கோலிவுட் ஸ்டூடியோ - 25-10-26
ரஜினிகாந்தின் 172-ஆவது படம் 'ஜெயிலர் 2' நல்ல வரவேற்பைப் பெற்றுத் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ரஜினியுடன் திரை அனுபவம் - நடிகை அபெஷா போர்வல்!
ரஜினிகாந்தின் 172-ஆவது படம் 'ஜெயிலர் 2' நல்ல வரவேற்பைப் பெற்றுத் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
படத்தின் முக்கிய ஆக்ஷன் காட்சியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் நடிகை அபெஷா போர்வல். படத்தின் புரமோஷனுக்காக அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், 'சூப்பர் ஸ்டாராக கோலோச்சும் ரஜினி சார், நேரில் எவ்வளவு எளிமையான மனிதர் என்பதை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் நடந்துகொள்ளும் விதமும், சக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு அவர் கொடுக்கும் மரியாதையும் என்னை மிகவும் பிரமிக்க வைத்தது.
Advertisement
Advertisement
இத்தனை ஆண்டு கால அனுபவமும், உலகளவில் இவ்வளவு பெரிய புகழும் இருந்தபோதிலும், ஸ்பாட்டுக்கு வந்துவிட்டால், முழு அர்ப்பணிப்போடு பணிபுரிவார். என்னிடம் ரொம்பவே அன்பாகப் பேசி, ஊக்கமளித்தார். அந்த அசாத்தியமான மாஸ் மேஜிக்கை நேரிலேயே பார்த்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம். அவருடன் நடித்ததை என் திரைப் பயணத்தின் மிகப் பெரிய மைல்கல்லாகக் கருதுகிறேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
என் வாழ்க்கை என்னுடன் புதைக்கப்படும் -சல்மான்கான்!
இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் தனது 'காஃபி வித் கரண் 9' நிகழ்ச்சியில் முதல் ஆளாக நடிகர் சல்மான் கானை அழைத்திருந்தார். அதில் அவர் பல்வேறு பிரச்னைகள் குறித்துப் பேசினார்.
'சொல்லப்போனால், ஒரு காலகட்டத்தில் ஏற்பட்ட பல காயங்கள், உடல்நலப் பிரச்னைகளால் என் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. அது சட்டை அணியாத எனது தோற்றத்தை மிகவும் விரும்பும் தீவிர ரசிகர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே இருந்தது. வயது எதுவாக இருந்தாலும், என்னை அந்த நிலையில் பார்ப்பது அவர்களுக்குச் சரியானதாக இருக்காது. பலர் என்னை ஒரு முன்மாதிரியாகப் பார்க்கிறார்கள். இளைஞர்கள் பெரும்பாலும் தங்கள் தந்தையர்களின் உடல் தகுதியை, தன்னுடைய உடல் தகுதியுடன் ஒப்பிட்டு, 'அவரே இப்படி இருக்கும்போது, உங்களால் ஏன் இருக்க முடியாது?' என்று கேட்கின்றனர். எனவே என் உடல் அமைப்பைப் பேணிக்காக்க வேண்டியது அவசியம்.' என்றார்.
'பிக் பாஸ் 20' நிகழ்ச்சியின் 'வீக்கெண்ட் கா வார்' அத்தியாயத்தின்போது, தனது வயது, உடல் எடை, தோற்றம் குறித்துக் கேலி செய்பவர்களுக்கு சல்மான் கான் பதிலடி கொடுத்தார். அப்போது அவர், 'எதை வைத்து கேலி செய்ய விரும்புகிறீர்கள்? ஏன் கேலி செய்ய வேண்டும்? இதற்குப் பின்னால் உள்ள மனநிலை என்ன? எனது வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் ஒருபோதும் எடுக்கப்படாது. எனது வாழ்க்கை என்னோடு புதைக்கப்படும்' என்று கூறினார்.
400 குடும்பங்களைத் தத்தெடுத்த ராஷ்மிகா!
முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா வாழ்க்கையிலும் மனிதநேயமிக்க ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளார். பின்தங்கிய 400 குடும்பங்களின் ஒரு வருடப் பசியைப் போக்கும் வகையில் மளிகைப் பொருள்களை வழங்க முன்வந்துள்ள அவரது செயல் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த மாபெரும் உதவிக்கு வித்திட்டது அவர் நடித்த திரைப்படம்தான்.
விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ராஷ்மிகா நடித்த வரலாற்றுப் பின்னணி கொண்ட திரைப்படமான 'ரணபலி', 1876 -1878 காலகட்டத்தில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட கொடூரமான தாது வருடப் பஞ்சத்தை மையமாகக் கொண்டு உருவானது. இதில், ராஷ்மிகா 'ஜெயம்மா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பஞ்சத்தால் மக்கள் தவித்த வரலாற்று வலிகளைத் திரையில் உள்வாங்கி நடித்தபோது, அந்தப் பாத்திரம் அவரது மனதை ஆழமாகப் பாதித்துள்ளது.
'நான் நடித்த ஜெயம்மா கதாபாத்திரத்துக்கும் எனக்கும் என்ன ஒற்றுமை என்று பலரும் கேட்கிறார்கள். பிறருக்கு உதவ வேண்டும் என்ற இந்தக் குணம் எனக்கும் அவளுக்கும் பொதுவானதுதான்' என்று ராஷ்மிகா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
400 குடும்பங்களுக்கு, ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை வீதம் அடுத்த ஒரு வருடத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. எளிய குடும்பங்களின் மாத வருமானத்தில் பெரும் பகுதி மளிகைப் பொருள்களுக்கே செலவாகிறது. பொருள்களை இலவசமாக வழங்குவதன் மூலம், அந்தப் பணத்தை அவர்கள் சேமித்து, தங்கள் குழந்தைகளின் கல்விக்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
30 ஆண்டுகளுக்குப் பின் உயிர் பெற்ற பாடல்!
அண்மையில் கிரீஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகி வசூலைக் குவித்தது 'பெத்லஹேம் குடும்ப யூனிட்.' இப்படத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட 'அன்னா' என்கிற ஒரு மலையாளப் படத்தின் 'எவன கதையில்' என்கிற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்தப் படமும், பாடலும் பெரியளவில் பேசப்பட, கைவிடப்பட்ட அந்த 'அன்னா' படத்தை மீண்டும் கையிலெடுத்திருக்கிறார்கள்.
பிரபல இயக்குநர் ஜோஷி இயக்கத்தில், அரவிந்த் சாமி, நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் 'அன்னா' படம் எடுப்பதாக அப்போது அறிவிப்பு வெளியானது. அப்படத்தில் தான் நடிப்பதாக கமிட் செய்யவில்லை என்பதை ஒரு பேட்டியில் அரவிந்த் சாமி தெரியப்படுத்தியிருந்தார். இப்படத்துக்காக 8 பாடல்கள் பதிவு செய்யப்பட்டு ஆடியோ கேசட்டாகவும் வெளியானது. படப்பிடிப்பு ஒரு காட்சிகூடப் படமாக்கப்படாமல் கைவிடப்பட்டது.
'பெத்லஹேம் குடும்ப யூனிட்' படத்தின் மூலம் இப்படமும், இப்பாடலும் பேசப்பட்ட நிலையில், மலையாளத்தில் 'புலிமுருகன்', 'போக்கிரி ராஜா' போன்ற படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் டோமிச்சன் முளகுபாடத்தின் 'முளகுபாடம் ஃபிலிம்ஸ்' நிறுவனம், 'அன்னா' திரைப்படத்தின் தயாரிப்பு உரிமையை வாங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
இதுகுறித்துப் பதிவிட்டுள்ள டோமிச்சன் முளகுபாடம், '30 ஆண்டுகளுக்கு முன்பு நின்றுபோன 'அன்னா' படத்தின் உரிமையைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். புதிய எழுத்தாளர்கள் மற்றும் புதிய குழுவினருடன் இப்படத்தை நவீனக் காலத்துக்கேற்ப மீண்டும் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம்' எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.