அணையா தீபம் இந்திய ஜனநாயகம்
சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளிலேயே ஜாதி, மதம், மொழி, பிராந்தியம் ஆகிய வேறுபாடுகளால் இந்தியா சிதறுண்டு போகும் என்று கூறினார் வின்ஸ்டன் சர்ச்சில்.
சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளிலேயே ஜாதி, மதம், மொழி, பிராந்தியம் ஆகிய வேறுபாடுகளால் இந்தியா சிதறுண்டு போகும் என்று கூறினார் வின்ஸ்டன் சர்ச்சில்.
இந்தியாவில் மக்கள்தொகையோ அதிகரித்து வருகிறது; வளர்ச்சித் திட்டத்துக்கான வாய்ப்புகள் குறைவு. ஆகவே, மக்கள் பசி, பட்டினி, வறுமை, வேலையின்மையால் மடிந்து அழிந்து போவர்கள் என்று சில பொருளாதார மேதைகள் தெரிவித்தனர். அறிஞர்கள் எவரும் ஜனநாயகம் மலரும்- வளரும் என்று நம்பத் தயாராக இல்லை.
ஆனால், தன் மக்களை நம்பிய முதல் மனிதர் மகாத்மா காந்தி. மக்கள் மனதில் ஜனநாயக உணர்வு உறங்கிக் கிடைப்பதை உணர்ந்தவர் அவர். அந்த உணர்வுக்கு நீரூற்றி உரம் போட்டு வளரச் செய்துவிட்டு மறைந்து போனார் மகாத்மா என்ற பெயருடன்.
Advertisement
Advertisement
அவரது வாரிசு என்று உருவெடுத்த பண்டித ஜவாஹர்லால், அந்த ஜனநாயகச் செடியை வேலிபோட்டுக் காத்தார்! வளர்த்தார்! அந்தச் செடியில் மலர்ந்த மலரை தன் நெஞ்சில் ஏந்தி நின்றார். தான் வாழும் காலம் வரை ஜனநாயகத்தைக் காத்தார்.
1964-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீன்மூர்த்தி பவனில் அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, ஒரு நிருபர் பண்டித நேருவிடம் "காந்திஜிக்குப் பின்பு இந்த நாடு உங்கள் கையில் 17 ஆண்டுகள் இருந்தது. நீங்கள் இப்போது இந்தியாவுக்கு எதை விட்டுச் செல்லுகிறீர்கள்?' என்ற கேள்வியை எழுப்பினார்.
அதற்கு பண்டித நேரு, "எனது தேசத்தில் இன்று 60 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் கல்வி அறிவு இல்லாதவர்கள்; என்றாலும், அவர்கள் தெளிவான பொது அறிவு படைத்தவர்கள். எதுசரி, எது தவறு என்பதை அறியும் ஆற்றல் உள்ளவர்கள். அவர்கள் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கும் திறன் படைத்தவர்கள். அப்படிப்பட்ட 60 கோடி மக்களைத்தான் நான் விட்டுச் செல்லுகிறேன்' என்பதாகும்.
1964 மே மாதம் பண்டித நேரு மறைந்தார்; அரியணையில் அமர்ந்தார் சாஸ்திரி; "ஜெய் ஜவான், ஜெய் கிசான்' என்பது அவரது முழக்கம் மட்டுமல்ல, ஏர்முனையிலும், போர்முனையிலும் வெற்றிக் கொடி நாட்டினார் ! வியந்து பார்த்தது உலகம்!
அடுத்து ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தார் இந்திரா காந்தி. வங்கிகள் தேசிய மயம், மன்னர் மானிய ஒழிப்பு, 20 அம்சத் திட்டம் என்று பல புதிய திட்டங்களைச் செயல்படுத்தினார்.
ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக 1971-இல் அவர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது; அடுத்த 6 ஆண்டுகளுக்கு அரசு பதவி எதுவும் வகிக்கக் கூடாது என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் (12.06.1975) தீர்ப்பளித்தது. அது கேட்டு தேசம் திகைத்தது. தவிர்க்க முடியாத சூழலில் அவசர நிலைப் பிரகடனத்தை (25.06.1975) அறிவித்தார் இந்திரா காந்தி. முக்கிய தலைவர்கள் சிறைபடுத்தப்பட்டார்கள்; அடிப்படை உரிமைகள் பறிக்கப் பட்டன.
அத்தகைய சூழலில் "இந்தியாவில் ஜனநாயகம் முடிவுக்கு வந்து விட்டது: இனி தனி நபர் சர்வாதிகாரமே' என்ற குரல் ஓங்கி ஒலித்தது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் 21-03-1977 அவரே அவசரநிலைப் பிரகடனத்தை ரத்து செய்தார்; பொதுத் தேர்தலை அறிவித்தார். இந்திரா காந்தி தேர்தலில் தோற்றார். மொரார்ஜி தேசாய் பிரதமரானார். அவரைத் தொடர்ந்து சரண்சிங் சில காலம் பிரதமரானார். 1980 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆனார். ஜனநாயக ஆட்சி முறை உயிர்த்தெழுந்தது!
1984-இல் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பின்பு, ராஜீவ் காந்தி தொடங்கி மன்மோகன் சிங் காலம் வரை (2014 ஏப்ரல் மாதம் வரை) சுமார் 30 ஆண்டுகள்- 8 தலைவர்கள் பிரதமர் பதவி வகித்தனர். கட்சியும் ஆட்சியும் மாறின; ஆனால், ஜனநாயகம் தடம் புரளவில்லை!
குஜராத் மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடி 2014 மே மாதம் பிரதமராகப் பதவியேற்றார். ஆற்றல் மிகுந்த அவர், பல்வேறு திட்டங்கள் தீட்டினார்; தீவிரமாகச் செயல்படுத்தினார். அண்டை நாடுகள், வெளிநாடுகளுடன் உறவை வளர்த்தார்.
காந்தியவழிக்கு மாறுபட்ட சித்தாந்தம் கொண்ட அவர் ஆட்சியில் அமர்ந்தவுடன், இனி இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்காது என்ற குரல் எழுந்தது. ஆனால், என்ன அதிசயம்! தொடர்ந்து மூன்று முறை (2014, 2019, 2024) தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி நடத்திவருகிறார்!
இந்திய தேசத்தின் நிலை இதுவென்றால், தமிழகத்தின் வரலாற்றை ஆய்வு செய்து பாருங்கள்!
1947 முதல் 1967 வரை (20 ஆண்டுகள்) தமிழ் மக்கள் தேசபக்திக்கு மதிப்பளித்தனர்: தியாகிகள் ஆட்சி செய்ய அனுமதித்தனர்! அடுத்து பத்து ஆண்டுகள் (1967-1977) மொழி, பண்பாடு, கலாசாரத்தை முன்னிறுத்திய திராவிட இயக்கத்தின் கையில் அதிகாரத்தை மக்கள் கொடுத்தனர்.
தேசியமா, திராவிடமா என்பதை தள்ளி வைத்து தனிமனிதரை-எம்.ஜி.ஆர். என்ற திரை உலகின் உச்சத்தைத் தொட்ட நாயகனை மக்கள் உள்ளத்தையும் தொட்ட நாயகனை நம்பி ஆளும் பொறுப்பைக் கொடுத்தனர்.
அப்பெருமகனின் மறைவுக்குப் பின்பு கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு ஆளுமைகள் மாறி, மாறி ஆட்சி செய்தனர். அவர்களின் காலத்துக்குப் பிறகு, அவர்களின் அரசியல் வாரிசுகள் ஆட்சி நடத்த அனுமதித்தனர். இத்தகைய சூழலில் 2026 பொதுத் தேர்தல் வந்தது. ஜோசப் விஜய் வெற்றி பெற்றார்.
இந்திய ஜனநாயகம் இதுவரை தோற்கவில்லை? இனி என்றும் தோற்கவும் தோற்காது! இந்திய சுதந்திரம் என்பது ஓர் அணையா ஜோதி! அதில் ஜனநாயகம் என்றும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்; அது உலகுக்கே வழிகாட்டும்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.