ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு
ஈரோடு அரசு மருத்துவமனைக்குச் சென்றால் அங்கே நாம் நாள்தோறும் அதிசயமான விஷயத்தைக் கவனிக்கலாம்.
ஈரோடு அரசு மருத்துவமனைக்குச் சென்றால் அங்கே நாம் நாள்தோறும் அதிசயமான விஷயத்தைக் கவனிக்கலாம். அந்த அரசு மருத்துவமனையில் ஏராளமான ஏழை நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகள் மட்டுமல்ல, அவர்களை உடனிருந்து கவனித்துக்கொள்பவர்களுக்கும் தினமும் காலையில் சிற்றுண்டி, மதிய உணவு, இரவு சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் விலை ஒரு ரூபாய்தான். இந்த உணவை வழங்கி வருபவர் மருத்துவமனைக்கு அருகில் இயங்கிவரும் ஏ.எம்.வி. வீட்டு சாப்பாடு மெஸ் நடத்திவரும் 63 வயதான வெங்கடராமன். இந்த ஒரு ரூபாய் உணவு வழங்குதல் குறித்து அவர் கூறியது:
'நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஈரோடுதான். என் அப்பா ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எனக்கு இளம் வயது முதலே சமூக சேவையில் ஆர்வம் உண்டு. என் அப்பா பணி ஓய்வு பெற்றதும், அவரோடு சேர்ந்து ஓர் உணவகம் துவங்கினேன்.
Advertisement
அதில் நல்ல வருவாய் கிடைத்ததால், அதைக் கொண்டு சமூக சேவையில் ஈடுபட்டேன். எங்கள் மெஸ் சுத்த சைவ உணவு வகைகளை ருசியாகச் சமைத்து, குறைவான விலையில் அளிப்பதால், பலரும் விரும்பி வந்து சாப்பிட்டுவிட்டுப் போவார்கள். அரசு மருத்துவமனை அருகே எங்கள் மெஸ் இருப்பதால் ஏராளமான எண்ணிக்கையில் நோயாளிகளின் உறவினர்கள் இங்கு சாப்பாடு வாங்க வருவார்கள்.
2007-ஆம் ஆண்டு எங்கள் மெஸ்சுக்கு தோசை வாங்க பெண்மணி ஒருவர் வந்தார். அவர் 'இட்லி இருக்கா?' என்று கேட்க, மெஸ்ஸில் அப்போது இட்லி இல்லாததால், 'தோசை கொடுக்கவா?' என்று கேட்டேன். 'வேண்டாம்' என்று சொல்லி மறுத்த அவர், 'பத்து ரூபாய்க்கு ஆறு இட்லி கொடுப்பீங்க. நானும், என் வீட்டுக்காரரும் ஆளுக்கு மூன்று இட்லி சாப்பிடுவோம்; வயிறு நிரம்பிவிடும்.
பத்து ரூபாய்க்கு மூணு தோசைதானே கிடைக்கும்? அது எங்க ரெண்டுபேருக்கும் பத்தாதே?' என்றார். அந்தப் பெண்மணியின் நிலைமையைப் புரிந்துகொண்டு, 'பரவாயில்லை! பத்து ரூபாய்க்கு ஆறு தோசை கொடுக்கிறேன்! நீங்க ரெண்டுபேரும் பசி தீர சாப்பிடுங்க!' என்று பத்து ரூபாயை வாங்கிக்கொண்டு ஆறு தோசைகளை பார்சல் செய்து கொடுத்தனுப்பினேன்.
மனைவியிடம் ஆலோசனை அந்தப் பெண்மணி கொடுத்த விளக்கம் என்னைச் சிந்திக்க வைத்தது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள், அவர்களைக் கவனித்துக் கொள்பவர்கள் எல்லோருமே இதே நிலையில்தானே இருப்பார்கள் என நினைத்தேன். இதனை தொடர்ந்து ஈரோடு அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்த்தேன். அங்கு பணிபுரியும் செவிலியர்கள், பெரும்பாலான நோயாளிகள் இங்கு இட்லி, தோசை வாங்கி சாப்பிட பணம் இல்லாமல் பன், டீ வாங்கிச் சாப்பிட்டு பசியாற்றிக் கொள்வதாக என்னிடம் கூறினார்கள்.
அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்று நினைத்தேன். தினமும் காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு இவற்றை ஏழை நோயாளிகளுக்கும், அவர்களை உடன் இருந்து கவனித்துக் கொள்பவருக்கும் இலவசமாகக் கொடுத்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. என் மனைவி ராஜலட்சுமியோடு இது பற்றி ஆலோசனை செய்தேன்.
அவர், 'இலவசமாகக் கொடுக்கலாம். நல்ல விஷயம்தான். ஆனால், அதில் ஒரு சிக்கல் உண்டு. நாம் இலவசமாக உணவு கொடுத்தால், குறிப்பாக ஏழை மக்களுக்குக் கொடுத்தால், மெஸ்ஸில் மீந்து போனவற்றைக் கொடுக்கிறோம் என்று அவர்கள் தவறாக நினைத்துக் கொள்ள வாய்ப்பு உண்டு. எனவே, ஒரு ரூபாய் என்று விலை வைப்போம்' என்று ஆலோசனை கூறினார்.
அப்படியே உணவு வழங்குவது என்று முடிவு செய்தோம். இதற்கான டோக்கனை மருத்துவமனை ஊழியர் ஒருவர் மூலமாகவே தகுதியான நோயாளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்தோம்.
தினமும் மூன்று வேளையும் தலா பத்து டோக்கன்கள் என்று ஆரம்பித்தது எங்கள் திட்டம். அந்த டோக்கனை கொண்டு வந்து எங்கள் மெஸ்சில் கொடுத்து, அவர்கள் உணவு பார்சலைப் பெற்றுக் கொள்ளலாம். மருத்துவமனைக்குச் சென்று அவர்கள் பங்கிட்டுச் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும்.
காலை உணவில் 3 தோசைகளும், 2 இட்லிகளும் வழங்கப்படும். மதியம் முழு மதிய உணவு அவர்கள் திருப்தியாக சாப்பிடும் வகையில் கட்டிக் கொடுத்து விடுவோம். அதே போல் இரவு நேரத்தில் 3 தோசை, 2 சப்பாத்தியும் இருக்கும். இதற்கு நோயாளிகள் மற்றும் அவர்கள் உறவினர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதுவே நாளடைவில் படிப்படியாக அதிகரித்து ஒரு நாளைக்கு 100 மதிய உணவு எனும் அளவுக்கு வளர்ந்தது.
மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை கரோனா பெருந்தொற்று காலத்தில் கூட எங்கள் சேவையை நிறுத்தவில்லை. மனசு இருந்தால் சேவை செய்யலாம். எங்கள் மெஸ்ஸின் தேவையோடு சேர்த்து, அவர்களுக்கும் சேர்த்துச் சமைக்கிறோம். பொருளாதார ரீதியாக கொஞ்சம் கஷ்டம்தான். ஆனாலும் சமாளிக்கிறோம்! இது தவிர, எங்க ஹோட்டலுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு, சாப்பாட்டு விலையில் 20% - 50% வரை சலுகையும் கொடுக்கறோம்!
விருது கௌரவம்
2013-இல், பிரபல தொலைக்காட்சி வியத்தகு இந்தியர்கள் என்ற வரிசையில் இலவச உணவு சேவைப்பிரிவில் என்னைத் தேர்ந்தெடுத்து, விருது கொடுத்து கெளரவித்தார்கள். அப்போதைய குடியரசுத் துணைத் தலைவர் முகமது அன்சாரி, பா.ஜ.க. மூத்தத் தலைவர் எல். கே. அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவ்விழாவில் பங்கேற்று விருதுகளை வழங்கினார்கள். அப்போதுதான் நான் என் வாழ்க்கையில் முதன் முதலில் விமானத்தில் பயணம் செய்தேன்' என்றார் வெங்கடராமன்.