'ஏன் என்னை ஏதோ செய்தாய்' தலைப்பை பாடலாசிரியர் கொடுத்தார்: நெகிழ்ந்த இயக்குநர் டி.ஆண்டனி!
‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி பற்றி....
‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ என்ற தலைப்பை பாடலாசிரியர் கொடுத்தார் என்று படத்தின் இயக்குநர் டி.ஆண்டனி நெகிழ்ந்துள்ளார்.
டி.ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்துள்ள திரைப்படம் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’. இதில், மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், ஆலம் ஷா, நவ்யா சுஜி, மாதங்கி சதீஷ், ரியா மனோஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பியட்ரோ வில்லானி ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களுக்கு ஜெய்கார் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் இசையமைத்துள்ளனர். ஜோயி ரிடா பின்னணி இசையமைத்துள்ளார். கார்த்திக் நேத்தா மற்றும் தமிழ்மணி பாடல்களை எழுதியுள்ளனர்.
ஒலிப்பதிவு பணிகளை ஜெய்கார் ஹரிநாத் மேற்கொள்ள, சவுண்ட் மிக்சிங்கை ஆனந்த் ராமச்சந்திரன் கவனித்துள்ளார். கலை இயக்கத்தை கே.கே. சுரேந்தரன் மேற்கொண்டுள்ளார். நிர்வாகத் தயாரிப்பாளர்களாக ஹரிஹரன் மற்றும் சந்தோஷ் பணியாற்றியுள்ளனர். பழைய காதல் கதைகளின் உணர்வுப்பூர்வமான அழகை தக்கவைத்துக் கொண்டு, இன்றைய ஜென்-ஜி மற்றும் மில்லேனியல் ரசிகர்களை கவரும் வகையில் நவீன திரைக்கதையுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
வரும் செப்டம்பர் 4ஆம் தேதி படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் டி. ஆண்டனி பேசியதாவது, கதாநாயகி மதுமிதா இந்தப் படத்திற்காக 18 நாட்கள் வொர்க்ஷாப் செய்து, வேறு நகரம், வேறு மொழி என்றாலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். ஜீவா ரவி எனக்கு தந்தை போன்ற ஆதரவை வழங்கினார்.
ஆலம் ஷா, நவ்யா, ராஜேந்திரன் சிங், மாதங்கி உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. கலை இயக்குநர் சுரேந்தரன் அண்ணா கதாபாத்திரங்களின் குணத்தை வெளிப்படுத்தும் வகையில் அறைகள் உள்ளிட்டவற்றை மிகச் சிறப்பாக வடிவமைத்தார். ஜெய்கார் ஹரிநாத் இசையமைப்பாளராக மட்டுமின்றி, லைவ் சவுண்ட் பணியிலும் மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்.
அசோக் ஸ்ரீதரன் இந்தப் படத்தின் இசைக்கு மிகச் சிறப்பான அடித்தளத்தை அமைத்ததுடன், கார்த்திக் நேத்தா உள்ளிட்ட பல திறமையான கலைஞர்களை இந்தப் படத்துடன் இணைக்க உதவினார். படத்திற்கான தலைப்பை நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்தபோது, ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ என்ற தலைப்பை கார்த்திக் நேத்தா கொடுத்தார். முதல் வரியிலேயே அந்த மேஜிக் நடந்தது. பலரும் தலைப்பு மிகவும் கவித்துவமாக இருப்பதாக பாராட்டினர். அவருடைய வாழ்த்துகளும் தொடர்ந்து எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கின்றன.
என்னுடைய இணை இயக்குநர் ஜேனட் ஆரம்பம் முதல் இன்று வரை எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்துள்ளார். படத்தொகுப்பிலும் என்னுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். குறிப்பாக தனஞ்செயன் செய்த உதவியை மறக்க முடியாது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை படம் வெளியாகுமா என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை. விநியோகம் தொடர்பான பிரச்னையை அவரிடம் சொன்னதும், உடனடியாக உதவி செய்து அதை சரி செய்தார். அவருடைய உதவி இல்லையென்றால் இந்த நிகழ்வே நடந்திருக்காது.
சினிமா குறித்து அவர் பகிரும் வீடியோக்கள் மூலம் ஒரு புதுமுகமாக நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். இந்தப் பயணம் மிகவும் கடினமானதாகவும், பல விஷயங்களை கற்றுக்கொடுத்ததாகவும் இருந்தது. இன்று இந்தப் படத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப் பயணத்தில் எனக்கு துணையாக இருந்த என் குடும்பத்தினர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.