நாள்தோறும் 2 முட்டைகள் சாப்பிட்டால் என்னவாகும்?
நாள்தோறும் 2 முட்டைகள் சாப்பிட்டால் நல்லதா? உடலுக்கு தீங்கிழைக்குமா என்பது பற்றி..
இணையத்தில் முட்டை சாப்பிடுவது பற்றி தேடினால் நிச்சயம், இருவிதமான விவரங்கள் கிடைக்கும். ஒன்று அதிக ஊட்டச்சத்து நிறைந்தது, மற்றொன்று முட்டை சாப்பிடவேக் கூடாது என்ற எச்சரிக்கைத் தகவல்கள்.
பலருக்கும் இவ்விரண்டு தகவல்களையும் பார்க்கும்போது ஒரு குழப்பம் ஏற்படும், உண்மையில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? முட்டையில் இருந்து எளிதில் கிடைக்கும் புரத மூலமாக வரவேற்புப் பெற்றாலும் கொழுப்பு என்று மறுபக்கம் குற்றம்சாட்டப்படுகிறது.
ஆனால், கொழுப்பும் உடலுக்கு அவசியம் என்று பலரும் கருத்துகளை முன்வைத்ததால், தற்போது முட்டையை உணவில் விட்டுவைத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
Advertisement
Advertisement
ஒரு முட்டை சாப்பிடுவதற்கே இத்தனை பிரச்னைகள் என்றால் ஒரு நாளைக்கு இரண்டு என நாள்தோறும் முட்டைகள் சாப்பிட்டால் என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பொதுவாக, ஒரு ஆரோக்கியமானவர், ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் சாப்பிடலாம். வயிறும் நிரம்பும். ஆனால் அதனுடன் சேர்க்கப்படும் மற்ற உணவுகளும் கவனத்தில் கொள்ள வண்டும்.
ஒரு பெரிய முட்டையில் சுமார் 70 முதல் 72 கலோரிகள் மற்றும் சுமார் 6 கிராம் புரதம் உள்ளது. அதனுடன் கோலின், பி வைட்டமின்கள், லுடீன் மற்றும் ஸீக்ஸாந்தின் போன்ற ஊட்டச்சத்துக்களும், மிதமான அளவு நிறைவுற்ற கொழுப்பும் உள்ளன. இவை எல்லாமே உடலுக்கு நல்லதுதான். ஆனால், பிரச்னை முட்டையில் இல்லை, அது எந்த விதத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது, அதனுடன் சேர்த்துக் கொள்ளப்படும் உணவுகள் என்ன என்பதில்தான்.
அதேவேளையில், ஒருவருக்கு அதிக கொழுப்பு, நீரிழிவு, போன்றவை இருக்கும்போது நிச்சயம் இரண்டு முட்டை என்பதை கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும்.
ஒரு பெரிய முட்டையில் சுமார் ஆறு கிராம் உயர்தர புரதம், அத்தியாவசிய அமினோ அமிலங்கள், முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதும், இவை முட்டையின் மஞ்சள் கருவில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் அந்த மஞ்சள் கருவில் சுமார் 180 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது, இந்த ஒன்றுதான் நீண்ட காலமாக முட்டைகள் மீது தவறான கருத்தைப் பதிவு செய்துகொண்டே வருகின்றன.
பெரும்பாலானோருக்கு பற்றாக்குறையாக இருப்பதும், மூளைக்குத் தேவையான கோலினின் இருக்கும் சிறந்த உணவாகவும் முட்டை இருக்கிறது. ஒரு முட்டை ஒருவரின் தினசரித் தேவையில் கிட்டத்தட்ட கால் பகுதியை வழங்குகிறது. அதனுடன், முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள லுடீன் மற்றும் ஸீக்ஸாந்தின் ஆகியவற்றையும் சேரும்போது அவை நன்மையைத்தான் அளிக்கின்றன.
முட்டை சாப்பிடும்போது கண்கள் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கிடைக்கும். இதன் விளைவாக, தசை, மூளை மற்றும் பார்வை எனப் பல அமைப்புகளில் சீராக செயல்பட வழிவகை ஏற்படும்.
பலருக்கும் முட்டை சாப்பிடுவதால் ஒரு பிரச்னையும் ஏற்படுவதில்லை. ஆனால், ஒரே நேரத்தில் அல்லது ஒரு நாளில் அதிக முட்டைகள் சாப்பிடும்போதும், முட்டையுடன் வேறு அதிகமான கொழுப்புகள் இருக்கும் உணவுகளை சாப்பிடும்போதும்தான் பிரச்னை ஆரம்பிக்கும். ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முட்டை மீது போட்டுவிடுவார்கள்.
முட்டையில் அவித்து அல்லது ஆம்லெட் போட்டு சாப்பிடலாம். ஆனால், அதனுடன் வெண்ணெய், சீஸ், பதப்படுத்தப்பட்ட கறி, அதிக எண்ணெய் போன்றவற்றை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அது நிச்சயம் எதிர்வினையாற்றலாம்.
இறுதியாக, மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்னவென்றால், ஒரு முட்டையை ஒருவர் நாள்தோறும் சாப்பிடலாம். அதிகம் விரும்பினால் ஒரு முழு முட்டையுடன் ஒன்று அல்லது இரண்டு வெள்ளைப் பகுதிகளை மட்டும் சாப்பிடலாம். இதனால் புரதமும், குறைந்த கொழுப்பும் கிடைக்கும்.
முட்டையுடன் வெள்ளை ரொட்டி, வெண்ணெய்யில் ரோஸ்ட் செய்து சேர்ப்பதற்கு பதில் காய்கறிகள், தக்காளி போன்ற நார்ச்சத்து நிறைந்தவற்றை சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது.
[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]