குடும்ப உறவுகளைக் கொண்டாடிய விஜய்யின் காதலுக்கு மரியாதை!
முதல்வர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி... வெளியாகி 29 ஆண்டுகளாகியும் பெற்றவர்களின் அன்பையும் குடும்ப உறவுகளையும் கொண்டாடும் காதலுக்கு மரியாதை பற்றி...
1997-ஆம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படம், விஜய் - ஷாலினி நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட். விஜய்யின் வெற்றிப் படங்கள் வரிசையில் பூவே உனக்காக படத்துக்குப் பின் உருவான எதிர்பார்ப்பைச் சிந்தாமல் சிதறாமல் வெற்றிக் கனியாக மாற்றியிருந்தார் மலையாளத்திலிருந்து வந்த படத்தின் இயக்குநர் ஃபாசில்.
படம் வெளியாகி சுமார் 30 ஆண்டுகளாகப் போகிறது, மிகச் சிறந்த திரைக்கதை, எளிய வசனங்கள், விஜய் - ஷாலினி நடிப்பு, இளையராஜா இசையில் திரைப்பாடல்கள் படத்தின் வெற்றிக்கு வித்திட்டன. தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த ஷாலினி, தமிழில் நாயகியாக இப்படத்தில் அறிமுகமானார்.
பெரிய அளவில் விளம்பரங்கள், டிரைலர்கள் வராத காலத்திலும் குடும்பம் குடும்பமாகத் திரையரங்கு சென்று படத்தைப் பார்த்து மக்கள் ரசித்தனர். நாயகனும் நாயகியும், தங்களது காதலைத் தியாகம் செய்ததாலோ என்னவோ, இளைஞர்களையும் தாண்டி பெற்றோர் வயதுடையவர்களை அதிகம் கவர்ந்திருந்தது.
Advertisement
Advertisement
பலரும், அப்படத்தை மீண்டும் ஒருமுறை திரையரங்கு சென்று பார்க்க விருப்பப்பட்டனர். விஜய் சிறப்பாக நடித்திருந்தார் என்று மனதாரப் பாராட்டினார்கள். காதலுக்கு மரியாதை படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள்தான் படம் முழுக்க பயணிப்பார்கள். பெரும்பாலான காட்சிகளும் ஆள் ஆரவமற்ற பகுதிகளில் படமாக்கப்பட்டதால் எந்த இரைச்சலும் இன்றி படம் நகரும். சில பாடல்கள் ஆங்காங்கே சேர்க்கப்பட்டிருந்தாலும் இளையராஜா இசையில் அனைத்துமே ஹிட். காலத்தால் அழியாதவை.
படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றிருக்கிறது. அதில் வரும் வசனங்கள், பெரும்பாலான கதாபாத்திரங்கள் இரண்டு, மூன்று சொற்களில்தான் வசனம் பேசியிருப்பார்கள். அதிக வசனம் பேசியிருந்தது என்று சொன்னால் மீனவ கிராமத் தலைவர் மணிவண்ணன் வரும் காட்சிகளில்தான்.
படம் இப்படித் தொடங்குகிறது, ஹிந்து மதத்தைச் சேர்ந்த விஜய்யின் ஜாதகத்தை அவரது பெற்றோர் சிவகுமார் - ஸ்ரீவித்யா தம்பதி ஜோதிடர்களிடம் காட்டுகிறார்கள். விரைவில் திருமணம் என அவர்கள் சொல்ல, படத்தின் நாயகன் விஜய் எனும் ஜீவாவோ மேற்கொண்டு படிக்கக் கல்லூரி செல்கிறார்.
அங்கு சார்லியும் தாமுவும் நண்பர்களாகிறார்கள். எதிர்பாராத வகையில் கடை ஒன்றில் ஷாலினியை விஜய் பார்க்க, முதல் பார்வையிலேயே இருவருக்கும் காதல் பற்றிக்கொள்கிறது. கிறிஸ்துவ குடும்பத்தில் ராதாரவி, தலைவாசல் விஜய், ஷாஜி கான் என மூன்று அன்பான அண்ணன்களுக்கு இளவரசி, வீட்டின் குலவிளக்காக கொண்டாடப்படும் நாயகி மினி.
கல்லூரிக்கு வரும் வழியில், உணவகத்தில் என எதிர்பாராத இடங்களில் நாயகன் - நாயகி சந்திப்பு நிகழ்கிறது.
அவர்களுக்குள் காதல் மலர்வதற்குள் ஷாலினியின் அண்ணன்களிடம் விஜய் மாட்டிக் கொள்கிறார். ஷாலினியைப் பார்க்கும்போது எப்படி விஜய்க்கு காதல் தீ பற்றிக் கொள்கிறதோ, அதுபோலவே அவரது அண்ணன்களைச் சந்திக்கும் காட்சிகளில் எல்லாம் அடி - உதை அனல் பறக்கிறது.
இதுபோன்ற ஒரு அடி - உதையில்தான் ஷாலினி தன்னுடைய காதலை அண்ணனிடம் சொல்ல, அது அவரது குடும்பத்தில் அணுகுண்டாக வெடிக்கிறது. மீண்டும் வீட்டுக்குச் செல்ல முடியாத நிலை ஷாலினிக்கு. சார்லி தன்னுடைய மீனவக் கிராமத்துக்குக் காதலர்களை அழைத்துச் செல்ல அங்கும் வந்து சண்டையிடுகிறார்கள் ஷாலினியின் அண்ணன்கள்.
கடைசியாக இருந்த ஒரே ஒரு வாய்ப்பு, தன்னுடைய தாய் என நம்பி விஜய் செல்கிறார். ஆனால், காரணமே இன்றி விஜய்யின் பெற்றோரும் காதலை எதிர்க்கிறார்கள். அப்பெண்ணை விட்டுவிட்டு திரும்ப வருமாறு வலியுறுத்துகிறார்கள். நம்பிக்கையிழந்து திரும்பிவரும் விஜய் - ஷாலினிக்கு திருமணம் செய்ய மீனவக் கிராமத்தின் தலைவர் மணிவண்ணன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய, இத்தனை காலமும் அன்புகாட்டி அரவணைத்த குடும்பம் ஏன் தங்களை வெறுக்கிறார்கள் என்று காதலர்கள் யோசிக்க, காதல்தான் என்று உணர்ந்து, அந்தக் காதலைத் தியாகம் செய்ய முடிவெடுக்கிறார்கள்.
மணிவண்ணனிடம் தங்களுடைய முடிவை நியாயப்படுத்தி ஷாலினி பேசும் வசனத்தில், சாகணும்னு நினைக்கலையே, பிரியணும்னுதானே முடிவெடுத்தோம் என்று பேசும்போது பலரையும் அறியாமல் கண்களில் கண்ணீர் தளும்பும்.
திருமண ஏற்பாடுகளை நிறுத்திவிட்டு, தங்களது குடும்பத்தை நோக்கி கனத்த இதயத்துடன் செல்லும் இருவரையும் அவரவர் குடும்பம் ஆரத்தழுவி வரவேற்கிறது (இதற்குத்தானே ஆசைப்பட்டார்கள்).
இறுதியில் ஷாலினிக்கு திருமணம் நிச்சயமாக, ஷாலினியை பார்க்க விரும்பிய விஜய்யின் தாய், குடும்பத்தோடு அவரது வீட்டுக்குச் செல்கிறார்.
விஜய்யை ஷாலினியின் தாய்க்கு அறிமுகப்படுத்தும் காட்சியில், அடுத்து விஜய் என்ன பேசுவார் என எதிர்பார்க்கும்போது, இந்த பிரச்னையில், மினிக்கு எந்த சம்பந்தமும் இல்லை, எல்லாம் தன்னால்தான் என விஜய் சொல்லும்போது அங்கு நாயகனாக மிளிர்வார்.
ஸ்ரீவித்யா, ஷாலினியைப் பார்த்ததும் கலங்கிப் போகிறார். 'இப்படி ஒரு பெண்ணைத் தன் மகனுக்கு எப்படி நான் தேடுவேன், இவள் என் மருமகள், என்னிடம் கொடுத்துவிடுங்கள்' என்று கேட்க, ஷாலினியின் தாயும் 'கூட்டிக்கிட்டுப் போங்க, உங்க மருமகளை' என ஒற்றை வார்த்தையில் சம்மதம் கூறி, படத்துக்கு அனைவரும் எதிர்பார்த்த திருப்புமுனையைக் கொடுக்கிறார். சுபம் போட்டு இனிதே நிறைவடைகிறது படம்.
படத்தின் அனைத்துப் பாடல்களுமே கொண்டாடப்பட்டாலும், என்னைத் தாலாட்ட வருவாளா பாடல், அப்போதைய காதலர்களுக்குப் பிடித்த பாடலாகிப் போனது. ஆனந்தக் குயிலின் பாட்டு, ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே என்ற பாடல்கள் இப்போதும் மனுக்குள் குதூகலத்தை ஏற்படுத்தி 30 ஆண்டுகளுக்கு முன் கொண்டு சென்றுவிடும்.
இயக்குநர் ஃபாசிலின் மலையாளத் திரைப்படமான அனியத்திப்ராவு என்பதன் தமிழ் மறு உருவாக்கமே காதலுக்கு மரியாதை. இரண்டிலுமே நாயகியாக ஷாலினி நடித்திருந்தார். இப்படத்துக்கு முதலில் அப்பாஸ் தேர்வு செய்யப்பட்டு, கால்ஷீட் குளறுபடிகளால் விஜய் நடித்ததாகவும் சொல்வார்கள்.
திரைப்படத்தில் காதலர்களாக நடித்த விஜய், ஷாலினியின் மிகையில்லாத நடிப்பு, வசனம் போன்றவற்றாலும், குடும்பத்தையும், உறவுகளையும் கொண்டாடும் திரைக்கதை என்பதாலும், படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். தமிழின் மிக அழகிய காதல் பட வரிசைகளில் காதலுக்கு மரியாதைக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதை உண்டு இன்றளவும்.
It is about to be 30 years since the release of the film Kadhalukku Mariyadhai, which celebrated parental love and family relationships.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.