FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கோலிவுட் ஸ்டூடியோ!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் 'ராமாயணம்'.

31 அக்டோபர் 2026, 7:28 pm
சாய் பல்லவி
பகிர்:

இந்தியாவிலிருந்து உலகுக்கு ஒரு கதை - சாய் பல்லவி!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் 'ராமாயணம்'. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்க, இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரான 'கே.ஜி.எஃப்' புகழ் யஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் மற்றும் ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும் நடித்துள்ளனர்.

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர், இந்தியாவின் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய இருபெரும் உலகளாவிய ஆளுமைகள் இணைந்து இப்படத்துக்கு பின்னணி இசையமைத்திருக்கிறார்கள். வரும் தீபாவளி வெளியீடாக வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

அப்போது பேசிய நடிகை சாய் பல்லவி, 'மீண்டும் சென்னையில், அதுவும் நமது சொந்த மண்ணில் இந்த நிகழ்வு நடப்பது மிகவும் மகிழ்வாக இருக்கிறது. இந்த நாளுக்காக நான் மிகவும் ஆவலுடன் காத்திருந்தேன். ரஹ்மான் சார் என் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே இருந்து வருகிறார். என் வாழ்க்கையின் சில தருணங்கள் எனக்கு மறந்திருக்கலாம். ஆனால், அவரின் பாடலைக் கேட்கும்போது பால்யகால நினைவுகள் மீண்டும் நினைவுக்கு வந்துவிடும்.

ரஹ்மான் சார் அற்புதமான இசையைப் படைப்பதற்கும், எங்களது தனிமையான நாள்களிலும், சோகம் மற்றும் மகிழ்ச்சியான தருணங்களிலும் இசையால் அவர் உடனிருப்பதற்கும் மிகப்பெரிய நன்றிகள்.

இந்தப் படம் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. ஆனால், ஒவ்வொரு டப்பிங்கின்போதும் அது அந்த மொழிகளில் எடுக்கப்பட்ட படம் போலவே இருக்கிறது.

உலகெங்கிலும் உள்ள அனைவரும் 'ராமாயணம்' காவியத்தைத் தங்களின் தாய்மொழியிலேயே அனுபவிக்க வேண்டும் என்பதற்காக, சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்து இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்துக்காக படக்குழு போட்ட உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் 100 மடங்கு அதிகமான வெற்றியும் அன்பும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

நாம் அனைவரும் ராமாயணத்தைக் கேட்டு வளர்ந்திருப்போம். ஆனால், இதில் உள்ள காட்சிகள் மற்றும் வடிவமைப்பு மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து உலகுக்குச் சொல்லப் போகும் மிகச் சிறந்த கதைகளில் ஒன்றாக இது இருக்கும் என்பதில் நாம் பெருமைப்படலாம்' என்றார்.

நஸ்ரியா

12 ஆண்டுகளுக்குப் பின் நஸ்ரியா!

சூர்யாவின் 'சீன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. மலையாள சினிமா இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 'பேரழகன்' படத்துக்குப் பிறகு மலையாள சினிமா இயக்குநருடன் இப்படத்தில் இணைந்திருக்கிறார் சூர்யா. சுஷின் ஷ்யாம் இசையமைக்கும் இப்படத்தின் விளம்பர நிகழ்வு துபாயிலுள்ள ஒரு மாலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நஸ்ரியா பேசுகையில், '12 வருடங்களுக்குப் பிறகு நான் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கிறேன். இந்த வாய்ப்பை ஜித்து மாதவனின் படத்தில் பெற்றது பெருமகிழ்ச்சி. நவம்பர் 6-ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று 'சீன்' திரைப்படத்தைப் பாருங்கள். படம் அடிப்பொலியாக வந்திருக்கிறது. நாங்கள் சினிமாக்களைத் தீவிரமாகப் பார்க்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே சூர்யா சாரைப் பார்த்து வளர்ந்திருக்கிறோம்.

நாங்களும் இதுபோன்று தீவிரமான சினிமாக்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதற்கு சூர்யா சாரும் ஒரு முக்கியக் காரணம். அவருடன் இணைந்து நடித்தது மிகவும் ஜாலியாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர். அவருடன் நேரத்தைச் செலவழித்து இந்தப் படத்தில் பணியாற்றியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி' என்றார்.

மிர்னா பகிர்வு

ஹிருத்திக்குடன் நடித்த அனுபவம் - மிர்னா பகிர்வு!

'ஜெயிலர் -1' படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக 'சுவேதா' என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மிர்னா. அவர் 'ஜெயிலர் -2'-விலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், 'ஜெயிலர் -2' படத்தின்போது ஹிருத்திக் ரோஷனுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்து மிர்னா வெளியிட்டிருக்கும் பதிவில், 'சிறுவயது முதலே வியந்து பார்த்த ஹீரோவுடன் இணைந்து நடிப்பது நம்ப முடியாத உணர்வாக இருக்கிறது. மிகவும் சிறப்பான அனுபவம்.

அவருக்குப் பின்னால் இருக்கும் மனிதரை அறிந்துகொண்டது இன்னும் அழகான அனுபவமாக இருந்தது. மிகவும் இனிமையானவர், எளிமையானவர், பணிவானவர். அவர் மீதான என் மதிப்பும் மரியாதையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. சில தருணங்கள் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். இது அப்படிப்பட்ட தருணம்' என்று கூறியுள்ளார்.

அமீர்கான்

இழந்த உறவுகள் குறித்து அமீர்கான்!

அண்மையில் நடைபெற்ற சிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் அமீர்கான் 'ஸ்கிரீன் ஐகான்' விருது பெற்றார். இந்த நிகழ்வில், இழந்த உறவுகள் குறித்துப் பேசும்போது அவர் கண்கலங்கினார்.

'கரோனா காலத்தில் என் வாழ்க்கையைப் பற்றி யோசித்தேன். 30 ஆண்டுகள் ஓடி மறைந்திருந்தன. உழைப்பினால் என் உறவுகளை இழந்துவிட்டேன். என் குழந்தைகள் பெரியவர்களாகிவிட்டார்கள். அவர்களுடன் செலவிட வேண்டிய பொன்னான நேரத்தை இழந்துவிட்டேன். நல்ல

வேளையாக இந்த எண்ணம் 56 வயதிலேயே வந்தது ஒருவிதத்தில் சந்தோஷம்தான். அதனால் கடந்த 4 ஆண்டுகளாகவே எனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் அதிக நேரத்தைச் செலவழித்து வருகிறேன். 1988-ஆம் ஆண்டில் 'கயாமத் சே கயாமத் தக்' படம் மாபெரும் ஹிட் அடித்ததும், அடுத்த 6 மாதங்களில் 9 படங்களில் கையெழுத்திட்டேன். ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய பிறகுதான் நான் செய்த தப்பு புரிந்தது.

வீட்டுக்கு வந்து என் முன்னாள் மனைவி ரீனாவிடம் அழுது புலம்புவேன். அடுத்தடுத்து வந்த படங்கள் தோல்வியடைய, 'ஒரே ஒரு படம் ஹிட் கொடுத்தவர்' என என்னை முத்திரையிட்டார்கள்' எனப் பேசியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments