலைக்கூறுகள் முறையான பாதுகாப்பின்றி வெட்டவெளியிலும் முள்புதர்களிலும் கைவிடப்பட்டுக் கிடப்பதைப் பார்க்கும்போது, நம் வரலாற்றின் பக்கங்களை நாமே கிழித்தெறிவதற்கு ஒப்பானதாகும். பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகரப் பேரரசுகளின் காலங்களில் நிலவிய நீதித் துறை, வரிவிதிப்பு, நீர் மேலாண்மை, கல்வி, மருத்துவச் சாலைகள் போன்றவற்றை எடுத்துக்காட்டும் சிறந்த ஊடகங்களாகவும் கோயில்கள் திகழ்கின்றன. மருதுபாண்டியர் போன்ற மாவீரர்களின் ஒப்பற்ற சாதனைகளை அறிந்திட உதவும் வரலாற்றுப் பதிவேடுகள்தான் இவை.

'ஒவ்வொரு பேரரசின் வரலாற்றுச் சுவடுகளும் அடுத்தடுத்த தலைமுறையினரைத் தடையின்றிச் சென்றடைய வேண்டும்' என்ற தொலைநோக்குச் சிந்தனையோடுதான் கோயில்களின் அடித்தளமாகிய 'அதிஷ்டானம்' முதற்கொண்டு சுவர்கள் வரை உளி கொண்டு வரலாற்றுச் செய்திகளைக் கல்லில் செதுக்கி வைத்துள்ளனர். இன்று அகழ்ந்தெடுக்கப்படும் கீழடியின் நகர நாகரிகமும், அரிக்கமேட்டின் துறைமுகப் பெருமையும் காட்டும் அதே வரலாற்றுச் சுவடுகளை, நம் கண்முன்னே இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் தொல் பழங்கோயில்களும் விரித்துக் காட்டிக்கொண்டிருக்கின்றன எனில் மிகையில்லை.

எந்தவொரு நவீனத் தொழில்நுட்பமும் இல்லாத காலத்திலேயே, இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி நிற்கும் அசாத்திய கோயில் கட்டுமானங்களை முன்னோர்கள் எழுப்பியுள்ளனர். ஆனால், அனைத்து நவீன இயந்திரங்களையும் கையில் வைத்திருக்கும் நாம், சிதிலமடைந்து கிடக்கும் பாரம்பரியக் கோயில்களைத் தேடிப் போய்ப் பாதுகாத்தால், தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெட்டகங்களை அழியாமல் பன்மடங்கு பெருக்க முடியும்.

ஆகையால், புனரமைப்பின்போது மீண்டும் பயன்படுத்த முடியாத கலைத் தொகுதிகளையோ, சிதைவடைந்த சிலைகளையோ என்ன செய்வது என்ற கேள்வி எழும்போது, ஆகம சிற்ப சாஸ்திர விதிமுறைகளே அதற்கு வழிகாட்டுகின்றன. அவை வழிபடு சிலைகளாக இருந்தால், அவற்றின் தெய்வீக ஆற்றலை 'கலாகர்ஷணம்' என்ற ஆகம முறைப்படி ஆவாஹனம் செய்து, சேதமுற்றவற்றை நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்ய வேண்டும். மாறாக பழங்கலைத் தொகுதிகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது, அக்கோயிலானது எந்தக் கலைபாணியைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருந்ததோ அதே கலைப்பாணியுடன், ஏற்கெனவே கையாளப்பட்ட அளவியல் மற்றும் அழகியலைப் பின்பற்றினால் மட்டுமே பழைமைமாறாத நல் அருள்வீச்சுகளைத் தொடர்ந்து பெற முடியும் என்று சிற்பசாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.

அதேவேளையில், வரலாற்றுத் தரவுகளைத் தாங்கி நிற்கும் இக்கலைக்கற்கள், தவிர்க்க இயலாத காரணத்தினால் மீண்டும் பயன்படுத்த முடியாதபோது, அவற்றை முறையாக ஆவணப்படுத்தியும், அந்தந்தக் கோயில் வளாகங்களிலேயே 'சிற்பக் காட்சியகம்' அமைத்துப் பாதுகாக்கவோ அல்லது தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கவோ வேண்டும் என்று துறை சார்ந்த வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இளைய தலைமுறையினரும் ஆர்வம்

உலகெங்கும் உள்ள இளந்தமிழர்கள் மேற்கத்திய கலாசாரத்தையும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வாழ்வியலையும் கற்று வெற்றி வாகை சூடிக் கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில், அவர்கள் தங்களுடைய தனித்துவம் வாய்ந்த பாரம்பரிய வேர்களைத் தேடி அறியவும் முற்படுகின்றனர். இதனால்தான் புலம் பெயர்ந்த தமிழர்கள் தாம் சென்ற இடங்களில் எல்லாம் கலைநயமுடைய கோயில்களை எழுப்பி, தங்கள் பாரம்பரிய அடையாளங்களைச் சிதையாமல் காத்து, தாய்நாட்டு மண்ணின் சூழலை உருவாக்கி மகிழ்கின்றனர்.

ஒருமுறை புதிய கோயில் நிர்மாணம் செய்வது குறித்து வழிகாட்டல் வேண்ட வந்த அன்பர் ஒருவரிடம், காஞ்சி மகாபெரியவர் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறுகையில், 'புதிய கோயில்களை நிருமாணிப்பதற்கு முன்பாக, உங்களுடைய குலதெய்வக் கோயிலையோ அல்லது உங்கள் ஊரில் சிதிலமடைந்து காணப்படும் பழைமையான கோயிலையோ சீரமைக்க முற்படுங்கள். இது முன்னோர்கள் விட்டுச்சென்ற வரலாற்றுச் சுவடுகளைக் காப்பதற்கு நாம் செய்யும் ஆகச்சிறந்த அறப்பணியாகும்' என்று அருளிய இந்த அறிவுரை, இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் பொருந்துகிறது.

அதனால் நிதி வசதியின்றித் தவிக்கும் பழைமையான கோயில்களை இன்றைய புலம்பெயர்ந்த தமிழர்களும், செல்வந்தர்களும் ஏன் தத்தெடுக்கக் கூடாது? அல்லது சாஸ்திர ரீதியாகச் சொல்லப்பட்டுள்ளவாறு ஏன் புனருத்தாரணப் பணிகளைச் செய்யக் கூடாது? என்ற கேள்வியும் எழுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments