முகப்பு
தினமணி கதிர்

புள்ளிகள்

தண்டி உப்பு சத்தியாகிரகத்துக்காக, மகாத்மா காந்தி 24 நாள்களில் 240 மைல்கள் நடைப்பயணம் மேற்கொண்டார்.

Updated On : 26 ஏப்ரல் 2026, 4:07 am IST
பகிர்:

தண்டி உப்பு சத்தியாகிரகத்துக்காக, மகாத்மா காந்தி 24 நாள்களில் 240 மைல்கள் நடைப்பயணம் மேற்கொண்டார். 78 தொண்டர்களுடன் புறப்பட்ட யாத்திரை முடிவடையும்போது, 2 மைல் நீளம் இருந்தது. 1930ஆம் ஆண்டு ஏப்ரல் 6அன்று காலை 6.30 மணிக்கு அவர் உப்பை கையில் அள்ளினார். அந்தக் கையளவு உப்பு 1,600 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.

நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.

ஸ்டார் கம்பெனி' என்ற கடையை நடத்திய டி.எஸ். சொக்கலிங்கத்துக்கும் பாரதியாருக்கும் நடந்த உரையாடல்.

Advertisement

Advertisement

தம்பி... எனக்கு ஒரு லட்சம் ரூபாய் வேண்டும்.'

எதற்காக?'

எனது கவிதைகளை அச்சிட்டுப் புத்தகமாகப் போட வேண்டும்.'

அதற்கு அவ்வளவு செலவாகுமா?'

உனக்குத் தெரியாது தம்பி... உலகத்திலேயே அமெரிக்காவில்தான் சிறந்த முறையில் நூல்களை அச்சிடுகின்றனர். ‘'

அப்படியே இருந்தாலும், அதற்கு ஒரு லட்சம் ரூபாய் வேண்டியிருக்குமோ?'

50 ஆயிரம் ரூபாய் அச்சுக்கூலி... இன்னும் 50 ஆயிரம் ரூபாய் சித்திரக்காரனுக்கு...'

சித்திரக்காரன் எதுக்கு?'

என் பாடல்களுக்கு சித்திரம் போட?'

இந்த உரையாடலை நினைவு கூர்ந்தே 1925இல் பிரசுரமான தமிழ்நாடு' பொங்கல் மலரில், பாரதியார் பாட்டுகள் சிலவற்றில் சித்திரங்களைப் போட்டு டி.எஸ்.சொக்கலிங்கம் வெளியிட்டார். அதற்குப் பின்னர் அந்த முறை வேகமாகப் பரவிவிட்டது.

(எனது முதல் சந்திப்பு' எனும் நூலில், டி.எஸ்.சொக்கலிங்கம் எழுதியிருந்தது)

த.சீ.பாலு, அத்திப்பட்டு.

பிரபல நடிகர் ஆர்.எஸ்.மனோகரின் இயற்பெயர் லட்சுமி நரசிம்மன். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. சம்ஸ்கிருதம் படித்த இவர், மிருச்ச கடிகா' எனும் சம்ஸ்கிருத மேடை நாடகத்தில் நடித்தார். நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் அந்த நாடகத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டினார்.

ராவணனாக ஆர்.எஸ்.மனோகர் நடித்த இலங்கேஸ்வரன்' எனும் மேடை நாடகத்தை தமிழ்நாட்டில் அரங்கேற்றினால் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி நஷ்டமாகிவிடும் என்று பயந்தார். ஆனாலும், இலங்கையில் 21 நாள்கள் தொடர்ந்து நடத்தினார். அவரது மேடை நாடகங்களில் 1,800 முறைக்கு மேல் அரங்கேறியது இதுதான்.

1954இல் நேஷனல் தியேட்டர்' எனும் நாடகக் கம்பெனியை அவர் தொடங்கினார். இவர் நடத்திய முதல் நாடகம் இன்பநாள்'. இரண்டாவது உலகம் சிரிக்கிறது' என்ற சமூக நாடகம். நாடகங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல், இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் மனோகர் நடித்துள்ளார்.

கேரளத்துக்கு உள்பட்ட கண்ணூர் மாவட்டத்தில் பிறந்த எம்.என்.நம்பியார் தனது எட்டாம் வயதில், தந்தையை இழந்தார். இதனால் அவர் தனது அண்ணன் வசித்து

வந்த உதகைக்கு இடம்பெயர்ந்து, அங்குள்ள நகராட்சிப் பள்ளியில் 8ஆம் வகுப்பு வரையில் படித்தார். தனது 13ஆம் வயதில் சென்னையில் நவாப் ராஜமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்தார். ராமதாஸ்' என்னும் நாடகமானது1935இல் பக்த ராமதாஸ்' என்ற பெயரில் திரைப்படமாகியபோது, மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்புக்காக நம்பியாரும் உடன் சென்றார். இந்தப் படத்தில் மாதண்ணா' எனும் நகைச்சுவை அமைச்சர் வேடத்தில் நடித்தார். இதுவே அவர் நடித்த முதல் திரைப்படம். இவருக்கு வழங்கப்பட்ட ஊதியம் நாற்பது ரூபாய்.

(பாஸ்கர்ராஜ் எழுதிய வல்லவர்கள் நல்லவர்கள்' எனும் நூலில் இருந்து)

எனக்கு சிறு வயதில் அம்மா செய்யும் வெள்ளைப் பணியாரமும், முறுக்கும் ரொம்பப் பிடிக்கும். அவ்வளவு ருசியாக இருக்கும். பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரிகளில் படித்தபோது, தேர்வுக்கு ஒரு மாதம் இருக்கும்போது பெரிய டின் நிறைய முறுக்குகளை என் அம்மா அனுப்பி வைப்பார். தேர்வு நெருங்கியவுடன் மாலை 6 மணிக்குப் படுத்துறங்கி, இரவு 11 மணிக்கு எழுந்து விடிய விடிய படிப்பதே என் வழக்கம். படிக்கும்போது முறுக்குகள் உதவியாக இருக்கும்.

வேலூர் சிறையில் இருந்தபோது என்னைப் பார்க்க வந்த என் அம்மாவிடம், அம்மா... பொதுவாக இப்போதெல்லாம் நேர்காணலின்போது நான் எதையும் வாங்குவதில்லை' என்றேன். அம்மா என்னிடம் பேசிவிட்டு 30 நிமிடங்களுக்குப் பின்னர் விடைபெற்றார். நான் குறுக்குச்சுவர் வரை சிறிய இடைவெளி வழியாக நடந்து அம்மாவின் கால்களில் விழுந்து ஆசி பெற்றேன். எழுந்து நின்று பார்த்தபோது, என் அம்மாவின் கண்களில் கண்ணீர் தளும்புவதைக் கண்டு எனக்கு மிகவும் வருத்தமானது. இரு அடிகள் நடந்து அந்தச் சிறிய வாயிலைக் கடந்துசென்றபோது, அம்மா என்ன நினைத்தாரோ, திரும்ப வந்து என்னைப் பார்த்தார். கைகளைக் காட்டி விடைபெற்றார்' என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருந்தார்.

(வைகோ எழுதிய சிறையில் விரிந்த மடல்கள்' எனும் நூலில் இருந்து)

1960, 70களில் கண்ணதாசன்' எனும் மாத இதழை கவிஞர் கண்ணதாசன் நடத்தினார். தற்போது இந்த இதழ்களை ஒவ்வொரு தனி நூலாக வெளியிட்டுள்ளார் அவருடைய மகன் காந்தி கண்ணதாசன்.

பாரத ஸ்டேட் வங்கியில் நான் பணிபுரிந்தபோது, கோவில்பட்டிக்கு நான் பணிமாறுதல் செய்யப்பட்டேன். இந்த ஊர் எனக்கு இலக்கியச் சோலையாக இருந்தது. அப்போது செம்மலர்' பத்திரிகையில் படித்த வேட்டி' எனும் ஒரேயொரு சிறுகதை என்னை மிகவும் பாதித்தது. இது அடியோடு சிறுகதை இலக்கணத்தை மாற்றுவதாகவும், எழுத்து எனும் ஈட்டியால் எத்தனை பாதாளம் வரை குத்த முடியும் என்பதைக் காட்டுவதாகவும் இருந்தது. இதில் என்ன விசேஷம் என்றால், அந்த வேட்டி' சிறுகதையை எழுதிய ஆசிரியர் கி.ராஜ

நாராயணன் பக்கத்தில் உள்ள இடைச்செவல் கிராமத்தில்தான் இருந்தார் என்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இதையறிந்து 16 கி.மீ. நடந்தே போய் அவரை இடைச்செவலில் சந்தித்தேன்' என்று பா.ராமமூர்த்தி (எஸ்.பி.ஐ வங்கியில் உயர் அதிகாரி) கூறியுள்ளார்.

(பா.ராமமூர்த்தி எழுதிய ஒரு எருதும் சில ஓநாய்களும்' எனும் நூலில் இருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.