ஏ.ஐ. இல் சுயசரிதை!
ஏ.ஐ. ஆராய்ச்சியாளர், கிரியேடிவ் டைரக்டர், அனிமேட்டர், யூ-டியூபர், எழுத்தாளர், பதிப்பாளர், பேச்சாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர், 'காம்கேர்' கே. புவனேஸ்வரி.
அருள்செல்வன்
ஏ.ஐ. ஆராய்ச்சியாளர், கிரியேடிவ் டைரக்டர், அனிமேட்டர், யூ-டியூபர், எழுத்தாளர், பதிப்பாளர், பேச்சாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர், 'காம்கேர்' கே. புவனேஸ்வரி. நம் நாட்டில் ஐ.டி. நிறுவனம் தொடங்கிய முதல் 'தொழில்நுட்பப் பெண் பொறியாளர்' என்ற அங்கீகாரத்தையும் பெற்ற இவர், ஏ.ஐ. மூலம் திருவாசகத்தில் 658 பாடல்களையும் தயாரித்து வெளியிட்டுள்ளார். தற்போது தனது பெற்றோரின் வாழ்க்கையை ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் முதன்முதலாக சுயசரிதமாக உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார். அது குறித்து அவரிடம் பேசியபோது...
'நான் பிறந்தது கும்பகோணம். என் அப்பா வி. கிருஷ்ணமூர்த்தி, அம்மா கே. பத்மாவதி. இருவருமே தொலைபேசித் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். உழைப்பை உணர்த்தும் வகையில் வாழ்ந்து காட்டியவர்கள். இருவருக்கும் பணியிட மாற்றம் காரணமாக ஏராளமான ஊர்களில் வசிக்கும் சூழல். ஏராளமான ஊர்கள், வெவ்வேறு பழக்க வழக்கங்களைப் பின்பற்றும் மனிதர்கள் என எங்கள் வாழ்க்கை அமைந்து, எங்கள் மூவரது படைப்பாற்றலும் வெளிவரத் தூண்டியது.
எனக்கு ஒரு தங்கை ஸ்ரீவித்யா, ஒரு தம்பி சுவாமிநாதன். இருவரும் சாஃப்ட்வேர் துறையில் உயர்பதவியில் உள்ளனர். எழுத்து, ஓவியம், கார்ட்டூன் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு .
ஏ.ஐ.-யில் ஆர்வம் வந்தது எப்படி ?
நான் நிறுவனம் தொடங்கிய 1992-களில் இருந்தே ஏ.ஐ. குறித்து ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறேன். 1996 -லேயே சாதாரண டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் டெஸ்க்டாப்பிலேயே 'சி' மொழியில் நிரல் எழுதி, ஒரு யானை நடந்து வருவதைப் போல் அனிமேஷனில் ஸ்கிரீன் சேவர் தயாரித்தோம். ஒவ்வொரு முறை கணினியைத் தொடங்கும்போதும் அதே யானை வெவ்வேறு விதமாக நடந்துவருவதைப் போல் அமைத்தோம்.
2000-களில் அனிமேஷன்களுக்கான மென்பொருள்கள் வந்த பிறகு கார்ட்டூன்களை உருவாக்கி, பின்னணிக் குரல் கொடுத்து, அவற்றைப் பல மொழிகளில் பேச வைத்தோம்.
தேர்ந்தெடுக்கும் மொழியில் அனிமேஷன் இயங்கும். கதாபாத்திரங்களைப் பார்வையாளர்களே தேர்ந்தெடுத்து மாற்றிக்கொள்ளலாம். 20 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் செய்தவற்றை இன்று ஏ.ஐ. மூலம் தயாரிக்கிறோம். படம், ஓவியம், கார்ட்டூன் வரைந்து அது என்ன பேசவேண்டும் என்பதை உள்ளீடாகக் கொடுத்து, அது எப்படி அசைய வேண்டும் என்பதையும் புரோகிராமாக எழுதிச் சொல்லிக் கொடுத்து அனிமேஷன் செய்து வந்தோம். இதுவும் ஒருவகையில் ஏ.ஐ.தான்.
2002 -லேயே நம் குரலை குளோன் செய்து, நம் குரலிலேயே தானாகவே பதிவாகும் நுட்பங்களைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தினோம். 2005 -இல் கூகுள் எல்லாம் பிரபலமாவதற்கு முன்பே திருவாசகம் ஆன்மிகப் படைப்பை தேடல் வசதிகளைப் பொருத்தி கண் பார்வைத் திறன் அற்றவர்களும் பயன்படுத்தும் வகையில் வெளியிட்டோம்.
2008 -இல் பார்வையற்றவர்கள் ஸ்க்ரைபர்ஸ் உதவியுடன் தேர்வு எழுதாமல், அவர்கள் தாங்களே வாயால் சொல்ல சொல்ல கம்ப்யூட்டர் திரையில் பதில்கள் தானாகவே வெளிப்படுமாறு சாஃப்ட்வேர்கள் எல்லாம் தயாரித்து வெளியிட்டுள்ளோம். இவை அனைத்துமே ஏ.ஐ. தொழில்நுட்பமே.
ஏ.ஐ. என்பது ஒரு சிறப்பு சாஃப்ட்வேர். சாதாரண சாஃப்ட்வேர்கள் நாம் என்ன கட்டளை இடுகிறோமோ அதை மட்டுமே செய்யும். ஏ.ஐ. என்ற சிறப்பு சாஃப்ட்வேர் நாம் இடும் கட்டளையை மேம்படுத்தியும், அதில் இருந்து தானாகவே கற்றுக் கொண்டும், நமக்குத் தேவையானதைத் துல்லியமாகச் செயல்படுத்திக் கொடுக்கும்.
ஏ.ஐ. ஹிட்லர் காலத்திலேயே அறிமுகம் ஆகிவிட்டது என்கிறார்களே?
இரண்டாம் உலகப் போரில் அடால்ஃப் ஹிட்லர், உலகம் முழுவதும் உள்ள தனது போர் ஆயுதங்களை தன் இருப்பிடத்தில் இருந்தே இயக்கிப் போர் செய்ததாகவும், எந்த இடத்தில் உள்ள ஆயுதம் எப்போது வெடித்துச் சிதறும் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயமாக இருந்தது என்றும், அந்தக் காலகட்டத்திலேயே செயற்கை நுண்ணறிவுக்கான ஆதாரப் புள்ளிகள் ஆரம்பமாகிவிட்டன என்றும் செய்திகள் கூறுகின்றன. அவர் பயன்படுத்திய நுட்பத்துக்கு அன்று ஏ.ஐ. என்ற பெயர் கிடையாது. அது ஒரு நுட்பம். அவ்வளவு தான்.
ஹிட்லர் பயன்படுத்திய 'எனிக்மா' என்பது செய்திகளை மறைத்து அனுப்ப, பயன்பட்ட ஒரு ரகசியக் குறியீட்டு இயந்திரம். அந்த இயந்திரத்தில் பயன்படுத்தப்பட்ட நுட்பம் எதிர்காலத்தில் ஏ.ஐ. முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட உதவியது எனலாம்.
பொதுவாகவே ஓர் இயந்திரத்துக்குள் மனிதனின் இயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அதனுள் தகவல்களையோ அல்லது ரகசிய குறியீடுகளையோ அனுப்பி, அதை இயக்க வைக்க முடியும் என்றால், அப்போதே செயற்கை நுண்ணறிவுக்கான தொடக்கப் புள்ளி போட்டாயிற்று என்றே சொல்ல வேண்டும்.
உங்களது ஐ.டி. நிறுவனம் மற்றவற்றிலிருந்து எப்படி வேறுபடுகிறது?
உழைப்பையும் திறமையையும் முதலீடாக்கி உருவான எங்கள் நிறுவனத்தை 33 ஆண்டுகளாக வெற்றிப் பாதையில் கொண்டு செல்கிறேன். எங்கள் நிறுவனத்துக்கு என் பெயரான 'காம்கேர் கே. புவனேஸ்வரி'என்பதே அடையாளம். பிற நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து வேலைகளை எடுத்துச் செய்கிறார்கள். ஆனால், நாங்கள் எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் நம் நாட்டு மக்களுக்காகத் தயாரிக்கப்பட்டு உலக அளவில் செல்கின்றன. நாங்கள் மற்ற நிறுவனங்கள் போல வெளிநாடுகள் தயாரித்த மென்பொருள்களைப் பயன்படுத்துவதில்லை. நாங்களே உருவாக்கி வடிவமைத்தவற்றை மட்டும் பயன்படுத்துகிறோம்.
நாங்கள் தடம் பதித்த திட்டங்கள் ஏராளம். ஆங்கிலம் தவிர்த்து பிற மொழிகளையும், குறிப்பாகத் தமிழையும் கணினி உடன் இணைத்ததில் எங்களுக்கும் பங்கு உண்டு. அதற்கான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளேன்.
இப்படித் தமிழகமெங்கும் கணினித் தொழில்நுட்பம் பரவ எழுத்து, பேச்சு, ஆடியோ, விடியோ, சாப்ஃட்வேர் என பல வழிகளில் எங்கள் நிறுவனம் முதல் முயற்சிகள் எடுத்த பெருமைக்குரியது.
அப்படி என்னென்ன செய்தீர்கள்?
தமிழில் கணினிக் கல்வியை அறிமுகப்படுத்தினோம். அனிமேஷன் சிடிக்களை மிகக்குறைந்த விலைக்கு விற்றோம். கூகுள் வருவதற்கு முன்பே 'பல்கோணத்தில் தேடும் வசதியை' உருவாக்கினோம். கணினிகளை வீட்டுக்கு எடுத்துச் சென்று 'வீடுகளில் இருந்து வேலை' என்கிற வொர்க் பிரம் ஹோம் திட்டத்தைத் தொடங்கினோம். இணையத்தின் தொடக்க நிலையிலேயே தனிநபர் வலைப்பக்கத்தை உருவாக்கினோம்.
மென்பொருள் தயாரிப்பின் போது கிடைக்கும் அனுபவங்களைப் புத்தகமாக எழுத ஆரம்பித்தேன். அப்படித்தான் 250 நூல்களையும் எழுதினேன்.
23 வயதில் நான் எழுதிய கணினி சார்ந்த புத்தகம் பல்கலைக்கழகப் பாடமானது. என் நூல்கள் பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்தவை.
ஏ.ஐ.-இல் சுயசரிதைப் படத்தை இயக்கியது எப்படி?
எனது பெற்றோரின் சதாபிஷேகத்தை முன்னிட்டு அவர்களுக்கு பிள்ளைகளான நாங்கள் ஆட்டோபயோகிராஃபி படத்தைப் பரிசாகக் கொடுக்க நினைத்தோம். 'வி.கே. (எ) விக்டரி கிங்' - ஆட்டோபயோகிராஃபி என்பது பெயர். சிறுவயதில் என் அப்பா 'வி.கே.' என்பதன் விரிவாக்கமாக 'விக்டரி கிங்' என புனை பெயர் வைத்துக்கொண்டவர். இன்றும் 'விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி' என்ற தலைப்பில் தினமும் வாட்ஸ் அப்பில் வாழ்வியல் ஸ்டேட்டஸ் எழுதி வருபவர். அதனால் 'வி.கே. (எ) விக்டரி கிங்' என்பதையே தலைப்பாக வைத்தேன்.
பெற்றோருக்கும் எங்களுக்குமான பிணைப்பை ஒன்றரை மணிப் படமாகவும் இயக்கி உள்ளேன். அது நூலாகவும் வந்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு குடும்பப் புத்தகம் உருவாக்க வேண்டும். அதுதான் எதிர்காலத் தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்வது.
சுயசரிதைப் படம் மூன்று சீசன்களைக் கொண்டது. ஒவ்வொரு சீசனிலும் 7 எபிசோடுகள், ஒவ்வொரு எபிசோடும் 20 நிமிடங்கள். ஆக மொத்தம் 21 எபிசோடுகள், 7 மணி நேரம் ஓடக் கூடியது. முதல் பகுதியில் என் தந்தை பிறந்தது முதல் அவருக்குத் திருமணமானது வரை இருக்கும். இரண்டாவது பகுதியில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பெற்று வளர்த்த விதம் பற்றி இருக்கும். இறுதியான மூன்றாவது பகுதியில் பெற்றோரைப் பற்றிக் குழந்தைகள் பேசுவது என்று உருவாக்கப்பட்டது. என் பெற்றோர் ஒருவரை ஒருவர் சந்தித்த காலத்திலிருந்து இந்தப் படக் கதையைத் தொடங்கி நகர்த்தி இருக்கிறேன்.
இதில் சந்தித்த சவால் என்ன?
அந்தக் காலத்தில் இப்போது மாதிரி கேமரா வசதிகள் இல்லாததால் புகைப்படங்கள் பிரபலமாகவில்லை. புகைப்படம் எடுக்காமலேயே பலபேர் மறைந்து போயிருக்கின்றனர். என் தந்தையின் அந்தக்காலப் புகைப்படம் ஒரு பாஸ்போர்ட் அளவிலேதான் இருந்தது. அதை வைத்துக் கொண்டுதான் தொழில்நுட்பத்தில் மேம்படுத்தி கற்பனையும் கலந்து அவரது இளமைக்காலத் தோற்றத்தை உருவாக்கி இருக்கிறோம். தோற்றம் உருவான பின் அவர்களுக்கான குரல்கள் உருவாக்கினோம். அவர்களது வாழ்க்கை வரலாற்றை எழுதி அவர்களது சிறப்புக் குணங்களை வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதையாக எழுதி இதை உருவாக்கினேன்.
இதை உருவாக்குவதில் என் பெற்றோர் தங்கள் அனுபவங்களை வழங்கி என்னை ஊக்கப்படுத்தினார்கள். இதற்காக அவர்களிடம் நீண்ட நேரம் பேச வேண்டி இருந்தது. ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வு வரவேண்டும் என்பதற்காக பாடல் காட்சிகளை உருவாக்கினேன். கார்ட்டூன் போன்று செயற்கையாகச் சித்தரிக்கப்பட்டதாகத் தெரிய வேண்டாம் என்று தோற்றங்களும் அசைவுகளும் இயல்பாக இருக்கும்படி சிரமப்பட்டு அமைத்தோம்.
ஏ. ஐ. என்பது தனக்குக் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் வெளிப்படுத்தக் கூடிய ஒரு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி. அது கேள்விப்படாத மடிசார் போன்ற விஷயங்கள் செய்து காட்டுவதற்குத் திணறியது. அதற்குரிய தகவல்களைக் கொடுக்கும் போது அது சரியான விளைவுகளை வெளிப்படுத்தும். அப்படித்தான் சில காட்சிகளை உருவாக்கினோம்.
ஏ. ஐ. என்பது மேற்கத்திய மனிதர்களின் பாதிப்பில் உருவங்களை வரைந்து தரும். இப்படிப்பட்ட நிலையில் நாம் அதிகம் பயன்படுத்தாமல் இருப்பதால் அதே மாதிரி முக பாவங்கள் வந்தன. அதை மேலும் மேம்படுத்தும் வகையில் உள்ளீடுகள் செய்து நமது மண்ணின் மைந்தர்களாக நாங்கள் வரும்படி அமைத்தோம். இந்தத் தொழில்நுட்பத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு பயன்படுத்தியதால்தான் அதன் வெளிப்பாடு சரியாக அமைந்தது. அதன்படி என் தந்தையின் ஆவணப்படம் திருப்திகரமாக அமைந்தது.
ஏ.ஐ.-இல் உருவான இத்தனை பெரிய முழு நீள ஆட்டோபயோகிராஃபி படம் இதுவாகத்தான் இருக்கும். இதனை முழுமையாக முடிக்க ஒன்றரை ஆண்டுகள் ஆனது.
எங்கு பார்த்தாலும் பரவி ஏ.ஐ. சலிப்பை ஏற்படுத்துவதாகத் தோன்றுகிறதே?
மேலோட்டமாகப் பார்த்தால் ஏ.ஐ. மூலம் ஒரு விஷயத்தை உருவாக்குவது சுலபம் போல் தோன்றலாம். சமூக ஊடகங்கள் வளர்ந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் எங்கு திரும்பினாலும் படங்களும் வீடியோக்களும் மட்டுமே கண்களில் படுவதால் உண்டாகும் சலிப்புதான் இது.
படங்கள், ஆடியோ, வீடியோவைத் தாண்டிய உலகம் இருக்கிறதல்லவா?
உதாரணத்துக்கு விவசாயத்தில் ஏ.ஐ. செயல்படும் விதம் ஆச்சர்யத்தை உண்டாக்கும். கிராமத்தில் இருக்கும் தன் விவசாய நிலத்துக்கு நீர்பாய்ச்ச சென்னை போன்ற மாநகரத்தில் அமர்ந்து கொண்டு போனில் உள்ள செயலியை வைத்து மோட்டாரை ஆன், ஆஃப் செய்ய முடியும். என் உறவினர் ஒருவர் இப்படித்தான் விவசாயம் செய்கிறார். மாதம் ஒருமுறையோ, இரு மாதங்களுக்கு ஒரு முறையோ ஊருக்குச் சென்று நேரடியாகப் பார்வையிடுகிறார். நீர்பாய்ச்சுவது மட்டுமல்ல, உரம் இடுவது, விலங்குகள் - பறவைகளால் பயிருக்கு ஆபத்து வராமல் காப்பாற்றுவது என அத்தனையும் ஏ.ஐ. மூலமே செய்து வரும் பலரை நான் அறிவேன்.
அதுபோல மருத்துவத்துறையில் ஏ.ஐ. அசத்தி வருகிறது. ஆபரேஷன் இல்லாமல், துளையிடாமல், துல்லியமாக நோய்களை கண்டறிந்து தீர்வையும் கொடுக்கிறது.
இதுபோல ராணுவம், இயந்திரத்துறை, ஓட்டல் நிர்வாகத்தில் என ஏ.ஐ. உதவி வருகிறது. இப்படிக் கண்களுக்குத் தெரியாமல் பின்புலத்தில் அமைந்து ஏ.ஐ. செய்து வரும் அசத்தல்கள் ஏராளம். இனி வரும் உலகை ஆளப் போவதும் அதுவே.
மனித வேலைவாய்ப்புகளுக்கு ஏ.ஐ. ஆபத்தானதா?
நிச்சயம் இல்லை. கம்ப்யூட்டர்கள் நம் நாட்டில் அறிமுகம் ஆனபோது அது வேலை வாய்ப்புகளைக் குறைத்துவிடும் எனப் பயந்தார்கள். ஆனால், அப்படி ஆனதா என்ன? கம்ப்யூட்டர்கள் வந்த பிறகுதானே சாஃப்ட்வேர் துறை செழித்து ஓங்கி வளர்ந்தது. மேலைநாடுகளுக்கு நம் நாட்டு இளைஞர்கள் பெருவாரியாகச் செல்ல முடிந்தது. நாட்டின் பொருளாதாரமும், வீடுகளின் பொருளாதாரமும் உயர வைத்து நம் நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் ஒழியவும் உதவியது.
அதுபோல ஏ.ஐ. வருகையால் வேலை வாய்ப்புகள் நிச்சயம் குறையாது. சாஃப்ட்வேர்களில் ஏ.ஐ. தொழில்நுட்பம் புகுத்தப்படும். இதனால் நாம் செய்துகொண்டிருக்கும் பணிகள்தான் சுலபமாகுமே தவிர, வேலை வாய்ப்புகள் குறையாது. நேற்று வரை ஏ.ஐ. ஓர் அதிசயம்; இன்று அது நம் வாழ்வின் அவசியம்.