முகப்பு
தினமணி கதிர்

சாமானியர்களின் குரல்

சேமிப்பு வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து அபராதம் வசூலிப்பதில்லை என்று அனைத்து வங்கிகளும் முடிவு செய்துள்ளன.

Updated On : 7 மார்ச், 2026 at 10:37 PM
பகிர்:

சேமிப்பு வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து அபராதம் வசூலிப்பதில்லை என்று அனைத்து வங்கிகளும் முடிவு செய்துள்ளன.

இந்த முடிவு பல கோடிக்கணக்கான வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. அப்படி ஓர் ஆச்சரியமான முடிவினை வங்கிகள் எடுக்கக் காரணமாக அமைந்தவர் திருவனந்தபுரம் 'வலியசாலை'யைச் சேர்ந்த பரமேஸ்வரன் கிருஷ்ண ஐயர். மூங்கில்களைக் கொண்டு வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள், அலங்கார கலைப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரான அவர் கூறியதாவது:

'எனது ஊழியர்களில் பெரும்பாலோர் பீகார், மகாராஷ்டிரா, அஸ்ஸாம் மாநில பழங்குடியினர். சம்பளம் அவர்களது வங்கிக் கணக்கில் ஆன்லைன் மூலம் வரவு வைக்கப்பட்ட பிறகு, பெரும்பாலான ஊழியர்கள் உடனடியாகப் பணத்தை எடுத்து, தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். அதனால் அவர்களின் சேமிப்பு வங்கிக் கணக்குகளில் பண இருப்பு குறைந்தபட்ச வரைமுறைக்குக் கீழே போய்விடும். அடுத்த மாத சம்பளம் வரவு வைக்கப்படும்போது, கணிசமான தொகை அபராதமாகப் பிடிக்கப்பட்டு வந்தது. சில வங்கிகள் ரூ.2000 வரை அபராதம் விதித்து பிடித்தம் செய்தன.

இந்த அபராதத் தொகை வாங்கிய கடனுக்குச் செலுத்தப்படும் வட்டியைவிட அதிகமாகும். இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று 2022-இல் இந்திய ரிசர்வ் வங்கியிடம் புகார் அளித்தேன். 'இப்படி அபராதம் வசூலிப்பது வங்கிகளின் கொள்கை முடிவு' என்பதால், ரிசர்வ் வங்கி தலையிட முடியாது என்று சொல்லிவிட்டது.

ஒரு சாதாரண புகார் போதாது என்பதை நான் தெரிந்தே வைத்திருந்தேன். ஏப்ரல் 2024- இல் மக்களவைத் தலைவரிடம் விரிவான புகாரைச் சமர்ப்பித்தேன். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளி விவரங்களின்படி, 2024 -25 நிதியாண்டில் மட்டும் வங்கிகள் ரூ.4,818 கோடி அபராதங்களை வசூலித்தன.

2020 மற்றும் 2025- க்கும் இடையில், பொதுத்துறை வங்கிகள் கிட்டத்தட்ட ரூ.11,536 கோடியை வசூலித்தன. அதே நேரத்தில் அந்தக் காலத்துக்கான தனியார் துறை வங்கிகளுக்கான புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால், 2024-25 நிதியாண்டில் தனியார் வங்கிகள் ரூ.2,772 கோடியை அபராதமாக வசூலித்தன என்று தெரிந்துகொண்டேன். இவற்றை எனது மனுவில் கூறியிருந்தேன்.

எனது புகாரை மக்களவை மனுக்கள் குழு பரிசீலித்தது. நிதி அமைச்சகத்தின் அதிகாரபூர்வ தரவுகளை குழு ஆய்வு செய்தது. குறைந்தபட்ச இருப்புப் பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பாக அடிப்படை சேமிப்புக் கணக்குகளில் அபராதம் விதிப்பதை வங்கிகள் நிறுத்த வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது. அனைத்து வங்கிகளுக்கும் தேவையான வழிகாட்டுதல்களை வெளியிடுவது குறித்து பரிசீலிக்குமாறு நிதி சேவைகள் துறை மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியையும் அந்தக் குழு கேட்டுக் கொண்டது.

பரிந்துரை செய்து ஆறு மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நான் வங்கிகளால் வசூலிக்கப்பட்ட அபராதங்களை விவரிக்கும் புள்ளிவிவரங்களுடன் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தேன். பிப்ரவரி 2025-இல், இந்த விஷயத்தை ஒரு பொது நல வழக்காகப் பரிசீலிக்கிறோம் என்று எனக்கு தகவல் வந்தது. பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.

ஆனால், சில மாதங்களுக்கு முன் பொதுத்துறை வங்கிகள் இப்போது குறைந்தபட்ச இருப்பு அபராதத்தை வசூலிப்பதை நிறுத்திவிட்டன. குரல் இல்லாத மக்களுக்கான குரல் கொடுத்ததில் நான் திருப்தி அடைந்தேன். என்னைப் போன்ற சாதாரணர்களும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு' என்கிறார் கிருஷ்ண ஐயர்.

முழு கட்டுரையைப் படிக்க →