முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

மாற்றம் தந்த மதிப்பீடு!

சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தியுள்ள "திரைவழி மதிப்பீட்டு முறை' என்பது வெறும் கணினிமயமாக்கல் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் வாரியம் வழங்கும் ஒரு பாதுகாப்பு உறுதிமொழியாகும்.

Updated On : 16 மே 2026, 7:05 am IST
கோப்புப் படம்
பகிர்:

-அனந்த பத்மநாபன்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிமுகப்படுத்தியுள்ள "திரைவழி மதிப்பீட்டு முறை' என்பது வெறும் கணினிமயமாக்கல் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் வாரியம் வழங்கும் ஒரு பாதுகாப்பு உறுதிமொழியாகும்.

தொழில்நுட்பம் வழங்கும் இந்த பாதுகாப்புக் கவசம், முன்பு காகித விடைத்தாள்களைத் திருத்தும்போது நிலவிய போக்குவரத்துச் சேதங்கள் அல்லது கூட்டல் பிழைகள் போன்ற சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மாணவர்களின் விடைத்தாள்கள் இப்போது உயர் தரத்தில் வருடி எடுக்கப்பட்டு, கணினித் திரையில் துல்லியமாக மதிப்பீடு செய்யப்படுகின்றன. இதன்மூலம், ஒரு சிறிய மதிப்பெண்கூடக் கணக்கிடப்படாமல் போவதற்கு வாய்ப்பே இல்லை. மேலும், மதிப்பீட்டாளர்கள் ஒரு விடையைக் கூடத் தவறவிட முடியாதபடி மென்பொருள் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதால், கவனக்குறைவால் ஏற்படும் மதிப்பெண் இழப்புகள் முழுமையாகத் தவிர்க்கப்படுகின்றன.

Advertisement

மாணவர்கள் எழுதிய விடைகள் இப்போது சிங்கப்பூர் போன்ற நாடுகளின் உலகத்தரம் வாய்ந்த கல்வி அமைப்புகளுக்கு இணையாக மதிப்பீடு செய்யப்படு கின்றன. சர்வதேசத் தரம் வாய்ந்த இந்தத் தகுதிக்கான அங்கீகாரம், நவீன தொழில்நுட்பம் மற்றும் முறையான திட்டமிடல் மூலம் சாத்தியமாகியுள்ளது. இத்தகைய

அங்கீகாரத்தில், மென்பொருளே மதிப்பெண்களைக் கணக்கிடுவதால் பாரபட்சமற்ற ஒரு வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, "கியூஆர் கோட்' முறை மாணவர்களின் அடையாளத்தை மறைத்து வைப்பதால், ஒரு தனிப்பட்ட நபராகப் பார்க்காமல், திறமையை மட்டுமே இந்த அமைப்பு மதிப்பிடுகிறது. இதுவே உண்மையான நடைமுறை நீதி ஆகும். இத்தகைய நுட்பமான அணுகுமுறை, மாணவர்களின் கல்விசார் உழைப்புக்கு மிக உயர்ந்த மதிப்பையும் சமூக நீதியையும் பெற்றுத் தருகிறது.

காத்திருப்பின் உளவியலும் ஏற்றுக்கொள்ளுதலும் குறித்து வெளிநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி, தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் காலகட்டத்தில்தான் மாணவர்கள் அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாவதாகத் தெரியவந்துள்ளது. தேர்வில் ஒருவேளை தோல்வி அடைந்தால் ஏற்படும் வருத்தத்தைவிட, அந்தத் தெரியாத முடிவுக்காக காத்திருக்கும் "நிச்சயமற்ற நிலை' அதிக வேதனையைத் தருகிறது. முடிவுகளுக்காகக் காத்திருக்கும்போது நிலைமையை வலுக்கட்டாயமாக நேர்மறையாக மாற்ற முயல்வதோ அல்லது கவலைகள் குறித்து தொடர்ந்து மற்றவர்களிடம் விவாதிப்பதோ எதிர்மறை உணர்வுகளை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அந்த ஆய்வு எச்சரிக்கிறது.

இதற்கு மாறாக, "ஏற்றுக்கொள்ளுதல்' என்பதே மிகச் சிறந்த உத்தியாகக் கருதப்படுகிறது; அதாவது, எழும் பயத்தையோ அல்லது கவலையையோ தவிர்க்க முயற்சிக்காமல், அவற்றை இயல்பான உணர்வுகளாக அங்கீகரிப்பதே மன அமைதிக்கு வழிவகுக்கும். புதிய மாற்றங்கள் மற்றும் எதிர்காலம் குறித்துப் பார்க்கையில், இந்த மதிப்பீட்டு முறைகள் ஆசிரியர்களின் பொறுப்பை அதிகரித்துள்ளன.

ஒவ்வொரு விடையையும் முழுமையாகப் பார்த்துத் திருத்திய பின்னரே ஆசிரியர்கள் அடுத்த விடைத்தாளுக்குச் செல்ல முடியும் என்பது, மாணவர்களின் கடின உழைப்புக்கு வாரியம் அளிக்கும் மரியாதையாகும். மேலும், "டிஜி லாக்கர்' போன்ற வசதிகள்மூலம் முடிவுகள் வெளியான உடனேயே அவற்றை உயர் கல்விச் சேர்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதால், இது தேர்வு முடிவுகளுக்குப் பிந்தைய அலைச்சலையும் பதற்றத்தையும் பெருமளவு குறைக்கிறது. இந்த வேகமான நடைமுறை, மாணவர்கள் தங்கள் அடுத்தகட்ட உயர் கல்வித் திட்டமிடல்களை எவ்விதத் தொய்வும் இன்றி மேற்கொள்ள உதவுகிறது.

தற்காலக் கல்விச் சூழலில், தேர்வு என்பது ஒரு மாணவரின் ஒட்டுமொத்த ஆளுமையையும் அளவிடும் கருவி அல்ல என்பதையும் நாம் உணர வேண்டும்.

மதிப்பெண்கள் ஒரு வாயிற்கதவைத் திறந்துவிடக்கூடும்; ஆனால், உங்கள் வாழ்வின் வெற்றிப் பயணத்தைத் தீர்மானிக்கப்போவது உங்கள் விடாமுயற்சியும், கற்கும் ஆர்வமுமே ஆகும். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் கொண்டு வந்துள்ள இந்த நவீன சீர்திருத்தங்கள், தகுதியுள்ள ஒவ்வொரு மாணவரும் உரிய அங்கீகாரத்தைப் பெறுவதை உறுதி செய்கின்றன.

இது கல்வி முறையில் நிலவி வந்த தேவையற்ற அலைச்சல்களைக் குறைத்து, மாணவர்களின் கல்வித் தகுதியை உலகளாவிய சந்தையில் வலுவாக நிலைநிறுத்துகிறது. கல்வி என்பது வெறும் ஏட்டுச் சுரைக் காய் மட்டுமல்ல, அது வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள மாணவர்களைத் தயார் செய்யும் ஓர் உன்னதப் பயணம்.

அன்பு மாணவர்களே, தேர்வுக்காகச் சிந்திய ஒவ்வொரு துளி வியர்வையும், இரவு - பகலாகப் படித்த அந்த அர்ப்பணிப்பும் வீணாகாது. தொழில்நுட்பம் இப்போது ஒரு "எண்மப் பாதுகாவலனாக' மாறி உங்கள் உழைப்பைப் பாதுகாக்கிறது. விடைகள் எவ்வித மானுடப் பிழைகளுமின்றி, மிகத் துல்லியமாக மதிப்பிடப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தவே இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

உங்களின் அடுத்தகட்ட கனவுகளை நோக்கி நம்பிக்கையுடன் முன்னேறுங்கள். துல்லியமான மதிப்பீடு என்பது உங்கள் உரிமை; அந்த உரிமை இப்போது எண்ம முறையில் முழுமையாக நிலைநாட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.