முகப்பு
தினமணி கதிர்

கோலிவுட் ஸ்டூடியோ!

இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக வந்திருந்த தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங்குக்கு கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.

Updated On : 3 மே, 2026 at 4:05 AM
பிரியங்கா மோகன்
பகிர்:

தென் கொரிய அதிபரை சந்தித்த பிரியங்கா மோகன்!

இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக வந்திருந்த தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங்குக்கு கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.

அரசியல் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்றார். அண்மையில் அவரது நடிப்பில் 'மேட் இன் கொரியா' படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. அப்படத்தின் பெரும்பகுதி கொரியாவிலேயே படமாக்கப்பட்டது.

Advertisement

ராஷ்டிரபதி பவனில் நடந்த நிகழ்வு தொடர்பாகப் பேசியிருக்கிறார் பிரியங்கா மோகன். அதில், 'இது முற்றிலும் எதிர்பாராத ஒன்று. ராஷ்டிரபதி பவன் உள்ளே எப்படி இருக்கும் என்று எப்போதும் வியந்ததுண்டு. தென்கொரிய அதிபர் லீ ஜே-

மியுங், அவரது மனைவி கிம் ஹீ கியுங் ஆகிய இருவரும் 'மேட் இன் கொரியா' படம் பற்றி என்னிடம் பாராட்டிப் பேசினார்கள். அவர்களிடம் நான் நீண்ட நேரம் உரையாடவில்லை. ஆனால், நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது, அதிபர் என்னைப் பார்த்ததும் நினைவுகூர்ந்து, 'நான் உங்கள் திரைப்படத்தைப் பார்த்தேன்' என்று கூறினார். அதிபரும் அவரது மனைவியும் என்னைப் பாராட்டியது என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத மிகப்பெரிய விஷயம்.

அங்கிருந்த அமைதியான சூழலையும், மரியாதையையும் ரசித்தேன். பல முக்கியப் பிரமுகர்களுடன் அமர்ந்து உணவு அருந்துவது ஒரு கனவு போல இருந்தது. 'மேட் இன் கொரியா' படத்தில் நடிக்கும்போது என் பொறுப்பை உணர்ந்து சிறந்த நடிப்பைத் தரவேண்டும் என்று மட்டுமே உழைத்தேன். கடின உழைப்புக்குப் பலன் கிடைக்கும் என்பார்கள்; அது என் விஷயத்தில் நிஜமாகியுள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.

அஜித், ஷாலினி

அந்த ஒரு காட்சி - அஜித், ஷாலினி காதல் குறித்து சரண்!

சரண் இயக்கத்தில் அஜித்குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் 1999 - ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அமர்க்களம்'. அஜித்குமார், ஷாலினி திருமண நாளை முன்னிட்டு 4 கே தொழில்நுட்பத்தில் 'அமர்க்களம்' திரைப்படம் அண்மையில் வெளியானது.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் சரண் அஜித், ஷாலினியின் காதல் குறித்துப் பகிர்ந்திருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், 'அஜித், ஷாலினி காதல் விஷயம் எனக்குத்தான் முதலில் தெரியும். என்னிடம் தான் முதலில் சொன்னார்கள்.

முதலில் அஜித் சார் டேட் பிரச்னையால் விட்டுவிட்டுத்தான் படத்தில் நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு அஜித் சார் என்னிடம் வந்து, 'சரண் ஜி, உங்களுக்கு விட்டுவிட்டு டேட் தராமல் ஒரே கட்டமாகத் தருகிறேன். சீக்கிரம் படத்தை முடித்துவிடுங்கள். இல்லையென்றால், இந்தப் பொண்ணை நான் லவ் பண்ணிவிடுவேனோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது' என்றார். அப்போது என் அருகில் இருந்த ஷாலினியின் முகம் சிவந்து போனது.

கிட்டத்தட்ட அது புரொபோசல்தான். இந்தப் படத்தில் முக்கியான இடத்தில் அஜித்தும், ஷாலினியும் காதலோடு பேசிக்கொண்டிருந்தபோது அவர்களுக்குத் தெரியாமல் எடுத்த ஒரு காட்சியைப் படத்தில் வைத்திருக்கிறேன். அதைக் கண்டுபிடியுங்கள்'' என்று கூறியிருக்கிறார்.

வாரி வாரி - பாடகி தீயின் அடுத்த பாடல் வைரல்!

உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய தமிழ்ப் பாடகி, பாடலாசிரியரான தீ, 'வாரி வாரி' என்ற புதிய, துணிச்சலான, உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களைச் சந்தித்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பாடலாசிரியர் சாவன் கோடேச்சா, ரிபப்ளிக் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நிறுவிய விஸ்வா ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் தீ ஒப்பந்தம் செய்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையிலும், கவிஞர் விவேக் எழுதிய வரிகளுடனும், விஸ்வா ரெக்கார்ட்ஸூடன் இணைந்து, தீ தனது மனதை வருடும் அழகான பாடலான 'வாரி வாரி'யை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக தீ குறிப்பிடுகையில், 'இந்தப் பாடல் நம்மைவிட்டுப் பிரிந்து இனி இல்லாத ஒருவரையோ அல்லது ஒன்றையோ பற்றியது. தொலைந்து போன ஓர் உணர்வை பற்றியது. இந்தப் பாடல் முழுவதுமே வழியில் நீங்கள் தொலைத்திருக்கக்கூடிய உங்களைத் தேடி, அந்த உணர்வை மீண்டும் பெற முயற்சிப்பதாகும்'' என்றார்.

நெருக்கமான, உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டும் காதல் பாடலான 'வாரி வாரி' உறவின் நீடித்த முத்திரையை அதன் தூய்மையான வடிவில் வெளிப்படுத்துகிறது. பாடகி தீ யின் ஆத்மார்த்தமான ஆல்டோ குரல் மற்றும் பல்வேறு இசை வகைகளில் பயணிக்கும் உணர்வால் வழி நடத்தப்படும் இந்தப் பாடல், தமிழ் நாட்டுப்புற பாரம்பரியத்தில் வேரூன்றி இருந்தாலும், ஆழ்ந்த தனிப்பட்ட உணர்வைத் தருகிறது.

இதன் மூலம் இது தமிழ் பாப் இசையின் முன்னணி வரிசையில் அவரது இடத்தை வலுப்படுத்துவதுடன், புலம் பெயர்ந்தோரின் இசையை உலகளாவிய பிரதான நீரோட்டத்துக்கும் கொண்டு செல்கிறது. தொடர்ச்சியான கைதட்டல்கள், எதிரொலிக்கும் கிட்டார் இசை, கோடுகளின் மீது கட்டமைக்கப்பட்ட இதன் இசையமைப்பு, அவரது குரல் மைய இடத்தைப் பிடிக்க இடமளிக்கிறது. அவரது பாடும் பாணி அமைதியாக காந்தம் போல் ஈர்க்கிறது. அது கேட்போரை விரிவானதாகவும் உடனடியானதாகவும் உணர வைக்கும் ஒரு பல்லவிக்குள் இழுத்துச் செல்கிறது.

புதிய காதலைப் பற்றிய சிந்தனையாகத் தொடங்கும் இப்பாடல் காதலுக்கு அப்பாற்பட்டு ஒருவரின் உணர்வுலகில் நீடித்திருக்கும் எவரையும் உள்ளடக்கும். நிபந்தனையற்ற பிணைப்பை பற்றிய ஒரு தியானமாக இதமாகவும் சிந்தனைக்குரியதாகவும் விரிவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.