FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கேளீர் தமிழ் வரலாறு - 5: மகாத்மாவின் தமிழுக்கு ஆசிரியர்

'பழந்தமிழும் புதுத்தமிழும் தரமாய்க் கற்ற கந்தசாமிப் பிள்ளை' எனவும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் பாராட்டப்பட்டவர் நீ.

12 செப்டம்பர் 2026, 7:54 pm IST
- manikandan Y
பகிர்:

'எந்த சாமிப்பிள்ளையையும் விட ஈடு இணையற்ற ஒருவன்' எனவும், 'தூய்தமிழ்த்தாய் தந்த சாமி தலைச்சாமி' எனவும், 'பழந்தமிழும் புதுத்தமிழும் தரமாய்க் கற்ற கந்தசாமிப் பிள்ளை' எனவும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் பாராட்டப்பட்டவர் நீ. கந்தசாமிப் பிள்ளை. தஞ்சை தந்த பேரறிஞர்.

தாம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்காக 1964-இல் பதிப்பித்த திருவாசக நூலின் முன்னுரையில் ஓர் அரிய செய்தியை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

இலண்டனிலிருந்து ஒரு கடிதம் 1894 வாக்கில் மயிலை மாமுனிவருக்கு வந்திருந்ததாம்.

Advertisement

Advertisement

யார் அந்த மயிலை மாமுனிவர்?

நீ.கந்தசாமிப் பிள்ளை மட்டுமல்ல, திரு.வி.க.வும் மயிலை மாமுனிவர் என்றுதான் அவரை அழைப்பார்!

அவர் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகத் திகழ்ந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியை வகித்த முதல் இந்தியர்; தமிழர். அமெரிக்க அதிபர் வில்சனுக்கே ஆங்கிலேயராட்சி மீதான அதிருப்திக் கடிதத்தை இரகசியமாக அனுப்பிவைத்து, அதன் பொருட்டு அரசப் பிரதிநிதியால் அழைத்து எச்சரிக்கப்பட்டவர்; எதிர்கொண்டவர். அவர்தான், 'சர்' பட்டத்தைத் துறந்த எஸ். சுப்பிரமணிய ஐயர்.

இதையெல்லாம் தாண்டித் தமிழுலகத்தாலும், திராவிட இயக்கத்தாராலும் போற்றப்படவேண்டிய பேரிடமும் அவருக்குண்டு. திருக்குறள் குறித்த பகுதியின்போது அதனைக் காண்போம். ஆனால், இன்று ஏறத்தாழ யாருக்குமே அவரைத் தெரியாது என்பதே நிலைமை.

யாரிடமிருந்து கடிதம் வந்திருந்தது?

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே நம்மை ஆண்ட இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத் தமிழ் அரியணையில் வீற்றிருந்த ஜி.யு.போப் என்னும் ஜார்ஜ் உக்ளோ போப்பிடமிருந்து வந்திருந்தது. தமிழோடு தெலுங்கிற்கும் சேர்த்துத்தான் அவர் விரிவுரையாளர். எனினும் தமிழ்தான் ஆக்ஸ்போர்டுக்கும் அவருக்கும் முதன்மை! நாலடியார், திருவாசகம் எனத் தமிழ்ப்பேரிலக்கியங்களைத்தான் அவர் மொழிபெயர்த்து ஆக்ஸ்போர்டு வழி உலகளாவிய வெளியீடுகளாக்கினார். தான் எப்போது இறக்க நேரினும் தனது நினைவுச் சின்னத்தில் 'ஒரு தமிழ் மாணவன்' எனத் தன்னைக் குறித்துப் பொறிக்கப்படவேண்டும் என்றே அவர் விரும்பினார்.

கடிதத்தில் அப்படி என்ன தனிச்சிறப்பு?

கடிதத்தின் மேற்பகுதி நீரால் நனைந்து எழுத்துகள் கலைந்திருந்தன.

அதற்கான காரணத்தைப் போப் மடலின் கீழே எழுதியிருந்தார்.

'சில காலமாக எழுதும் கடிதங்களில் திருவாசகத்தின் ஒருதொடரைத் தலைப்பில் எழுதிப் பிறகுதான் மற்றவற்றை எழுதுவேன். அவ்வாறு எழுதிவிட்டுத் தொடர்ந்து எழுதும்போது திருவாசகப் பொன்மொழி என்னை அறியாமலே கண்ணீர் பெருகச் செய்திருக்கிறது. பெருகிய கண்ணீரால் எழுத்துகள் நனைந்து கலைந்துவிட்டன. இக்கடிதத்தைப் புறக்கணிக்க மனம் வரவில்லை. திருவாசகத்தால் எழுந்த கண்ணீரும் போற்றத்தக்கது என்ற எண்ணத்தால் இக்கடிதத்தை அப்படியே அனுப்பியுள்ளேன். மன்னிக்க!' எனப் போப் எழுதியிருந்தாராம். 'திருவாசகத் தொடரால் எழுந்த கண்ணீரும் திருவாசகத் தெய்வம் என்றே எண்ணினார் போப்பையர்' என எழுதியிருக்கின்றார் நீ. கந்தசாமிப் பிள்ளை.

திருவாசகத்திற்கு உருகிய ஆங்கிலேயப் போப்பின் உள்ளத்தை எப்படிச் சொல்லலாம்? தமிழ்த்திருவுள்ளம்; தமிழ்ப் பேருள்ளம்!

போப்பின் திருவாசக மொழிபெயர்ப்பால், சைவ சித்தாந்தம் பற்றி அவர் எழுதியதால் உலக அரங்கில் தமிழ், சைவ சமயம், சைவ சித்தாந்தம் மிகப்பெருங் கவனத்தைப் பெற்றது. நம்மவரிடத்திலும்தான்!

இந்தப் பெருஞ்சாதனையின் விளைவாகத்தான் சைவப் பேரறிஞர் ஜே.எம். நல்லசாமிப் பிள்ளை, போப் மறைந்தபோது தமது 'சித்தாந்த தீபிகை' (1908 பிப்பிரவரி) ஆங்கில இதழில் இப்படி எழுதினார்:

'போப்பின் பண்புகளும் வாழ்க்கையும் புனிதத்தன்மை வாய்ந்தனவாகத் திகழ்ந்தன. ஒரு மூத்த பண்டிதர் குறிப்பிட்டதைப் போல, அவர் முற்காலத்தில் பிறந்திருந்தால் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரிசையில் மேலுமொருவராகக் கணிக்கப்பட்டிருப்பார். சைவ சமயத்தின் முக்கியத்துவத்தை ஆங்கிலம் பேசும் உலகில் வெளிச்சம் பெறச் செய்த முதல்வர் அவர்தான்!'.

'ஆங்கிலேயப் பெண்களின் உதடுகள் உச்சரிக்க ஏற்ற, ஆங்கிலேயப் பெண்களின் காதுகளுக்கு இசைந்த தாய்மொழி தவிர்ந்த பிறிதொரு மொழி என்று எதைச் சொல்லலாம்?

தமிழ்! தமிழ்! தமிழ்!'

இப்படிச் சொன்னவர் ஜி.யு. போப். 1906-ஆம் ஆண்டு இலண்டன் இராயல் ஏசியாட்டிக் சபையில் இதைச் சொன்னார்.

தாம் ஆங்கிலேயப் பெண்கள் பலருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்திருப்பதாகவும், பலரும் பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலிய மொழிகளைக் கற்கச் சென்று இடர்ப்படுவதாகவும், அதற்குச் செலவிடப்படும் நேரத்தைத் தமிழ் கற்கப் பயன்படுத்துவது சிறப்பாகும் எனவும் பேசியிருந்தார்.

போப்பின் இலண்டன் பேச்சை மேற்கோள் காட்டிச் 'சுதேசமித்திரன்' நாளிதழ் 'தமிழ்ப் பாஷையின் இனிமை' என்னும் கட்டுரையை வெளியிட்டிருந்தது. பாரதியார் அந்தக் கட்டுரையை 'இந்தியா' ( 4-8-1906) இதழில் எடுத்து வெளியிட்டதோடு, 'தென்றலுடன் பிறந்த பாஷை' என்றொரு கட்டுரையையும் எழுதியிருந்தார். அதில் போப்பின் பேச்சை எடுத்துக்காட்டியிருந்தார்.

தமிழின் இனிமையை உலக அரங்கில் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார் போப்.

'நீங்கள் இளைஞர்; நான் கிழவன்!' என்று ஒருமுறை உ.வே. சாமிநாதய்யருக்கு எழுதிய கடிதத்தில் போப் குறிப்பிட்டிருந்தார். இருவருமே தொண்டு கிழவர்களாகும்வரை தமிழ்த் தொண்டை ஆற்றிக்கொண்டுதான் இருந்தார்கள்! போப் தமது பதினேழாம் வயதில் தமிழ் படிக்கத் தொடங்கியதாக எண்பதாம் வயதில் திருவாசக மொழிபெயர்ப்பு முன்னுரையில் குறிப்பிட்டிருக்கின்றார். எண்பத்தெட்டாம் வயதில் போப் மறைந்தார். போப்பைவிட உ.வே.சா. முப்பத்தைந்து வயது இளையவர். தனது பதினான்காம் வயதில் உ.வே.சா. செங்கணம் விருத்தாசல ரெட்டியாரிடம் யாப்பருங்கலக் காரிகை படித்தார். பதினாறாம் வயதில் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் படிக்கத் தொடங்கினார். எண்பத்தேழாம் வயதில் உ.வே.சா. மறைகின்றார். ஏறத்தாழ இருவரும் சமமான ஆயுட்காலம் வாழ்ந்திருக்கின்றனர்.

1857-ஆம் ஆண்டில் போப் தமிழ் இலக்கணங்கள் சிலவற்றின் மூலநூற்பகுதிகளையும் வினா விடைப் பகுதிகளையும் கொண்ட பெரிய நூலொன்றை வெளியிட்டிருந்தார். 'தமிழ் இலக்கியங்களில் பிரதானமானவை எவை?' என்பது அந் நூலில்இடம்பெற்ற கேள்விகளுள் ஒன்று.

அதற்கான விடையைப் போப் இப்படி அளித்திருந்தார்:

'திருவள்ளுவர் குறள், நாலடி நானூறு, சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், அவ்வை செய்த பாடல், கம்பன் இராமாயணம், அதிவீர ராம பாண்டியன் பாடிய நைடதம் முதலியவைகளே.'

சற்றே எண்ணிப் பாருங்கள்! போப்பின் பதிலில் தமிழின் பிரதானமான இலக்கியங்களுள் எட்டுத் தொகை, பத்துப்பாட்டு என்னும் சங்க இலக்கியங்கள் இடம்பெறவில்லை என்பதை! ஆம் 1857 - இல் சங்க இலக்கியங்கள் நூல்வடிவம் பெற்று வெளிவரவில்லை. அதுதான் காரணம்.

நிலைமை மாறுகிறது. உ.வே.சா. பதிப்பித்து வெளியிட்ட புறநானூற்றில் திளைக்கிறார் போப்! 1896 சனவரி மூன்றாம் தேதி எழுதிய கடிதத்தில் 'தங்கள் அற்புதமான பதிப்புகளாகிய புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை என்னும் இரண்டையும் எளிதிற் படித்து இன்புற்று வருகிறேன். அவ்விரண்டும் ஒன்றையொன்றுஅழகாக விளக்குகின்றன' என எழுதியிருந்தார்.

உடனடியாக இரண்டின் பாடல்களையும் மொழிபெயர்க்கத் தொடங்கிவிடுகிறார் போப். தனது முன்னோடியான புறநானூற்றுப் பாடல் மொழிபெயர்ப்புகளால் சங்க இலக்கியப் பெருமையை உலகுக்கு உணர்த்தவும் தொடங்கிவிடுகிறார்.

'என் சரித்திரம்' என்பது உ.வே.சா.வின் சுயசரிதை நூல். அதில் போப் எழுதிய தமிழ் இலக்கண நூல் பற்றி உ.வே.சா. 'தமிழில் சிறுவர்களுக்குப் பயன்படும் வண்ணம் சிற்றிலக்கணம் ஒன்று எழுதியிருக்கிறார். போப்பையர் இலக்கணம் என்ற பெயரோடு தமிழ்நாட்டில் அது வழங்கியது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

தஞ்சையில் சில ஆண்டுகள் முன்புவரை வாழ்ந்த பேரறிஞர், சேக்கிழார் அடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன்.அவர் நீ. கந்தசாமிப் பிள்ளையோடும் பழகியவர். அவரைவிட இளையவர். தஞ்சாவூருக்குச் செல்லும் அறிஞர்களும் அயல்நாட்டவரும் மூன்று இடங்களுக்குக் கட்டாயம் செல்வது வழக்கம். ஒன்று, பெரிய கோயில். இரண்டாவது சரசுவதி மகால் நூலகம். மூன்றாவது சேக்கிழார் அடிப்பொடி

தி.ந. இரா.வின் இல்லம். பல்லாயிரம் அரிய நூல்களைத் தன் வீட்டில் சேகரித்தும் வைத்திருந்த பெருமகன்.

போப்பையர் இலக்கணம் உலகளாவிய பயன்பாடும் பெருமையும் கொண்டது என்பதற்கான சாட்சியங்களைத் தன் நூலகத்தில் வைத்திருந்தார் சேக்கிழார் அடிப்பொடி.

அதை இப்படி எழுதியுமிருக்கின்றார்:

'நாங்கள் மாணவர்களாக இருந்த காலத்தில் எங்கள் கரங்களில் திகழ்ந்த இலக்கணநூல்கள் போப்பையரின் இலக்கண நூல்களே என்று திரு.வி.க. அவர்கள் கூறியதை நினைவிற் கொள்வோம். போப்பையரின் இலக்கண நூல்கள் இலட்சக்கணக்கில் வெளிவந்து ஐந்து கண்டங்களையும் வளைய வந்தன. இதற்கான ஆதாரம் எம்மிடம் இருக்கிறது!'

மேலும் மகாத்மாவின் கூற்றையும் அவர் மேற்கோள் காட்டியிருந்தார்.

ஆம். நம் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது தம் டால்ஸ்டாய் பண்ணையில் தமிழ்ப்பிள்ளைகளுக்குத் தமிழ் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொடுத்திருக்கிறார்.இதைப்பற்றிக் காந்தியடிகள் 'சத்திய சோதனை' நூலில் 'தமிழும் உருதும் சொல்லிக்கொடுப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். போப் என்பவர் எழுதிய சிறந்த தமிழ்ப் பாடப் புத்தகத்தைத் தவிர வேறொன்றையும் நான் படித்ததில்லை' என எழுதியிருக்கின்றார். மகாத்மாவிற்கே தமிழ் சொல்லிக் கொடுத்த ஆசிரியராகப் போப் எழுதிய நூல்தான் திகழ்ந்திருக்கிறது.

தமிழ் வரலாற்றில் ஜி.யு. போப் -

திருக்குறள், நாலடியார், திருவாசகம், புறநானூற்றுப் பாடல்கள் முதலிய மொழிபெயர்ப்புகள், உலக அளவில் தமிழ் கற்க உதவும் தலைசிறந்த இலக்கணப் பாட நூல்கள், தாமே ஆக்ஸ்போர்டில் தமிழ் கற்பித்தமை என எண்ணற்ற செயல்பாடுகளால் தமிழை உலகத் தமிழாக்கிய மாபெரும் முன்னோடி!

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments