FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

மகாத்மாவின் ஏக்கம் தீர்ந்தது!

லண்டனில் 1956-இல் உலகளாவிய பத்திரிகையாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக மகாத்மா காந்தியின் இளைய மகனான தேவதாஸ் காந்தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழின் ஆசிரியர் என்ற முறையில் அழைக்கப்பட்டிருந்தார்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 6:28 am IST
மகாத்மா காந்தி - கோப்புப் படம்
பகிர்:

லண்டனில் 1956-இல் உலகளாவிய பத்திரிகையாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக மகாத்மா காந்தியின் இளைய மகனான தேவதாஸ் காந்தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழின் ஆசிரியர் என்ற முறையில் அழைக்கப்பட்டிருந்தார். அவருடன் அவரது துணைவி லட்சுமி அம்மாள் (மூதறிஞர் ராஜாஜியின் மகள்) பயணிக்கத் தயாரானார்.

அவர்களுடன் மூத்த மகள் தாரா காந்தி (அப்போது வயது 22), மகன் ராஜ் மோகன் காந்தி (21), இளைய மகன் கோபால் கிருஷ்ண காந்தியும் (11) இணைந்து புறப்பட்டார்கள். ராமச்சந்திர காந்தி (19) மட்டும் பயணத்தில் பங்கேற்காமல் மும்பையில் வீட்டிலேயே தங்கிவிட்டார். அந்தப் பயணத்துக்கான அனைத்துச் செலவையும் தேவதாஸ் காந்தியே ஏற்றுக் கொண்டார். சேமிப்பு பணம் முழுவதும் அதற்குப் போதுமானதாக இருந்தது.

லண்டன் மாநகரின் அழகும், தோற்றமும், கம்பீரமும் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது என்று கோபால் காந்தி குறிப்பிடுகிறார்.

Advertisement

Advertisement

அப்போது இந்திய அரசின் தூதராக (ஹை கமிஷனர்) இருந்தவர் பிரதமர் பண்டித நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட். அவர் மகாத்மா காந்தி குடும்பத்தினரை ஒரு நாள் இரவு விருந்துக்கு அழைத்தார். சைவ உணவு மட்டுமே உண்பவர் காந்தி குடும்பத்தினர் என்பதை நன்கு உணர்ந்திருந்த அவர், சுவையான, பல வகையான உணவுப் பண்டங்களை உள்ளடக்கிய விருந்தளித்தார்.

உணவுடன் அவர், மகாத்மா காந்தி குடும்பத்தினர் மீது, குறிப்பாக தேவதாஸ் காந்தி-லட்சுமி அம்மாள் தம்பதி மீது ஆழ்ந்த பாசமும், உயர்ந்த மரியாதையும் கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்தியது. அத்துடன் வி.கே.கிருஷ்ண மேனன் தங்கியிருந்த இல்லத்துக்கே சென்று சந்தித்து உரையாடி மகிழ்ந்தார்கள். அத்துடன் லண்டனைச் சுற்றியுள்ள நகர்ப்புறங்களுக்கும் சென்றார்கள்; மக்களுடன் மகிழ்வுடன் உரையாடினார்கள்.

அதன் பிறகு, அங்கு நடைபெற்ற நிகழ்வை கோபால கிருஷ்ண காந்தி தனது நூல் "அணையா விளக்கு' (தி அன்டையிங் லைட்) என்ற நூலில் பின்வருமாறு விளக்குகிறார்:- பத்திரிகையாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டது அப்பா தேவதாஸ் காந்திக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது என்பது உண்மையே! ஆயினும், உள்மனத்தில் ஓர் ஏக்கம் இருந்தது! அது, ரோம் நகருக்குச் செல்ல வேண்டும்; போப் ஆண்டவரைப் பார்க்க வேண்டும்; அவரது ஆசியைப் பெற வேண்டும் என்பதே.

நாங்கள் ரோம் நகரைச் சென்றடைந்தோம். அப்போது புகழ்மிகு புனித பதினோறாம் போப் (1876-1958) எங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கினார். அப்பாவுக்கு ஒரே ஆனந்தம்! ஆனால், சிறுவனான எனக்கு அதன் முக்கியத்துவம் அப்போது முழுமையாகப் புரியவில்லை.

பிறகுதான் தெரிந்தது; 1931-இல் லண்டன் வட்ட மேஜை மாநாட்டில் என் தாத்தா மகாத்மா காந்தி கலந்து கொண்டார். இந்தியா திரும்பும்போது ரோம் நகரில் தங்கினார். அப்போதிருந்த புனிதத் திருமகன் பதினோறாம் போப்பை சந்திக்க நேரம் கேட்டார். ஆனால், ஏனோ நேரம் ஒதுக்கப்படவில்லை. தாத்தாவுக்கு (காந்திக்கு) கிடைக்காத வாய்ப்பு, தனக்காவது கிடைக்குமா? என்ற ஏக்கம், எதிர்பார்ப்பு என் தந்தை தேவதாஸ் காந்திக்கு!

என்ன வியப்பு! எங்களைச் சந்திக்க புனித பதினோறாம் போப் நேரம் ஒதுக்கிவிட்டார். அன்று அங்கு நிலவிய குளிரைவிட, குதூகலத்தில் மூழ்கி விட்டோம்! குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே நாங்கள் அரண்மனையை அடைந்து விட்டோம்!

வாட்டிகன் அரண்மனை என்பது புனித போப்பின் அலுவலகத்தையும், வசிக்கும் இடத்தையும் உள்ளடக்கியது. பளபளக்கும் சலவைக் கற்கள் பதிக்கப்பட்ட பளிங்கு மாளிகை அது; பரந்து விரிந்த விசாலமான அரங்குகள்; ஒன்றைவிட, ஒன்று விசாலமானது; பார்க்க, ரசிக்க கண்கள் கோடி வேண்டும்! அகிலத்தின் சொர்க்க பூமியே இதுதானோ என்று எண்ணி வியக்கத் தோன்றும்.

அழகுமிகு "சோபா'வில் நாங்கள் அமர்ந்தோம்! எங்களை அரைவட்ட வடிவத்தில் நிற்கச் சொன்னார்கள். சில நிமிஷங்களில் ஒரு மின்னல் போன்ற ஒளிக்கீற்று தோன்றியது. உற்றுப் பார்த்தால், புனித போப் பூப்போல் நகர்ந்து வந்து எங்களை அணுகுகிறார். அணிந்திருப்பதோ பளிச்சிடும் வெண்மையான அங்கி; வைத்த கண் மாறாமல் அந்த தேவதூதரைப் பார்க்கிறோம்.

தேவதாஸ், லட்சுமி, தாரா, ராஜ்மோகன் ஆகிய நால்வரும் இந்திய வழக்கப்படி, சிறிது குனிந்து இருகரம் கூப்பி வணங்குகிறார்கள். புனித போப் அவர்களோ, தானாகவே ஒவ்வொருவருடனும் கைகுலுக்குகிறார். கைகுலுக்கி மகிழும் பெருமை அவர்களுக்கு! சிறுவனான நான் குனிந்து வணங்கி, அவரது புனித பாதத்தைத் தொட முயன்றேன்.

அப்போது அவர் தனது வலது கையால், எனது இடது தோளைத் தட்டி, தலையிலும் கைவைத்து ஆசி வழங்கினார்! அடுத்த ஒரு விநாடியில் அவர் மெல்ல நகர்ந்து, தன் அறைக்குள் சென்றார். அந்தச் சந்திப்பு நேரம் குறைவு என்றாலும், அதில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் அன்பு, பரிவு பாசம் அரவணைப்பு, மனித நேயம் என்ற பண்புகள் பிரதிபலித்தன. இது எங்களுக்கு இறைவன் அளித்த வரம்!

ஆனால், 1931-ஆம் ஆண்டு தாத்தா மகாத்மா காந்தி லண்டன் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொண்டு இந்தியா திரும்பும் வழியில், ரோம் மாநகரில் அப்போதைய புனித பதினோறாம் போப் நேரம் ஒதுக்கவில்லையே என்ற எங்கள் ஏக்கம், குறை தீர்ந்துள்ளது!

ஆய்வு செய்து பார்த்தால், ஓர் உண்மை இந்த நிகழ்வின் மூலம் வெளிப்படும். அன்று நடந்தது அப்படி! இன்று நடப்பது இப்படி! காலம் மாறுகிறது- கணிப்பும் மாறுகிறது; நிகழ்வுகளும் மாறுகின்றன. நடப்பது அனைத்தும் நல்லதே! மகாத்மாவின் பொன்மொழி அது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments