... புள்ளிகள்...
ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் மூன்று நாள்கள் கம்பன் விழா நிகழ்ச்சிகள் ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற கட்டணமில்லாமல் மண்டபத்தை அளித்தார் ஏவி.மெய்யப்ப செட்டியார்.
* ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் மூன்று நாள்கள் கம்பன் விழா நிகழ்ச்சிகள் ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற கட்டணமில்லாமல் மண்டபத்தை அளித்தார் ஏவி.மெய்யப்ப செட்டியார். விழாக்குழுவினர்கள் இதற்கு நன்றி தெரிவிக்கும்போது அவர், "இப்படிப்பட்ட உயர்ந்த இலக்கிய விழாவை நடத்த எங்கள் மண்டபத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது எங்களுக்கான கௌரவம். இதற்காக நாங்கள் அல்லவா நன்றி சொல்ல வேண்டும்'' என்று கூறுவார்.
("மனதில் நிற்கும் மனிதர்கள்' எனும் நூலில் இருந்து)
-த.சீ.பாலு, அத்திப்பட்டு.
Advertisement
Advertisement
* திருவையாற்றில் நடைபெறும் தியாகராஜ உற்சவத்தில் ஒரு மூத்த வித்வான் கச்சேரியை அனைத்திந்திய வானொலி நிலையம் தேசிய அளவில் ஒலிபரப்புவது வழக்கம். அந்த ஆண்டு செம்பை வைத்தியநாத பாகவதரின் கச்சேரிக்கு அந்த வாய்ப்பு வந்தது. செம்பை கச்சேரிக்கு மிருதங்கம் வாசித்தவர் பாலக்காடு மணி ஐயரின் மகன் ராஜாமணி. ரேடியோவுக்கான ஆடிஷன் தேர்வுக்குப் போகாதவர் ராஜாமணி. ஆகவே, ரேடியோ ஒலிபரப்பு விதிகளின்படி, அவர் பெயரை கச்சேரி அறிவிப்பில் சொல்ல முடியாது என்று அலுவலர்கள் கூறிவிட்டனர். உடனே செம்பை ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, 'சரி' என்று கூறிவிட்டார்.
கச்சேரி நடைபெற்றபோது, அமர்க்களமாகத் தனி ஆவர்த்தனம் வாசித்தார் ராஜாமணி. ஆவர்த்தனம் முடிந்தவுடன் செம்பை தனக்கே உரிய கொஞ்சும் தமிழில், "இப்போ மிருதங்கம் வாசிச்சது ஆராக்கும் தெரியுமோ? பாலக்காட்டு மணி ஐயர் பிள்ளையான ராஜாமணி. புலிக்குப் பிறந்தது பூனையாகுமோ?'' என்றார்.
இப்படி சமயோஜிதமாக தன் சொந்த அறிவிப்பின் மூலம் ரேடியோவின் விதிமுறைகளை மீறாமல் கலைஞருக்கு உரிய அங்கீகாரத்தைக் கிடைக்கச் செய்தவர் செம்பை.
-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.
* தாராபுரத்தில் பீமராய அக்ரஹாரம் முழுவதும் கன்னடம் பேசும் 'ராவ்' சமூகத்தினர் வாழ்ந்து வந்தனர். நாகேஷின் குடும்பம் மிக ஆசாரமான, கன்னடம் பேசும் பிராமணக் குடும்பம். நாகேஷை அவரது அக்கா கெங்குபாய் -தன்னை ஒரு தாயைப் போல பாசத்துடன் பார்த்துக் கொண்டதாக நாகேஷ் சொல்வார். பெற்றோர் வைத்த பெயர் நாகேஷ்வர ராவ். ஆனால், அவரை திரைத்துறை ரசிகர்கள் 'நாகேஷ்' என்று அன்பாக அழைத்தனர்.
* ஒருமுறை பாரதியாருக்கு விஸ்வநாத ஐயர் கடிதம் எழுதினார். அது ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்து வருத்தப்பட்டார் பாரதியார். அவர் அனுப்பிய பதிலில், "இனிமேல் நீ மடல் எழுதும்போது தமிழில் எழுது. அந்தத் தமிழ் ஒரு வேளை கொச்சையாக இருந்தாலும் பரவாயில்லை!'' என்றார்.
('சிந்திக்க சில நிமிடங்கள்' எனும் நூலில் இருந்து)
* காந்திக்கு 'மகாத்மா' பட்டத்தை ரவீந்திரநாத் தாகூரும், 'தேச பிதா' பட்டத்தை சுபாஷ் சந்திர போஸும் அளித்தனர். இதேபோல், தாகூருக்கு "குருதேவ்' பட்டத்தையும், சுபாஷ் சந்திரபோஸுக்கு 'நேதாஜி' பட்டத்தையும் காந்தி அளித்தார்.
-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.
* வ.ரா. எனும் பழம்பெரும் எழுத்தாளரை முன்மாதிரியாகக் கொண்டு ரா.கி., மு.வ., சொ.வி., ம.பொ.சி., லா.ச.ரா., ஆர்வி, ப.ரா., கு.ப.ரா., கு.மா.பா., கா.ஸ்ரீ.ஸ்ரீ., எஸ்.வி.வி., வை.மு.கோ., கி.வா.ஜ., க.நா.சு. என்று தொடர்கின்றன.
(மன்னர் மன்னன் எழுதிய 'பொன்னேடுகள்' எனும் நூலில் இருந்து)
-முக்கிமலை நஞ்சன்