கோலிவுட் ஸ்டூடியோ!
'தக் லைஃப்' படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படத் தலைப்பை அறிவித்திருக்கிறார்கள்.
மணிரத்னத்தின் 'இஞ்சி வெல்லம்!'
'தக் லைஃப்' படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படத் தலைப்பை அறிவித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி, சாய் பல்லவி ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவின் முக்கியப் பகுதிகளில் நடைபெற்றது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
லைகா நிறுவனமும் மணிரத்னத்தின் 'இந்தியா டாக்கீஸ்' நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. கடந்த வாரம் இப்படத்தின் தலைப்பை அறிவிப்பதாகத் தெரிவித்த படக்குழு, தலைப்பு பற்றிய சில க்ளூகளையும் தந்தது. அதை வைத்தே ரசிகர்கள் சிலர் படத்தின் தலைப்பைக் கண்டுபிடித்தனர்.
Advertisement
Advertisement
தற்போது படக் குழுவினர் தலைப்பை அறிவித்து போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள். படத்துக்கு 'இஞ்சி வெல்லம்' எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். தன்னுடைய ஆஸ்தான ஒளிப்பதிவாளர்கள் இல்லாமல், 'பிங்க்', 'சர்தார் உதம்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் அவிக் முகோபாத்யாயுடன் இணைந்திருக்கிறார் மணிரத்னம்.
இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திரைக்கு வருகிறது.
ஆடையில் இல்லை கலாசாரம் - கிருத்தி சனோன்
ஒரு பிரபல நகை பிராண்டின் ரக்ஷா பந்தன் விளம்பரத்தில் நடிகை கிருத்தி சனோன் நடித்திருந்தார். அதில் அவர் அணிந்திருந்த ஆடை கவர்ச்சியாக இருப்பதாகவும், ரக்ஷா பந்தனுக்கு ஏற்ற உடை இது இல்லை என்றும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கிருத்தி சனோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், 'பண்டிகைகளின் உண்மையான சாரம்சம் நாம் அணியும் ஆடையில் இல்லை. நமது உணர்வுகளில்தான் உள்ளது.
பெண்களுக்கு என்ன ஆடை அணிய வேண்டும் என்று சொல்வதை எப்போது நிறுத்தப் போகிறோம்? ஒரு பெண்ணின் கலாசார மரியாதையை அவருடைய ஆடையின் நெக்லைனை வைத்து மதிப்பிட முடியாது. மாறாக கலாசாரமும் பாரம்பரியமும் இதயத்தில்தான் இருக்கவேண்டும்' என்று காட்டமாகப் பதிவிட்டிருக்கிறார்.
மெய்யழகன் பிரேம்குமார் இயக்கும் படம்
'பிரேமலு' பட இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் வெளியாகியிருக்கும் மலையாளப் படம் 'பெத்லகேம் குடும்ப யூனிட்'. நிவின் பாலி, மமிதா பைஜு நடித்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படத்தை பகத் பாசில் தனது பாவனா ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். இப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் பேசிய பகத் பாசில், 'முதலில், எங்கள் படக்குழு சார்பில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நிவின் பாலி, மமிதா பைஜுஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. எப்போதும் தரமான திரைப்படங்களை வழங்கவேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.
அந்த வகையில், 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படமும் எங்களுக்கு மிகவும் சிறப்பான படமாகும். இது மிகவும் அழகான, சிறப்பான திரைப்படம். நல்ல திரைப்படங்களைத் தமிழ் ரசிகர்கள் எப்போதும் கொண்டாடுவார்கள் என்பது எனக்குத் தெரியும். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் பிரேமுடன் நான் இணைந்து பணியாற்றியுள்ள அடுத்த தமிழ்த் திரைப்படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகிறது' என்று பேசியிருக்கிறார்.
பில்லா 2 படத்தை ஏன் இயக்கவில்லை? - சொல்கிறார் விஷ்ணுவர்தன்
நடிகர் அஜித்குமாரின் 'பில்லா', 'ஆரம்பம்' போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். 'பில்லா'வின் இரண்டாம் பாகமான 'பில்லா 2' திரைப்
படத்தையும் அவரே இயக்குவதாக இருந்தது. ஆனால், அந்தப் படத்தை இயக்குநர் சக்ரி டோலெட்டி இயக்கினார்.
தற்போது 'பில்லா 2' படத்தை தான் ஏன் இயக்கவில்லை என்பது குறித்து இயக்குநர் விஷ்ணுவர்தன் 'கல்டு' ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
அதில், 'எனது திரைப்பயணத்தில் நான் சந்தித்த மிகவும் கடினமான சூழ்நிலைகளில் அதுவும் ஒன்று. அஜித்துடன் எனக்கு 'பில்லா 2' பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், தெலுங்கில் பவன் கல்யாணுடன் 'பஞ்சா' திரைப்படத்துக்கான கமிட்மென்ட்டும் இருந்தது. இரு படங்களின் படப்பிடிப்பு தேதிகளும் ஒரே நேரத்தில் அமைந்தது. தொழில் ரீதியாகவும், நேர்மையின் அடிப்படையிலும் நான் பவன் கல்யாணுக்கு முதலில் வாக்குக் கொடுத்திருந்தேன். தயாரிப்பாளரும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
அந்த நேரத்தில் நான் விலகினால், அது அவர்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், என் வார்த்தையைக் காப்பாற்ற 'பஞ்சா' படத்தை இயக்க முடிவெடுத்தேன் அஜித்துடன் எனக்கு மிகவும் நெருக்கமான நட்பு இருந்தது. இந்தச் சூழ்நிலையை அவரிடம் விளக்கியபோது, அவர் மிகுந்த பெருந்தன்மையோடு எனது முடிவை ஏற்றுக்கொண்டார். மீண்டும் அஜித் சாருடன் இணையும் வாய்ப்பை இழந்தது கஷ்டமாக இருந்தாலும், ஓர் இயக்குநராகக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதே சரியாக இருக்கும் என நம்பினேன்' எனப் பகிர்ந்திருக்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.