FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

வேலைக்குச் செல்ல விருப்பமில்லை

இப்போது வகுப்பில் சேருகிற மாணவர்களில் சிலருக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை.

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 6:20 am IST
- சித்திரிப்பு
பகிர்:

தமிழகத்தில் இருக்கும் ஒரு பெரிய கல்லூரி குழுமத்தின் தலைமையில் இருக்கிற பெண்மணி ஒருவர். அவர்கள் கல்லூரியில் சில குறிப்பிட்ட பாடத்திட்டங்கள் அமைப்பது குறித்து கலந்து பேச அழைத்திருந்தார்.

பலவற்றைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, அவர் குறிப்பிட்ட ஒன்று என்னை வியப்பில் ஆழ்த்தியது. அது நான் எதிர்பாராதது.

இப்போது வகுப்பில் சேருகிற மாணவர்களில் சிலருக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை. வேலைக்குப் போக வேண்டும் என்கிற ஆர்வமில்லை. வேலை செய்ய அவர்கள் ஆயத்தமாக இல்லை என்று சொல்லி, அவற்றை அவர்களிடம் உருவாக்குவதற்கு நீங்கள் ஏதேனும் பயிற்சி கொடுக்க முடியுமா என்று கேட்டார். 

Advertisement

Advertisement

அவருக்கு நான் என்ன பதில் சொன்னேன் என்பதைத் தெரிவிப்பதற்கு முன்பாக, அவருடன் பேசி முடிந்த ஒரு வாரத்தில் எனக்கு ஏற்பட்ட அதே போன்ற மற்றுமொரு வியப்பைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத் தலைநகரான அட்லாண்டாவில் ஒரு மாநாட்டில் பேச என்னை அழைத்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு இரண்டு நாள்கள் முன்பாகவே நான் போய்விட்ட காரணத்தால் என்னைப் பேச அழைத்திருந்த தமிழர் ஒருவருடைய வீட்டில் நான் தங்கியிருந்தேன். அதே நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களாகக் கலந்து கொள்வதற்காக அவருடைய வேறு சில உறவினர்களும் அப்போது அந்த வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார்கள்.  

ஒரு பகல் நேரம், பெரிய தொலைக்காட்சி திரையில் ஓடிக்கொண்டிருந்த ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

சற்றுத் தள்ளி வேறொரு இருக்கையில் 10, 11 வயது ஆகும் ஒரு சிறுவனும் சிறுமியும் அமர்ந்திருந்தார்கள். அந்த வீட்டுக்காரரின் உறவினரான அவர்கள் அமெரிக்காவில் வேறு ஒரு மாகாணத்தில் பெற்றோருடன் வாழ்பவர்கள். 

"சார், எழுத்தாளர். அவரோட பேசுங்க' என்று அந்த வீட்டின் பெரியவர், அவர்கள் இருவரிடமும் சொன்னார்.

சம்மதம் என்பதுபோல முகத்தை நிமிர்த்தி என்னைப் பார்த்துவிட்டு உடன் தலை குனிந்து கொண்டுவிட்டான் அவன். சிறுமி எதுவும் சொல்லவில்லை.

ஓரிரு விநாடிகள் அமைதிக்குப் பிறகு தாத்தா என்னிடம் நெருங்கி வந்தார்.

"படிக்கப் பிடிக்கலைங்கிறாங்க. என்னன்னு கேளுங்க' என்றார்.

எனக்கு வியப்பாக இருந்தது. "அப்படியா?' என்று நான் அந்தப் பையனை பார்த்து கேட்க, "யா' என்று ஒற்றை ஆங்கிலச் சொல்லில் ஆமோதித்தான். 

"ஏன்? இப்போது படிக்காமல் வேறு என்ன செய்ய விரும்புகிறாய்?' என்று கேட்டேன்.

"ரிலாக்ஸ் பண்ண வேண்டும்', "ரிலாக்ஸ் செய்வதா? அப்படியென்றால்..?'

"ஜஸ்ட் ரிலாக்ஸ். சில் பண்ணுவது' என்றான். 

அடுத்து அந்தப் பெண்ணை பார்த்து. "நீ?' என்று கேட்டேன். அவளும் "யா' என்றாள். "அப்படியா? ரிலாக்úஸஷனில் என்ன செய்வீர்கள்?' என்று கேட்டேன். "சும்மா இருப்போம்.'

"எப்பவும் சும்மாவா?', "இல்லை' என்று சொல்லிவிட்டு, தொலைக்காட்சி பார்ப்பது, சாப்பிடுவது, தூங்குவது, நண்பர்களுடம் இருப்பது என்று எனது அடுத்த கேள்விக்கு விளக்கம் சொன்னாள் அவள்.

"மற்றபடி எதெல்லாம் செய்யப் பிடிக்காது?' என்று கேட்டேன் .

"வேலைக்குப் போவது' என்றாள்.

இப்போது அந்த பையனும், நிமிர்ந்து, "ஆம்' என்றான்.

"எவ்வளவு நாளைக்கு?' என்று கேட்டதற்கு இருவரும் ஒரே குரலில் "எப்போதும்' என்றார்கள்.

படிக்காமல் வாழ்வது சாத்தியமா? என்று அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டேன். சாத்தியம்தான் என்றார். அப்படி வாழ்பவர்கள் யாரையாவது உனக்குத் தெரியுமா? என்று கேட்டேன். காரணம், அவர்களுக்கு எங்கிருந்தோதான் இப்படி ஓர் எண்ணம் வந்திருக்க வேண்டும்.

என் யூகம் சரிதான். அவள் ஒருவருடைய பெயரைக் கூறினார். எனக்கு அந்தப் பெயர் புரிபடவில்லை. அதுவரை நான் கேட்டிராத பெயர் அது.

"அப்படியா! அந்த நபர் என்ன செய்கிறார்?' என்று கேட்டேன். அவர் ஒரு பாடகி என்றார். எப்படிப்பட்ட பாடகி? என்று கேட்டதற்கு, "மிகப் பிரபலமான பாடகி' என்றார் கண்கள் விரிய. 

அந்தப் பாடகியின் பெயரை மீண்டும் கேட்க, "யூன் சே' என்று பெயரின் "ஸ்பெல்லிங்' சொன்னார். குறித்துக் கொண்டேன். 

உடனடியாக இணையத்தில் அவர் குறித்து தேடினேன். அவர் ஒரு பாடகி. கொரியா நாட்டைச் சேர்ந்தவர். இன்ஸ்டாகிராமில் 60 லட்சம் நபர்கள் அவரைப் பின்தொடர்கின்றனர். 2007}ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு வயது 19 தான். அவர் உலகளாவிய பெண்கள் குழுவான கேட்ஸ்ஐ}யின் அங்கத்தினர் என்றும் தெரியவந்தது.

இன்ஸ்டாகிராம் மூலமாக மட்டுமே அவருக்கு மாதம் ஒன்றுக்கு இந்திய மதிப்பில் ரூ. 60 லட்சம் வருமானம் வரக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவர்தான் அந்த சிறுமியின் மீது தாக்கம் கொடுத்திருக்கிறார். "கே}பாப்' என்ற அந்த குறிப்பிட்ட வகை இசைப் பயிற்சி பெற்றிருக்கும் அவர், பள்ளிப் படிப்பு மட்டுமே படித்திருக்கிறார்.  கல்லூரியில் படிக்கவில்லை. 

அதுதான் நான் பேசிக் கொண்டிருந்த சிறுமியை ஈர்த்திருக்கிறது. "படிக்காமலே இவ்வளவு பிரபலமாக இருக்கிறாரே; சம்பாதிக்கிறாரே! அவரைப் போல நாமும் இருக்கலாம். படிக்க வேண்டாம்' என்று தோன்றியிருக்கிறது.

அந்த சிறுமிக்கு பிறகு பதில் சொல்லலாம் என்று முடிவு செய்துவிட்டு என்னை பார்த்துக் கொண்டிருந்த அந்த சிறுவனைப் பார்த்து, தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த கால்பந்து நிகழ்ச்சியைக் காட்டி, பார்ப்பது உண்டா? என்று கேட்டேன்.

"ஓ! பார்ப்பேன்' என்றான். "உனக்குப் பிடித்த விளையாட்டு வீரர் யார்?' என்று கேட்டேன். எதிர்பார்த்தது போலவே, ஆர்ஜென்டீனாவின் மெஸ்ஸி என்று சொன்னான். அவசரமாக இணையத்தில் அந்த கால்பந்து வீரரின் படிப்பு என்ன என்று தேடினேன் தற்செயலாக. அவரும் பள்ளிப் படிப்புடன் சரி. மேலே படிக்கவில்லை.

ஆக, அதிகம் படிக்காத ஒரு பாடகியும் ஒரு கால்பந்து வீரரும் அவர்கள் மனதில் மகிழ்ச்சியாக வாழ்கிறவர்களாகத் தெரிகிறார்கள். அதனால் படிப்பு அவ்வளவு அவசியமில்லை என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். படிக்காமலே பாடலாம், ஆடலாம்; பிரபலமாக இருக்கலாம்; சம்பாதிக்கலாம் என்று அதைச் சுருக்கி விட்டார்கள். படிக்கச் சொல்லி பெற்றோரும் தாத்தாவும் கட்டாயப்படுத்தும் போது, அவர்கள் மனதில் இந்த எண்ணம் வருகிறது.

பிறகு, அந்தப் பாடகி குறித்தும், கால்பந்து வீரர் குறித்தும் அவர்களிடம் சில கேள்விகள் கேட்டேன். அவர்கள் புகழ் பெற்றவர்களாக இருப்பதும், நல்ல அளவில் பணம் சம்பாதிப்பதும் என்ன காரணத்தால் என்று கேட்டு, அவர்களிடம் இருக்கிற தனித்திறமைகள்தான் என்ற பதிலை அவர்கள் வாயிலிருந்து வரவழைத்தேன்.

கல்லூரி படிப்புதான் அவர்கள் படிக்கவில்லையே தவிர, பாடகி ஆவதற்கும் சிறந்த விளையாட்டு வீரர் ஆவதற்கும் அவர்களது திறமையை எவ்வாறு பல ஆண்டுகள் பயிற்சி செய்து அவர்கள் பெற்றார்கள் என்பதை மென்மையாக எடுத்துச் சொன்னேன்; புரிந்து கொண்டார்கள்.

தனித்திறமை இருப்பவர்கள் நிச்சயமாக அந்த திறமையை வளர்த்துக் கொள்ளலாம். அதற்காக உழைக்க வேண்டும். அவர்கள்கூட சும்மா சாப்பிட்டுக் கொண்டும், தூங்கிக் கொண்டும் பொழுது போக்கிக் கொண்டும் இருக்க முடியாது என்பதை அந்தச் சிறிய உரையாடல் முடிவில் அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்பதை அவர்கள் அடுத்தடுத்து கேட்ட கேள்விகளும் அவர்கள் முகபாவமும் காட்டின.

மீண்டும் என்னை சென்னையில் சந்தித்து ஆலோசனை கேட்ட அந்தக் கல்லூரி  குழுமத் தலைவரின் கேள்விக்கு வரலாம்.

இப்போதைய பிள்ளைகளில் சிலருக்கு அல்லது பலருக்கு படிக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசைகள் இல்லை என்பது உண்மைதான். அது இங்கே மட்டும் இல்லை; உலகம் முழுவதும் இருக்கிறது. (அமெரிக்காவில் குழந்தைகளைச் சந்திப்பதற்கு முன்பாகவே நான் இதை அவர்களிடம் சொல்லியிருக்கிறேன்).

தற்போதைய இளைஞர்களில் சிலர் அல்லது பலருக்கு இப்படிப்பட்ட ஒரு வேலை படிப்பு மீதான சலிப்பு என்பது இருக்கிறது, அவை இல்லாமலேயே வாழலாம் என்று நினைக்கிறார்கள். "அவ்வப்போதைய தேவைகளுக்காக ஓலா, உபர் போன்ற வாகனங்கள் ஓட்டி சம்பாதித்துக் கொள்ளலாம். "ஸ்விகி', "ùஸôமட்டோ' போன்ற நிறுவனங்களில் ஒரு நாளைக்கு சில மணி நேரங்கள் வேலை செய்து கிடைக்கிற பணத்தில் அன்றாடத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளலாம். அப்படியே வாழ்க்கையை "ஓட்டலாம்' என்று நினைக்கிறார்கள்.

ஒரு நீண்டகால வாழ்க்கைக்கான ஆயத்தமாகிற திறன் வளர்க்கும் மனநிலை, அதற்கான பொறுமை, அதற்குக் கொடுக்க வேண்டிய உழைப்பை கொடுக்கிற மனப்போக்கு இளைஞர்கள் பலரிடம் குறைவாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு பெரும் போக்கை (மெகா ட்ரென்ட்) நாம் எதிர்த்து அவர்களை மாற்ற வேண்டுமென்றால், அதற்கு, ஒரு மணி நேர உரை அல்லது ஒரு நாள் பயிற்சி போன்றவை போதாது.

பலவற்றையும் உள்ளடக்கிய (காம்ப்ரிஹென்சிவ்) பெருந்திட்டம் தேவை.

உங்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினர்கள் ஆகியோரின் பேச்சுகள், வந்து சந்திக்கிற வகுப்பெடுக்கும் ஆளுமைகள் எனப் பலவும் இவற்றை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பது போன்ற சில ஆலோசனைகளைக் கூறினேன்.

அதன் பிறகும், "ஏன் இப்படி?' என்ற வியப்பு தொடரவே செய்கிறது. ஆமாம், ஏன் இப்படி?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments