கோலிவுட் ஸ்டூடியோ - 11-10-26
நடிகை ஸ்ருதிஹாசன் தான் திரைத்துறைக்குள் நடிகையாக நுழைந்தது தற்செயலாக நடந்த ஒன்று என்றும், ஆரம்பத்தில் கேமராவுக்குப் பின்னால் நின்று எழுதவே தான் ஆசைப்பட்டதாகவும் பகிர்ந்திருக்கிறார்.
கேமராவுக்குப் பின்னால் இருக்கத்தான் ஆசை - ஸ்ருதிஹாசன்!
நடிகை ஸ்ருதிஹாசன் தான் திரைத்துறைக்குள் நடிகையாக நுழைந்தது தற்செயலாக நடந்த ஒன்று என்றும், ஆரம்பத்தில் கேமராவுக்குப் பின்னால் நின்று எழுதவே தான் ஆசைப்பட்டதாகவும் பகிர்ந்திருக்கிறார்.
அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். 2000-ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான 'ஹே ராம்' திரைப்படத்தில் ஆடை வடிவமைப்புத் துறையில் அவரின் அம்மா சரிகாவுடன் இணைந்து ஸ்ருதிஹாசன் பணியாற்றியிருக்கிறார். அப்போது படப்பிடிப்பின்போது சர்தார் வல்லபாய் படேலின் மகள் கதாபாத்திரத்தில் நடிக்க உடனடியாக ஒரு நடிகர் தேவைப்பட்டிருக்கிறார். பின்பு அக்கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடித்தார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து கூறிய ஸ்ருதி, 'எனக்கு எப்போதும் கேமராவுக்குப் பின்னால் இருந்து இயங்கத்தான் ஆசை. நான் எப்படி நடிகையானேன்னு எனக்கே தெரியவில்லை. அந்தச் சமயத்தில் தற்
செயலாகத்தான் நடித்தேன். என் பெற்றோர் இருவருமே படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் கச்சிதமான வேலையை எதிர்பார்க்கும் டாஸ்க் மாஸ்டர்கள். அவர்களுடன் வேலை செய்தது ஒரு சிறந்த அனுபவம். என் இசைத் தேவைகளுக்காகவும் சொந்தமாகச் சம்பாதிக்கவுமே பின்னர் 'லக்' திரைப்படத்தில் நடிக்கச் சம்மதித்தேன். அதன் பிறகே நடிப்பு மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது.' எனப் பகிர்ந்திருக்கிறார். தற்போது ஸ்ருதிஹாசன் விஜய் சேதுபதியுடன் 'ட்ரெயின்', துல்கர் சல்மானோடு 'ஆகாசமிலோ ஒக தாரா' உள்ளிட்ட படங்களை லைன் அப்பில் வைத்திருக்கிறார்.
கீதா கோவிந்தம் படத்தின் முதல் நாள்... ராஷ்மிகா!
'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் விஜய தேவரகொண்டா - நடிகை ரஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடித்திருக்கும் படம் 'ரணபலி'. இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் வரலாற்றுப் பின்னணியைக் கதைக்களமாகக் கொண்டிருக்கிறது. இப்படம் வரும் 16-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டிருக்கின்றனர்.
அந்தவகையில் விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா இருவரும் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர். அதில் பேசிய ராஷ்மிகா, ' 'கீதா கோவிந்தம்' படப்பிடிப்பு தளத்தில் நடந்த விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார். 'கீதா கோவிந்தம்' படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது நான் ஒரு பாடலை சத்தமாகக் கேட்டதற்கு விஜய் என்னிடம் கோபப்பட்டு கத்திவிட்டார்.
இந்தத் துறை எனக்குப் புதிது என்பதால், அந்த நிகழ்வு என்னை மோசமாகப் பாதித்து, நான் அழுதுவிட்டேன். ஆனால், நாள்கள் கடந்தபின் அவரைப் பற்றிப் புரிந்துகொண்டு, நண்பர்களாகி விட்டோம். அவருடன் நடிக்கும் போது எனக்கு எந்தப் பயமும் ஏற்படவில்லை. அவர் எப்போதும் சக நடிகர்களுக்கு முழு சுதந்திரமும், வசதியான சூழலையும் அமைத்துக் கொடுப்பார்.
நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றிய படங்களின் படப்பிடிப்பில், ஒவ்வொரு காட்சியையும் எவ்வாறு சிறப்பானதாக மாற்றலாம் என்று எப்போதும் விவாதித்துக் கொண்டே இருப்போம். திரைக்கு அப்பாலும் எங்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல புரிதலும், வலுவான நட்பும் உருவாக அதுவே முக்கியக் காரணமாக அமைந்தது' என்று பகிர்ந்திருக்கிறார்.
மொத ராத்திரி படத்துக்கு மாதவன் பாராட்டு!
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் 'மொத ராத்திரி'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆக.21-ஆம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் 'மொத ராத்திரி' படத்தைப் பார்த்த நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டியிருக்கிறார். 'நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு தமிழ் திரைப்படத்தைப் பார்த்து மிகவும் ரசித்தேன். 'மொத ராத்திரி' படத்தின் திரைக்கதை, கண்களைக் கவரும் விசுவல், கதை சொல்லல் மற்றும் நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது. வாய்விட்டுச் சிரித்ததுடன், ரசித்துக் கைதட்டவும் செய்தேன்.
இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். உங்களுக்கு எழுந்து நின்று கைதட்டி மரியாதையைச் சமர்ப்பிக்கிறேன். இந்தப் படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று' என்று பாராட்டியிருக்கிறார்.
ஜெயிலர் 2 டிரெய்லர்
ரஜினிகாந்த் - நெல்சன் - அனிருத் என முதல் பாகத்தின் கூட்டணி இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறது. அதோடு, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலரும் புதிய கதாபாத்திரங்களில் இந்த 'ஜெயிலர் 2' படத்தில் நடித்திருக்கிறார்கள். இதன் டிரெய்லரைப் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவும், வர்மன் (விநாயகன்) கதாபாத்திரம் இறந்த பிறகு நடக்கும் கதையாகவும் இதனை அமைத்திருக்கிறார்கள் என்பதை டிரெய்லரில் காட்டியிருக்கிறார்கள். அத்துடன் சில ஃப்ளாஷ்பேக் காட்சிகளையும் படத்தில் இணைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
'ஜெயிலர்' முதல் பாகத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரஃப் ஆகியோரின் கதாபாத்திரங்கள் கவனம் பெற்றன. இவர்கள் இரண்டாம் பாகத்திலும் வருகிறார்கள் என்பதை டிரெய்லரில் சொல்லியிருக்கிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.