இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
தமிழானவன்
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர். 'சென்று பற்றும் பொறி செவி. மற்றவை நின்று பற்றும் பொறிகள்' என்றும் அவர் சொல்கிறார்.
தொலைவில் கிடைக்கும் ஒலிகளையும், ஓசைகளையும் ஈர்த்து வந்து அறிவு வளர்ச்சிக்கும், ஆனந்தத்துக்கும் மாற்றிக் கொடுக்கும் தன்மையைச் செவி செய்கிறது. குயில் கூவும் ஓசையை ஆவணப்படுத்தும் வகையில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்குச் சொல்லிக் கொடுத்தது இந்தச் செவிதான்.
Advertisement
Advertisement
அதனால்தான் குயில் பாட்டுப் பிறந்தது. கோயில்களில், கச்சேரிகளில் ஒலிக்கும் நாகசுவரம், தவில் இசையைச் செவி நுகர்ந்தது. பல தலைமுறைக்குக் கடத்தி பாரம்பரிய ராஜ இசையாக உணர்வு கொள்ளவும் செய்திருக்கிறது இந்தச் செவி. 'தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்' என்பது முதுமொழி.
ஓர் இசை மரபுக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதை உணர்ந்து நாகசுவரம், தவில் இசைக் கலைஞர்களின் பொக்கிஷங்களைப் பாதுகாக்கும் வகையில் ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார் சுவாமிமலை சு. சரவணன்.
பத்து ஆண்டுகளாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காணொலிகளைப் பதிவு செய்துள்ள இவர், இசையுலகில் பஞ்சாபி மொழியில் உச்சரிக்கப்படும் 'பலே... பலே...' என்ற சொல்லுக்குப் பொருத்தமானவர்.
இசையுலகில் சாதனைகளைப் படைத்துள்ள சரவணனிடம் பேசியபோது:
'நாகசுவரம் வாசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். எனது தந்தை மு. சுவாமிநாதப் பிள்ளை, மூத்த சகோதரர் சு. மணிமாறன் ஆகியோர் சுவாமிமலை கோயிலின் ஆஸ்தான வித்வான்கள். கும்பகோணம் அரசு நுண், கவின் கலைக் கல்லூரியில் பட்டம் முடித்தேன். மென்பொருள் துறையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு நிறுவனங்களில், முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றினேன். இப்போதும் சில நிறுவனங்களுக்கு ஆலோசனை அளிக்கிறேன்.
இசைப் பொக்கிஷங்கள் பாதுகாப்பு
சிங்கப்பூரில் நான் பணியாற்றியபோது, இணையத்தில் என் தந்தை மு. சுவாமிநாதப் பிள்ளை குறித்துத் தேடியபோது, ஒரு பதிவும் இல்லை. அதே போன்ற நிலைதான் மற்ற இசைக் கலைஞர்களுக்கும் இருந்தது. அப்போதே என் சம்பளத்தில் 'ஐபேட்' வாங்கி நாகசுவரம், தவில் இசைக் கலைஞர்களின் பொக்கிஷங்களை ஆவணப்படுத்தத் தொடங்கினேன்.
இரு ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய மூத்த சகோதரர் சு. மணிமாறன் இல்லத்துக்கான கிரகப் பிரவேசத்தின்போது, என் தந்தை மு. சுவாமிநாதப் பிள்ளையும், சகோதரர் சு. மணிமாறனுடன் இணைந்து வாசித்த பழைய ஒரு ஒலிநாடா கிடைத்தது. அந்தப் பழைய ஒலிநாடாவைப் பதிவேற்றம் செய்தபோது, ஆத்ம திருப்தி கிடைத்தது. எனக்கு முன்பாக 'மங்கல இசை மன்னர்கள்' என்று புத்தகம் எழுதிய தஞ்சாவூர் பி.எம்.சுந்தரம் எழுத்து வடிவில் ஆவணப் பதிவைச் செய்துள்ளார்.
இலங்கையில் கலைஞர்களுக்கு முக்கியத்துவம்:
இலங்கை யாழ்ப்பாணத்தில் அந்தக் கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. அந்த நாட்டில் எதாவது கச்சேரி, விஷேசம் என்றால் நாகசுவரம், தவில் இசைக் கலைஞர்கள் சென்று வருகின்றனர். உலகின் பல்வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்து இருந்தாலும், இலங்கைத் தமிழர்கள் இந்தக் கலையைப் போற்றுகின்றனர். பொருளாதார ரீதியாக நிறைய சன்மானங்களையும் இந்தக் கலைஞர்களுக்கு அளிக்கின்றனர்.
தமிழ்நாட்டின் சொத்துகளான நாகசுவரம், தவில் இசையை இங்கும் பாதுகாக்க வேண்டும். ஆண்டுதோறும் பரிவாதனி அறக்கட்டளை சார்பில் காலண்டர் வெளியிடுவோம். 2026- ஆம் ஆண்டுக்கான காலண்டரில் இலங்கையில் வாழும் நாகசுவரம், தவில் இசைக் கலைஞர்களை அடையாளப்படுத்தியுள்ளோம்.
கோயில்களுக்கும் இசைக் கலைக்கும் உள்ள தொடர்பு:
கோயில்களையும் நாகசுவரம், தவில் இசைக் கலையையும் இப்போதும் பிரித்து விட முடியாது. சுவாமிமலை கோயிலில் நாகசுவரம், தவில் இசைப் பள்ளி, தேவாரம் இசைப் பள்ளி, கருணை இல்லம், கோசாலை உள்ளிட்டவை இருந்தன. சிக்கல் கோயிலில் சித்த மருத்துவம், திருப்புகழுக்கும் பள்ளிகள் இருந்தன.
கோயில்களில் நாகசுவரம், தவில் இசையைக் கேட்டால் மனம் அமைதி அடையும். பக்தர்களுக்கு பரவச நிலையை இந்தக் கருவிகள் கொடுக்கும். கோயில்களில் சுவாமி புறப்பாடு நேரத்தில் வாசிக்கப்படும் மல்லாரி இப்போதும் அந்த உணர்வைக் கொடுக்கும்.
ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர்கள்:
நாகசுவர வித்வான் காருகுறிச்சி அருணாசலத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நூற்றாண்டு விழாவை நான்கு இடங்களில் நடத்தினோம். நாகசுவரத்தில் தனித்துவம் படைத்த நாமகிரிப்பேட்டை கே. கிருஷ்ணன், வேதாரண்யம் வி.ஜி. வேதமூர்த்தி பிள்ளை, திருமெய்ஞானம் டி.பி.நடராஜ சுந்தரம் பிள்ளை, தவில் இசையில் முத்திரை பதித்த திருநாகேஸ்வரம் டி.ஆர். சுப்ரமணியம், திருவாளப் புத்தூர் டி.கே. கலியமூர்த்தி உள்ளிட்டோருக்குப் பல்வேறு விழாக்களைக் கொண்டாடினோம். அவர்களின் தனித்துவமான இசைக் கூறுகளை ஆவணங்களாகப் பாதுகாத்துள்ளோம்.
கரோனா காலத்தில், சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட பாகனேரியைச் சேர்ந்த அறுபத்து இரண்டு வயதான நாகசுவர வித்வான் கோ.பில்லப்பனின் தனித்துவமான இசையைப் பதிவேற்றம் செய்திருந்ததைப் பாராட்டி, நடிகர் கமலஹாசன் 'டுவிட்' செய்திருந்தார். அதனால் அவருக்கு ' இசைப் பேரறிஞர்' விருதை மதுரை தமிழிசைச் சங்கம் வழங்க, பின்னர் அவருக்கு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும் கிடைத்துள்ளது.
வாழும் நாகசுவர கலைஞர்களான கோட்டூர் கே.என்.ஆர். வெங்கடேசன், புதுச்சேரி வில்லியனூரைச் சேர்ந்த வி.எம்.செல்வராஜ், திருக்கடையூர் டிஎஸ்எம். உமா சங்கர், தவில் கலைஞர்கள் தஞ்சாவூர் டி.ஆர். கோவிந்தராஜன், திருராமேஸ்வரம் டி.பி.ராதாகிருஷ்ணன், கோவிலூர் கே.ஜி.கல்யாணசுந்தரம், மற்றொரு கோவிலூர் கே.வி. பழனிவேல், மன்னார்குடி எம்.ஆர். வாசுதேவன், கொங்கங்பட்டு ஏ.வி. முருகையன் உள்ளிட்டோரை ஆவணப்படுத்தியுள்ளோம்'' என்கிறார் சுவாமிமலை சு. சரவணன்.
பரிவாதனி அறக்கட்டளை நிர்வாகி பெங்களூரைச் சேர்ந்த லலிதா ராமச்சந்திரன்:
ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் நடக்கும் சென்னை கச்சேரிகளைக் கேட்க வருவேன். எதிர்பார்த்து ரசிக்கும் இசைக் கலைஞர்களுக்கு மேடை கிடைக்காது. அதனால் நாமே ஒரு மேடை அமைத்துக் கொடுத்தால் என்ன? என்ற யோசனை வந்தது. அப்படி 2013- இல் இந்த அமைப்பை உருவாக்கினோம்.
சென்னையில் இஞ்சிக்குடி சுப்பிரமணியத்தின் நாகசுவர கச்சேரிக்கு ஏற்பாடு செய்தோம். வயது முதிர்ந்த கலைஞர்களுக்கு உதவித் தொகை வழங்குகிறோம். ஏழை மாணவர்கள் 100 பேருக்கு இசைக் கருவிகளைக் கொடுத்துள்ளோம். மிருதங்க மேதை பழனி சுப்பிரமணியத்தை உருவாக்கிய பர்லாண்டு என்கிற பெர்ணாண்டஸின் பெயரில் விருதுகளை அளிக்கிறோம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.