கேரள ஆவணப்படத் திருவிழா 2026: சில அனுபவங்கள்
பொதுவாக நம்மை யாரிடமாவது நண்பர்கள் அறிமுகப்படுத்தும்போது, 'இவர்தாங்க ஆவணப்பட இயக்குநர்' என்று அறிமுகப்படுத்துவார்கள்.
பொதுவாக நம்மை யாரிடமாவது நண்பர்கள் அறிமுகப்படுத்தும்போது, 'இவர்தாங்க ஆவணப்பட இயக்குநர்' என்று அறிமுகப்படுத்துவார்கள். 'ஓ... அப்படியா?!' என்று நம்மைப் பாவமாகப் பார்த்து, 'நீங்க சினிமா எடுக்கலைங்களா?' என்ற கேள்வி கேட்கப்படும். 'இல்லை' என்றதும், 'இதிலே எதுவும் வரும்படி வரும்ங்களா?' என்று அடுத்த கேள்வி வரும்.
நாமும் பதிலாக உதட்டைப் பிதுக்கியதும், 'சரி, சரி' என்ற தலையாட்டலோடு, போனால் போகிறதென்று அநிச்சையாய் ஒரு சிரிப்பு சிரித்து, கைகுலுக்கி நகர்ந்துவிடுவார்கள். அவர்கள் திரும்பிப் போகிற அந்த நடையே நம்மைப் பார்த்துச் சொல்லும்: 'பொழைக்கத் தெரியாதவங்கடா நீங்க'.
ஆனால், ஒரு திரைப்பட இயக்குநருக்கு இதெல்லாம் நடப்பதில்லை. பொதுப் புத்தியில் ஆவணப்படம் அல்லது குறும்படம் என்பது எத்தனை 'மாற்று' கம்மி என்பது, அவரவர் அனுபவம், படிப்பு மற்றும் கலைத்தேட்டம் சார்ந்த விஷயங்கள்.
Advertisement
Advertisement
இந்த அபிப்ராயத்தை முற்றிலும் மாற்றி, புதிய அனுபவத்தை உணர வைத்தது திருவனந்தபுரத்தில் 2026 செப்டம்பர் 25 முதல் 30 வரை நான் கலந்துகொண்ட 18-ஆவது சர்வதேச ஆவணப்பட, குறும்படத் திருவிழா.
திரைப்பட விழாவைப் போல்...
சேட்டன்மாரும், அனியன்மாரும், சேச்சிமாரும், அனியத்திமாரும் தந்த மரியாதை, கௌரவமெல்லாம் என் அனுபவத்தில் இந்தியாவில் நான் எங்கும் கண்டதில்லை. ஒரு திரைப்பட இயக்குநருக்கான அதே ஸ்தானம், எங்கள் எல்லோருக்கும் வழங்கப்பட்டது. மூன்று நட்சத்திர விடுதியில் தங்குமிடம், அற்புதமான பிராந்திய (கவனமாக வாசிக்கவும்) உணவுகள், இரண்டாம் வகுப்பு குளிர்சாதன ரயில் பயணப்படி, தினத்துக்கான படிச்செலவுகள் என்று பலவிதமாக எங்களைக் கொண்டாடித் தீர்த்தார்கள்.
இந்த விழாவில் பரிசீலனைக்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு மத்தியில், தமிழில் நமது 'நிலம் + நீதி = கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்' ஆவணப்படமும் திரையிடலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டதால், இயக்குநர் என்ற வகையில் நானும் அதில் கலந்துகொண்டேன். ஒரு பத்து கல்யாண வேலைகளைச் சேர்த்துச் செய்கிற நெருக்கடியிலும் அவ்வளவு நறுவிசாக, நேர்த்தியாக, சிக்கல் சிடுக்கல், குழப்பம் கூச்சல் இல்லாமல் கவிதை போலச் செய்தார்கள். தமிழகத்தில் நிச்சயமாக இந்த நேர்மை, நுட்பம் இருந்திருக்குமா என்பது சந்தேகமே!
காங்கிரஸ் ஆளும் மாநிலம் என்பதால், கேரள முதல்வர் வி.டி.சதீஷனும், கலாசாரத் துறை அமைச்சர் பி.சி.விஷ்ணுநாத்தும் விழாவில் மத்திய அரசைச் சாடினார்கள். எந்த ஆவணப் படம், எதனால் தடை செய்யப்பட்டது என்று தெரியாமல், எங்களுக்குக் கருத்துத் தெரிவிக்க ஏதுமில்லை.
ஆனால், மாநில அரசு வழக்குப் போட்டிருப்பதாகவும், தீர்ப்பு வந்ததும், அந்தப் படங்கள் தனியே திரையிடப்படும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர். கலை வெளிப்பாட்டுக்கு அரசியல் தேவையில்லைதான். ஆனால், பிரசாரமும் கலையாகிப் போன சூழலில், அதில் எங்கேயாவது கலை இருக்கிறதா? என்றுதான் நாம் தேடிப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால், இந்த தேசத்தில் அரசியல் இல்லாதது எது?
இது ஒரு பக்கமிருந்தாலும், தாட்சண்யமற்ற நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான ஆவணப்படங்களை, ஒளி ஒலி சிறப்பாக அமைந்த சுத்தமான திரையரங்குகளில் பார்க்க நேர்ந்தது, எங்களைப் போன்ற திரைப்பட ஆர்வலர்களுக்கு, கலைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. சிறந்த படங்களுக்கு விருது அளிக்கப்பட்டதோடு, பேராசிரியர். நினா சப்னானி அவர்களுக்கு இத்துறையின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.
நீள் ஆவணப் படங்களில்..
நீள் ஆவணப்படங்களில் மலையாள இயக்குநர் கே.எம்.கமால் இயக்கிய 'குளோசப் அண்ட் அப் குளோஸ் - தி மேக்கிங் ஆஃப் பொலிட்டிக்கல் உபு' என்கிற, ஒரு நாடகம் உருவாக்கப்படுவதைப் பற்றிய படம். 1896-ஆம் ஆண்டு எழுதப்பட்ட 'உபு ரோய்' என்ற நாடகம் பேராசை மற்றும் அதிகாரம் ஆகிய கருப்பொருள்களைக் கொண்டது. இது ஆல்ஃபிரடு ஜாரி எழுதிய ஒரு ஃபிரெஞ்ச் நாடகம். கேரளாவைச் சேர்ந்த கலைக் குழுவினரால் இது இன்றைய இந்தியச் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுகையில் அதில் என்னென்ன நிகழ்கிறது என்பதை நகைச்சுவை கலந்து இப்படம் சொன்னது.
ஹிந்தி இயக்குநர் சின்ட்டன் பரேக் இயக்கிய படம் 'கோட்டிபுவா : பியாண்ட் பார்டர்ஸ்'. இது 500 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள சிறுவர்கள், கோட்டிப்புவா எனப்படும் புனித நடன மரபின் வழியாக இறைவனுக்குச் சேவை செய்வதற்காகப் பெண்ணுருவம் ஏற்று நடனமாடி வருவது குறித்துப் பேசியது. பரவலாக அறியப்படாத இந்த மரபிலிருந்துதான், இந்தியாவின் புகழ்பெற்ற செவ்வியல் நடன வடிவங்களில் ஒன்றான ஒடிசி உருவாகியுள்ளது.
இன்று, ஜி 20 உச்சி மாநாடு, பக்கிங்ஹாம் அரண்மனை உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற மேடைகளில், 30-க்கும் மேற்பட்ட நாடுகளில், இந்தியாவை இக்கலை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தாலும், பல கோட்டிப்புவா கலைஞர்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே ஏன் இன்னும் அறியப்படாதவர்களாகவே உள்ளனர், சில வரலாறுகளைப் பாதுகாக்கவும், வேறு சில வரலாறுகளை மறைக்கவும் இந்தச் சமூகம் எவ்விதம் அனுமதிக்கிறது என்கிற கேள்விகளையும் இந்தப் படம் எழுப்பியது. நான் பார்த்தவற்றில் இந்த இரண்டு ஆவணப்படங்களும் மிக முக்கியமானவை.
குறும் ஆவணப் படப் பிரிவில்...
குறும் ஆவணப்படப் பிரிவில் நமது படமும் பங்கேற்றது. சக கலைஞர்களது படங்களில் மூன்று படங்கள் என் மனத்திலேயே நிற்கின்றன. பெங்காலி இயக்குநர் தேபலினா மஜும்தார் 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து பதிவு செய்திருந்த படம் 'ஃபிரண்ட்ஸ் ஆஃப் ஜிலிபிபாலா'.
ஒரு புளியமரத்தை மையமாக வைத்து, மொத்த சுற்றுச்சூழல் குறித்த நம் அலட்சிய மனோபாவத்தை கேள்விக்குள்ளாக்குகின்றன அர்த்தபூர்வ காட்சிகள். ஜிலிபிபாலா என்ற சின்னஞ்சிறுமி, சுற்றியுள்ள மரங்களில் வாழும் உயிரினங்களுடன் நட்பு கொண்டு திரிகிறாள்; ஓடுகிறாள்; நடக்கிறாள்; பேசுகிறாள். பிற உயிரினங்களின் மகிழ்ச்சியை, துயரங்களை உணர்வுபூர்வமாக தன் இயல்பான மழலை மொழியில் நம்மோடு பகிர்ந்து கொள்கிறாள்.
நகரமயமாக்கல் அந்தப் பகுதியை நெருங்கி வர வர, கட்டுமானப் பணிகளும், அதனால் ஏற்படும் அழிவும் அந்த அமைதியான இயற்கைச் சூழலைச் சீர்குலைக்கின்றன. ஜிலிபிபாலா போலவே அவளது மனிதரல்லாத நண்பர்களும் தங்களைச் சுற்றி நிகழும் இந்தக் குழப்பத்தையும், அன்றாட வாழ்க்கையின் மாற்றங்களையும், பேரழிவையும் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.
அஃறிணைகளின் அந்தக் காட்சிகளை அவர் உருவாக்கியுள்ள விதம் அற்புதம். ஒரு குழந்தையின் கண்கள் வழியாகவும், அவள் நேசிக்கும் மனிதரல்லாத உயிரினங்களின் பார்வை வழியாகவும், இயற்கைக்கும் நகரமயமாக்கலுக்கும் இடையிலான ஒரு மோதலை மனம் கனக்கச் சொன்ன இந்தப் படமே அந்தப் பிரிவில் விருதையும் வென்றது.
இரண்டாவது, அதோஷ் ஜாரே இயக்கிய 'இந்தியாவின் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள்' என்ற ஹிந்தி ஆவணப்படம். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாரியா பகுதியைச் சார்ந்த நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்திருந்தது இப்படம். இங்கு கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நிலத்தடியில் தீ எரிந்து கொண்டிருக்கிறது என்பதும், நச்சுத்தன்மை கொண்ட வாயுக்கள் உலவுகின்றன என்பதும் திகிலாக இருந்தன.
எந்த நேரமும் சரிந்து விழக்கூடும் நிலப்பகுதிகளால் ஆபத்தை எதிர்நோக்கும் சூழலுக்கு மத்தியிலும், உள்ளூர்த் தொழிலாளர்கள் தங்கள் வயிற்றுப்பாட்டுக்காக தொடர்ந்து நிலக்கரியைத் தோண்டி எடுக்கும் வேலைகளைச் செய்கின்றனர். அவர்களது அன்றாடப் போராட்டங்கள், விடாமுயற்சி போன்றவற்றை படம் வெளிப்படுத்துகிறது. நிலக்கரியைச் சார்ந்திருக்கும் நாட்டின் சுற்றுச்சூழல், மற்றும் அதனால் ஏற்படும் சமூகச் செலவுகளையும் படம் இன்னொரு கோணத்தில் காட்டுகிறது. ஓவியம் போன்ற ஒளிப்பதிவுக்கும் களத்துக்குள்ளேயே பயணித்துப் படமாக்கிய தீரத்துக்கும் நாம் வந்தனம் சொல்லியே ஆக வேண்டும்.
மூன்றாவதாக, மலையாள இயக்குநர் வி.என்.மாளவிகா இயக்கிய 'அட் ரீல்'ஸ் எண்ட்' என்ற படம். கேரளா முழுவதும் பணியாற்றிய திரைப்படத் திரையிடுபவர்களின் வாழ்க்கையைப் பற்றிய படம். திரைப்படங்கள் ஃபிலிம் ரீலிலிருந்து டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறியபோது, திரையிடுபவர்களின் வாழ்க்கை எவ்வாறு மாறியது, டிஜிட்டல் சினிமாவின் வருகைக்கு முன் பொதுமக்களுக்கு சினிமா என்றால் என்னவாக இருந்தது, அது இப்போது என்னவிதமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பவற்றை இந்தப் படம் மிக அழகான ஒளிப்பதிவில் சொல்லிற்று. பதிவு செய்யப்பட்ட அவர்களின் வாழ்வு இந்தியா முழுமைக்குமானதுதான்.
இந்த வரிசையில் நமது படமும் திரையிடப்பட்டது. திரையிடும் முன் படத்தைக் குறித்து மாடரேட்டர் சொன்னது இது: இந்தியாவின் குக்கிராமத்து காந்தியப் பெண்மணி ஒருவர், விளை நிலம் - அந்த விளைநிலத்தின் வழியே கண்ணியம் - இவை இரண்டின் வழியே நீதியைப் பெற்றுத்தர இன்றைக்கும் போராடிக்கொண்டிருக்கிறார் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்.
அந்தப் போராட்டமான அர்ப்பணிப்பை, அவரது தனிப்பட்ட தியாகத்தைப் பதிவு செய்துள்ளது இந்தப் படம். சராசரி வாழ்க்கையைவிட சேவை வாழ்வையே விரும்பித் தேர்ந்தெடுத்த அவர், தம் குடும்ப வாழ்க்கை குறித்து கிஞ்சித்தும் கவலைகொள்ளவில்லை. இந்தப் படம் ஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனை தேவதையாகச் சித்திரிக்கவில்லை. மாறாக, காயங்கள் நேர்கிற போதும் அவர் கடைப்பிடித்த அமைதியான உறுதிப்பாட்டினை எளிமையாகச் சொல்லிச் செல்கிறது.
முதன்முதலில் நான், அம்மாவை பல வருடங்கள் முன் சந்திக்கச் சென்ற போது, 'எனக்கு வேலை இருக்கிறது... போங்கள்' என்று சொல்லி அனுப்பிவிட்டார். ஆனாலும் அவரைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்ட பின், அவரைப் படம் எடுக்க ஒரு தயாரிப்பாளருக்காக நான் ஐந்து ஆண்டுகள் காத்திருந்தேன். கடைசியில் சென்னை சில்க்ஸ் அதிபர் டி.கே. சந்திரன் இப்படத்தைத் தயாரிக்க முன்வந்தார் என்பதை, அம்மாவின் சோர்விலாத தன்னலமற்ற இயக்கமே என்னைப் படமெடுக்கத் தூண்டியது.
1926-ஆம் ஆண்டில் பிறந்து, இன்றும் தனது 101-ஆம் வயதில் நலமாக வாழ்ந்து வரும் அம்மாவின் வாழ்வு, ரணங்கள் தோய்ந்த வெற்றிகளாலும் ஆனது. கீழ்வெண்மணியில் 41 தலித்துகள் உயிரோடு எரிக்கப்பட்டபோது, உடனே அங்கு சென்று அவர்களுக்கு உறுதுணையாய் இருந்து, பாதிக்கப்பட்ட அத்தனை குடும்பங்களுக்கும், தலா ஒரு ஏக்கர் நிலத்தைப் பெற்றுத் தந்தன.
ஜெயபிரகாஷ் நாராயணனின் ஆலோசனையின் பேரில், கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகந்நாதன் இருவரும் பீகாருக்குச் சென்று, புத்த கயாவில் தலித் நில மீட்புப் போராட்டங்களில் ஈடுபட்டு அங்கு 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தலித்துகளுக்குப் பெற்றுத் தந்தனர்.
இப்படிச் சொல்லச் சொல்ல நீளும் அம்மாவின் வாழ்வு, காட்சியிலோ சொற்களிலோ அடங்கிவிடுவதில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.