FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காலம் எதற்கும் காத்திருக்காது!

பலரும் தங்களுக்கு எல்லா சூழ்நிலைகளும் சாதகமாக வரும் போதுதான் வேலையைத் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், 100 சதவீதம் சரியான சூழ்நிலை எப்போதுமே அமைவதில்லை.

19 அக்டோபர் 2026, 5:26 am IST
- பிரதிப் படம்
பகிர்:

மனித வாழ்க்கையில் காலத்துக்கு நிகரான சொத்து வேறெதுவும் இல்லை. ஆனால், தற்போது மனிதர்களின் இயல்பான மன நிலைகளில் மிகவும் ஆபத்தானதும், அதேநேரம் மிகவும் பரவலானதும் ஆன ஒரு பழக்கம் உண்டு. அதுதான் 'அப்புறம் பார்த்துக்கலாம்' அல்லது 'நாளைக்குச் செய்துகொள்ளலாம்' என்று தள்ளிப்போடும் பழக்கம்.

தற்காலிகமாக இது மனதுக்கு நிம்மதியைத் தருவதுபோல தோன்றினாலும், நீண்டகால அடிப்படையில் இது பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஒரு வேலையைச் செய்யாமல் தள்ளிப் போடும்போது, அந்த வேலையை இன்னும் முடிக்கவில்லையே என்ற குற்ற உணர்வும், பயமும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். இது தீராத மன அழுத்தத்துக்கும், இறுதி நேரத்தில் பதற்றத்துக்கும் வழிவகுக்கும்.

ஏன் நாம் முக்கியமான வேலைகளைக்கூட உடனடியாகச் செய்யாமல் தள்ளிப்போடுகிறோம்? இதற்கு உளவியல் ரீதியாக பல காரணங்கள் உண்டு. பலரும் தங்களுக்கு எல்லா சூழ்நிலைகளும் சாதகமாக வரும் போதுதான் வேலையைத் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், 100 சதவீதம் சரியான சூழ்நிலை எப்போதுமே அமைவதில்லை.

Advertisement

Advertisement

ஒரு கடினமான பணியைச் செய்யும்போது, அதில் நாம் தோற்றுவிடுவோமோ என்ற பயம் நம்மை அதைச் செய்யவிடாமல் தடுத்து தள்ளிப்போட வைக்கிறது. தள்ளிப் போடப்படும் நேரங்கள் பெரும்பாலும் பயனுள்ள விஷயங்களுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. உடனடி இன்பத்தைத் தரும் விஷயங்களான அறிதிறன்பேசியைப் பயன்படுத்துவது, சமூக வலைதளங்களில் நேரத்தைச் செலவழிப்பது, தொலைக்காட்சியைப் பார்ப்பது போன்றவற்றுக்காக, மிகவும் அவசியமான கடினமான பணியைக்கூட செய்யாமல் தள்ளிப் போடுகிறோம். இது நம் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சரியான நேரத்தில் ஒரு வேலையைச் செய்யாதபோது, வாழ்க்கையில் கிடைக்கும் சிறந்த வாய்ப்புகள் நம்மை விட்டு நழுவிவிடும். கொடுத்த வாக்குறுதியையோ அல்லது திட்டமிட்ட இலக்கையோ எட்ட முடியாதபோது, நமது சுயமரியாதை குறையும். நம்மால் எதையும் சரியாகச் செய்ய முடியாது என்ற தாழ்வு மனப்பான்மை தோன்றும். கடைசி நேரத்தில் அவசர அவசரமாக வேலைகளைச் செய்யும்போது, அந்த வேலையின் தரம் மற்றும் துல்லியம் மிக மோசமாகப் பாதிக்கப்படும்.

தள்ளிப் போடும் பழக்கம் பண ரீதியாகவும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். தொடர்ந்து வேலைகளைத் தள்ளிப்போடும்போது, நம்மால் எந்த வேலையையும் ஒழுங்காக செய்ய முடியாது என்ற சுயசந்தேகம் உருவாகும். இது உங்கள் தன்னம்பிக்கையை மொத்தமாக தகர்த்துவிடும்.

மன அழுத்தம் அதிகரிக்கும்போது அது உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். மேலும், உடற்பயிற்சி செய்வது அல்லது மருத்துவரைக் காண செல்வதைத் தள்ளிப்போடுவதால் சிறிய உடல்நலப் பிரச்னைகள் பெரிதாக மாறக்கூடும்.

நீங்கள் ஒரு வேலையைத் தவிர்த்தாலோ, அதற்குப் பதிலாக வேறு வேலைகளைச் செய்தாலோ அல்லது சாக்குப்போக்குகள் சொன்னாலோ நீங்கள் வேலையை தள்ளிப் போடுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

இறுதி நிமிஷம் வரை ஒரு வேலையை இழுத்தடித்துச் செய்யும்போது, அதை அரைகுறையாகவோ அல்லது அவசர அவசரமாக மட்டுமே முடிக்க முடியும். இதனால், உங்களின் படைப்பாற்றல் தரம்குறைந்து, உங்கள் திறமை மீது மற்றவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறையும்.

'இன்றைய வேலை உடனும், நாளைய வேலை இன்றைக்கும்' என்ற பழமொழியை நாம் அறிவோம். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நழுவிப்போன ஒரு விநாடியை, எத்தனை செல்வங்களைக் கொட்டினாலும் எவராலும் மீட்டெடுக்க முடியாது.

தள்ளிப் போடும் பழக்கத்தை முழுமையாக அகற்ற சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம். சிறிய வேலைகளை முதலில் செய்து விடலாம். பெரிய பணிகளை சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியாக முடிக்கலாம்.

ஒவ்வொரு நாளும் காலையில் எழும்போதும், அன்றைய நாளுக்குத் தேவையான முக்கியப் பணிகளை ஒரு பட்டியலிட்டு, அவற்றை அன்றே முடித்துவிட வேண்டும். வேலை செய்யும்போது கவனத்தைத் திசைதிருப்பும் அறிதிறன் பேசிகள் மற்றும் பிற காரணிகளை தள்ளிவைத்துவிட்டு முழு கவனத்தை அதில் செலுத்த வேண்டும்.

'நன்றே செய், அதை இன்றே செய்' என்பது நல்ல காரியங்களை தாமதப்படுத்தாமல் உடனுக்குடன் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஆன்றோர் அருள்மொழி. இதன் பொருள், செய்யும் செயல் மற்றவர்களுக்கு நன்மை தருவதாகவும், சிறந்ததாகவும் இருக்க வேண்டும். நாளை செய்வோம் என்று ஒத்திவைக்காமல், இன்றே, இப்பொழுதே செய்து முடிக்க வேண்டும். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நாளை என்பது நமக்கு வருமோ இல்லையோ?, இன்றைய பொழுதே நம் கையில் உள்ளது. நல்ல செயல்களைச் செய்ய தாமதப்படுத்தினால், சோம்பல் ஏற்பட்டு அந்தச் செயல் ஒருபோதும் நிறைவேறாமல் போகலாம். இன்றைக்கான வேலையை இன்றே முடிப்பது மனதுக்கு அமைதியையும், திருப்தியையும் தரும்.

நாளை என்பது யாருக்கும் உத்தரவாதம் அளிக்கப்படாத ஒரு கற்பனை நாள். நமக்கு இருப்பது இந்தத் தருணம் மட்டுமே. எனவே, 'அப்புறம் பார்த்துக்கலாம்' என்ற சோம்பேறித்தனமான வார்த்தையை நாம் அகற்றுவோம். இன்றே, இப்போதே நமக்கான கடமைகளை செய்யத் தொடங்குவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments