FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காகங்களின் நண்பர்!

மனிதர்களால் காகங்களுக்கு அச்சுறுத்தல் இல்லாததால், அவை மனித வாழிடங்களைச் சுற்றியே உள்ளன.

பகிர்:

சுஜாதா மாலி

'மனிதர்களால் காகங்களுக்கு அச்சுறுத்தல் இல்லாததால், அவை மனித வாழிடங்களைச் சுற்றியே உள்ளன. நீத்தார் வழிபாட்டு தினங்களில் காகங்களுக்கு உணவளிப்பதால், அவர்களின் ஆசிகளைப் பெறலாம் என்பது நம்பிக்கை.

காகங்களுக்கும் மனிதர்களுக்கும் தொன்றுதொட்டு நிலவி வரும் இந்தப் புரிதலுக்குப் பின்னே அறிவியல் ரீதியான காரணங்களும் உள்ளன' என்கிறார் 'காகங்களின் நண்பர்' என்று அழைக்கப்படும் போடி வாசுதேவன்.

Advertisement

Advertisement

தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட போடி நாயக்கனூரைச் சேர்ந்த அவரிடம் பேசியபோது:

'விவசாய நிலங்களை அதிகம் கொண்ட கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவன் நான். இளம்வயதில் இருந்தே கூட்டமாக வரும் காகங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.

மலைகளுடன்கூடிய இயற்கை எழில் நிறைந்த எங்கள் ஊர், கேரள எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதிக்குள் பறவைகள் அதிகம்.

தாய்வழிப் பாட்டனார் வறுகடலை, அது சார்ந்த தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். இந்தத் தொழிலை பெரிய அளவில் நான் விரிவாக்கினேன்.

18 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு காலை நேரத்தில், வீட்டின் முன்பகுதியில் சில காகங்களைக் கண்டவுடன் கையிலிருந்த காராபூந்தியை அளித்தேன். ஒருசில நிமிடங்களில் அவை சாப்பிட்டுவிட்டன. அடுத்த நாளும் காராபூந்திகளை அளித்தேன். மூன்றாவது நாள் கடையில் இருந்து காராபூந்தியைக் கொண்டுவந்து வைத்தேன். சரியாக காலை 6 மணியளவில் ஏராளமான காகங்கள் வந்திருந்தன.

பின்னர் இது தொடர்ந்தது. நாளுக்கு நாள் காகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இன்று அறுநூறு காகங்கள் வரை காலை நேரத்தில் எங்கள் வீட்டில் வந்துவிடுகின்றன. பிறகு ஒருமணி நேரம் அவைகளுக்கானது. உணவை எடுத்தவுடன் பறந்து விடும். இவை சென்றவுடன் குயில்கள், புறாக்களும் கூட வருகின்றன. அவற்றிற்கும் தனியே தானியக் குருணைகளை அளிப்பேன்.

பூர்விக வீட்டில் வசித்த நான், பத்து ஆண்டுகளுக்கு முன்பு வீடு ஒன்றை அருகிலேயே கட்டினேன். குடியேறிய நாளன்று காலையிலேயே எல்லா காகங்களும் புது வீட்டுக்கு வந்தன. அவற்றின் வாழ்த்தொலியோடு நிகழ்ந்த விழாவை என்னால் மறக்கமுடியாது. இதற்குப் பிறகு அவற்றின் மீதான பிணைப்பு அதிகரித்துவிட்டது.

வியாபார விஷயங்களுக்காக வெளியூர்களில் தங்கும்போது எனது குடும்பத்தினர் காகங்களுக்கு உணவளித்து, அதை விடியோ எடுத்து எனக்கு அனுப்பியும் விடுவார்கள். அதைப் பார்த்தவுடன்தான் அடுத்த பணிகளில் மனம் ஈடுபடும்.

காகங்களுக்கு மட்டும் ஒருநாளைக்கு எட்டு கிலோ வரை காராபூந்தி செலவாகிறது. ஓமப்பொடி, மிக்சர்களை தவிர்த்து விடுவது வழக்கம். ஏனென்றால் அதை காகங்கள் அலகால் கொத்தி எடுப்பது சிரமம். எங்களது நிறுவன ஊழியர்கள் தினம்தோறும் காரமில்லாத காராபூந்திகளைத் தயாரித்து, வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.

இயல்பாக அன்னதானம் செய்வதில் விருப்பம் உண்டு. எனவே பல்லுயிர்களுக்கும் பசி போக்கிடும் இந்தப் பணியை இயற்கைக்குச் செய்யும் வழிபாடாக எண்ணுகிறேன்.

காகங்கள் விழிப்புணர்வு, புத்திசாலித்தனம் நிறைந்தவை என்பதால், மனிதர்களுடன் எளிதில் பழகி விடுகின்றன. தினமும் உணவு அளிப்பவரை நண்பன் எனக் கருதி, தன் சக பறவைகளுக்கும் சொல்லிவிடும். ஆபத்துக் காலங்களிலும் மற்ற இனங்களுக்கு உணர்த்திவிடும்.

தவறு செய்த காகத்துக்கு சக காகங்கள் தண்டனைஅளிப்பதோடு அதனை கூட்டத்திலிருந்து ஒதுக்கி வைத்து விடும். இதனால் தர்மத்தின் காவலர் சனிபகவானுக்கு உரிய பறவையாக இதனை போற்றுகிறோம். நீர்வரத்து, மழை, இயற்கைப் பேரிடர் போன்ற விஷயங்களைக் கூட காகங்கள் உணர்த்திவிடும் ' என்கிறார் வாசுதேவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments