FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புக்கர் குழுவில் இந்திய வம்சாவளிப் பெண்...

'இருபத்திரண்டு வயதில் கல்லூரி மாணவியாக இருந்தபோது, லண்டனில் சிறுவர் புத்தகக் கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன்.

பகிர்:

சக்ரவர்த்தி

'இருபத்திரண்டு வயதில் கல்லூரி மாணவியாக இருந்தபோது, லண்டனில் சிறுவர் புத்தகக் கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். பின்னர் அந்தக் கடையை ஏற்று நடத்த ஆரம்பித்தேன். கதை வாசிப்பில், கதைகளால் என் மனம் நிரம்பியபோது, ஒரு விசித்திரமான, சொல்லப்படாத உண்மையை நான் புரிந்துகொண்டேன்.

பழுப்பு நிறக் குழந்தைகள் சாகசம் செய்ய நினைப்பதில்லை என்பதுதான் அந்த உண்மை' என்கிறார், இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புத்தக விற்பனையாளரான சஞ்சிதா பாசு டி சர்க்கார். இவர் 'சிறுவர் புக்கர் பரிசு'க்கான நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார். 2026, ஏப்ரல் 28-இல் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

Advertisement

Advertisement

சஞ்சிதா, இங்கிலாந்தில் தெற்காசியச் சிறுவர் எழுத்தாளர்களையும் ஓவியர்களையும் ஊக்குவிக்கும் அமைப்பின் இணை நிறுவனராகவும் உள்ளார். மேலும், சிறுவர் இலக்கியத் தலைமை வழிகாட்டுதல் குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

1990-களில் வெம்ப்ளியில் வளர்ந்த, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சஞ்சிதா பாசு டி சர்க்கார், பிரிட்டிஷ் குழந்தைகள் இலக்கியத்தால் ஈர்க்கப்பட்டு ஆங்கிலத்தில் சரளமாக எழுதக் கற்றார். அவர் மேலும் சொல்வதாவது:

'தற்போது, லண்டனின் மஸ்வெல் ஹில்லில் உள்ள குழந்தைகளுக்கான புத்தகக் கடையின் உரிமையாளராக இருக்கிறேன். அடுத்த தலைமுறை சிறார்களைக் கவரும் விதத்தில் புத்தகக் கடையை மாற்ற உள்ளேன். இந்த புத்தகக் கடை, யு.கே.யில் தொடர்ந்து இயங்கிவரும் மிகப் பழமையான குழந்தைகள் புத்தகக் கடையாகும்.

'லண்டனின் மிகப் பழைமையான புத்தகக் கடையின் உரிமையாளர்' என்ற முறையில், 2024-இல் ராயல் சொசைட்டி ஆஃப் லிட்டரேச்சரில் கெளரவ உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். கோஸ்டா புத்தக விருது, பிரிட்டிஷ் புத்தக விருதுகள், டைம்ஸ்/சில்ட்ரன் ஹவுஸ் பரிசு போன்ற பல்வேறு விருதுகளுக்கு நடுவராகப் பணியாற்றியுள்ளேன்.

குழந்தைகள் இலக்கியத்தில் வேறுநாடுகளின் வம்சாவளியினர் பற்றிய புத்தகங்கள் அதிகம் வெளியாகின்றன. இனரீதி சிறுபான்மை சிறார்களின் கதாபாத்திரங்களைக் கொண்ட சிறுவர் புத்தகங்களின் விகிதம் கூடுவதும் குறைவதுமாக இருக்கிறது.

வெள்ளையர் அல்லாத இதர இனக் குழந்தைகளைச் சென்றடையும் கதைகள் பல மன அதிர்ச்சி, இடம்பெயர்வு தொடர்பாக அமைகின்றன. பழுப்பு நிறக் குழந்தைகளுக்கு நகைச்சுவையான சாகசம், ஆடை அலமாரி குறித்த புத்தகங்கள் தேவை.

குழந்தைகளும் இடம்பெறும் நடுவர் குழுவில் ஒரு நடுவராகப் பொறுப்பேற்றிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். குழந்தைகள் வாசிப்பதில் அதிக ஆர்வமும், தங்கள் கருத்துகளில் உறுதியும் கொண்ட வாசகர்களாகத் திகழ்கிறார்கள்.

நாங்கள் ஒன்றாக அமர்ந்து புத்தகங்களைப் பற்றி விவாதிக்கும்போதெல்லாம், குழந்தைகளிடமிருந்து புதிய கண்ணோட்டங்களைப் பெற்று வருகிறேன். எழுத்தாளர் ஃபிராங்க் காட்ரெல்-பாய்ஸ், நடிகை லோலி அடெஃபோப் ஆகியோருடன் இணைந்து, 8 முதல் 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கான சிறந்த சமகாலப் புனைகதைப்புத்தகத்தைத் தேர்ந்தெடுக்க உள்ளேன்' என்கிறார் 38 வயதாகும் சஞ்சிதா சர்க்கார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments